2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை எதிர் ஆஸி - ஒ.நா.ச.போ தொடர் மீள் பார்வை

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இலங்கை அணி டெஸ்ட் தொடர் வெற்றியினை அபாரமாக பெற்றதன் பின்னர் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பமானது. இந்த எதிர்பார்ப்பு உண்மையில் ஆர்வக்கோளாறு என்றே கூறலாம். இரசிகர்களாக இந்த ஆர்வக் கோளாறு இல்லாமல் போகுமா என்ன? டெஸ்டில் அவுஸ்திரேலியா அணியையே வீழ்த்தியாச்சு. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் அவ்வளவு கஷ்டமா என்ன? உலக கிரிக்கெட் ஜாம்பவான்களை வீழ்த்தி விட்டோம் என்ற மமதை வராமல் போகுமா? இவை ரசிகர்கள் பக்கமாக இருக்கும் ஒன்று. என்னதான் டெஸ்ட் போட்டிகளில் வென்றாலும் அதிக விறு விறுப்பை வழங்குவது ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் தானே. எனவே எதிர்பார்ப்பு அதிகமாகி போய் விட்டது.

அவுஸ்திரேலியா அணி உலக சம்பியன்கள். அதிரடி வீரர்கள் குவிந்து போயுள்ள அணி. அதிலும் பந்துவீச்சு மிகச் சிறப்பாக உள்ள அணி. அவர்களை எதிர்கொள்வதும் வெற்றி கொள்வதும் அவ்வளவு இலகுவானது அல்ல. இலங்கை அணியின் தெரிவு மோசமாக அமைந்தது என்பதே தோல்விகளுக்கு காரணமாக அமைந்து போனது. பந்துவீச்சு பக்கமாக சுழற் பந்து வீச்சாளர்கள் புதியவர்கள் சிறப்பாக கை கொடுத்த போதும் வேகப்பந்து வீச்சு பிரச்சினையாகவே உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ரங்கன ஹேரத் சிறப்பாக கை கொடுத்தார்.  அதனால் வெற்றிகள் இலகுவாக கிடைத்தன. ஆனால் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சுழற் பந்து வீச்சாளர்கள் கை கொடுத்த போதும் துடுப்பாட்டம் மோசமாகவே அமைந்தது. தொடர்ச்சியான வீரர்களின் மாற்றங்கள், துடுப்பாட்ட இட மாற்றங்கள் என்பன இலங்கை அணிக்கு பின்னடைவை தந்தன.

இலங்கை அணி தோல்விகளை சந்தித்த முதல் இரு போட்டிகளும் இறுக்கமான போட்டிகள். இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற்று இருக்க வேண்டிய போட்டிகள். நெருக்கமான வெற்றியையே அவுஸ்திரேலிய அணி பெற்றுக் கொண்டது. அந்த இரு போட்டிகளிலுமே ஓட்டங்கள் போதவில்லை என்பது மாத்திரமே தோல்விக்கான காரணங்கள். வெற்றி பெற்ற போட்டியில் ஓட்டங்கள் அதிகமாக பெறப்பட்டன. ஒரு போட்டியில் மாத்திரமே 250 ஓட்டங்களை இலங்கை அணி தாண்டி இருந்தது. அதில் வெற்றி. ஆக சொந்த மைதானங்களில், துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானங்களில் 250 ஓட்டங்களை தானும் பெற முடியவில்லை என்றால் துடுப்பாட்டம் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியுள்ளது.

புதிய வீரர்களை விட்டாலும் துடுப்பாட்ட வரிசையில் டில்ஷான், சந்திமால், மத்தியூஸ், குஷால் பெரேரா ஆகியோர் இருந்தும் ஓட்டங்களை பெற முடியாமல் போனது இவர்கள் தொடர்பாகவும், துடுப்பாட்டம் தொடர்பாகவும் யோசிக்க வேண்டியுள்ளது. தினேஷ் சந்திமால் சிறப்பாக செயற்பட்டுள்ளார். துடுப்பாட்டம் சீராக இல்லாத பட்சத்தில் வெற்றி பெறுவது கஷ்டமே. இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கைகள் 227, 228, 226, 212, 195 என்ற படியுள்ளது. ஆக இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை வெறுமனே 220 ஓட்டங்களை அண்மித்த ஓட்டங்களை பெறக்கூடியுள்ள நிலையிலேயே உள்ளது. மற்றைய அணிகள் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டங்களை அடித்து குவித்து சாதனைகளை பெறும் நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் அவ்வாறு அமைந்துள்ளது. மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் கூடுதலான ஓட்டங்களை பெற்ற அணி என்ற சாதனை இருந்த போதும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இந்த சாதனை நழுவிப் போய் விட்டது. ஆக இலங்கை அணி எந்தளவு துடுப்பாட்ட பலமான அணியாக இருந்தது என்பதும் இப்போது என்ன நிலையில் உளள்து எனபதும் தெளிவாக தெரிகின்றது. இவற்றை வைத்து பார்க்கும் போது அவுஸ்திரேலியா அணி வெற்றி பெறவில்லை. இலங்கை அணி தோல்வியை சந்தித்தது என்றே கூற வேண்டும். 

இலங்கை அணி ஐந்து போட்டிகளில் நான்கு ஆரம்ப ஜோடிகளை களமிறக்கியது. டில்ஷானின் ஓய்வை எடுத்துக் கொண்டால் இரண்டு ஜோடிகள் என்பது ஏற்றுக்கொள்ள கூடியது. குசல் பெரேரா இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நம்பிக்கையான வீரராக உறுதியான இடமாக அவரின் இடம் இருந்தது. இப்போது மத்திய வரிசைக்கு மாற்றப்பட்டு விட்டார். இவரின் போர்ம் குறைந்து இருந்தாலும் அவரின் இந்த இடம் மாற்றம் தேவைதானா? பின் வரிசையில் அரைச்சத்தை பெற்றுக் கொடுத்தார். ஆனால் அது வெற்றிக்கு உதவவில்லை.

தனுஷ்க குணதிலக அண்மைக்காலத்தில் இலங்கை அணியின் நிரந்தர ஆரம்ப துடுப்பாட்ட வீரர். டில்ஷான் மீண்டும் அணிக்குள் வந்தமையினால் அவருக்கு இடம் வழங்கினர். இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் அவருக்கு இடம் வழங்கப்பட்டது. நான்காவது போட்டியில் அவிஷ்க பெர்ணான்டோ அறிமுகத்தை ஓட்டம் எதுவுமில்லாமல் மேற்கொண்டார். அடுத்த போட்டியில் அணியில் இல்லை. மீண்டும் தனுஷ்க குணதிலக அணியில் சேர்க்கப்பட்டார். அணியால் நீக்கப்பட்ட வீரருக்கு மீண்டும் வாய்ப்பு. அறிமுகத்தை மேற்கொண்ட வீரருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இல்லை. ஆரம்ப இடத்தில் தனஞ்சய டி சில்வா வாய்பபை தனதாக்கி இருக்கின்றார் என நம்பலாம். அவர் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர். அவருக்கு இடம் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பில் ஓட்டங்களை பெற்று அந்த இடத்தை பெற்றுள்ளார். நான்காவது போட்டியில் 76 ஓட்டங்களையும், ஐந்தாவது போட்டியில் 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

உள்ளூர்ப் போட்டிகளில் இவர் சிறந்த ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர். தனுஷ்க குணாதிலகவுடன் இணைந்து நல்ல ஆரம்பத்தை இறுதிப் போட்டியில் மேற்கொண்டார். இந்த ஜோடிக்கு வாய்ப்புகளை வழங்கி பார்க்கலாம். ஆனாலும் தனஞ்சய டி சில்வா, குஷால் பெரேரா இணைந்தால் நல்ல ஆரம்ப ஜோடியாக இருக்கும். மூன்றாமிடத்தில் குசல் மென்டிஸ் சராசரியாக துடுப்பாடியுளார். இவரின் இடத்தை இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. டெஸ்ட் போட்டிகள் மூலமாக நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சராசரியாக துடுப்படியுளார். முதலிரு போட்டிகளிலும் சிறந்த அரைச்சதங்களை பெற்றவர் தொடரை சிறப்பாக நிறைவு செய்யவில்லை. இலங்கை அணி சார்பாக கூடுதலான ஓட்டங்களை பெற்றவர்களில் இரண்டாமவர். இவரின் இடம் இலங்கை அணியில் நிரந்தரம் எனக் கூற முடியும்.

அடுத்த இடம் தினேஷ் சந்திமால். மஹேல விட்டுச் சென்ற இடத்திற்கு அவர் பாணியில் ஒருவர் கிடைத்து விட்டார் என கூறலாம். இலங்கை அணியின் ஓட்ட இயந்திரமாக மாறி வருகின்றார். அஞ்சலோ மத்தியூஸ் எதிர்பார்த்தளவுக்கு கை கொடுக்கவில்லை. 4 போட்டிகளில் 99 ஓட்டங்கள். உபாதை காரணமாக இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. நான்காவது போட்டியில் பந்து வீசவில்லை. களத்தடுப்புக்கு மைதானம் வரவில்லை. இவரின் துடுப்பாட்ட பின்னடைவு இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். 57 ஓட்டங்களை மத்தியூஸ் பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த இடம் திசர பெரேரா.    இவரின் துடுப்பாட்டம் கை கொடுக்கவில்லை. இவரின் பந்துவீச்சே முக்கியமானது. இவர் சரியாக பந்து வீச்சாளராக பாவிக்கப்பட்டாரா என்பது முதற் கேள்வி. ஒரு பகுதி நேர பந்து வீச்சாளர் அளவுக்கே இவருக்கு பந்து வீச்சு வழங்கப்பட்டது. நான்கு போட்டிகளில் 15 ஓவர்கள். பாதியளவு கூட பந்து வீசவில்லை. இந்த நிலையில் ஐந்தாவது போட்டியில் அணியால் நீக்கப்பட்டார். பிறகு எப்படி சிறந்த பந்து வீச்சாளராக மாற முடியும். ஒரு நாள் போட்டிகளில் முழுமையாக இவரின் பந்து வீச்சு பாவிக்கப்படவில்லை. விளையாடியுள்ள போட்டிகளின் படி 1090 ஓவர்களை அதிக பட்சம் வீசி இருக்கலாம் என எடுத்துக்கொண்டால் 692 ஓவர்களை  மாத்திரமே வீசியுள்ளார். இவரை முழுமையான பந்து வீச்சாளராக பாவிக்க வேண்டும்.

அதற்கு பிறகு முதற் போட்டியில் விளையாடிய மிலிந்த சிரிவர்தன அடுத்த போட்டிகளில் இல்லை. இவர் துடுப்பாட்ட வீரரா பந்து வீச்சாளரா என கேட்கத் தோன்றுகின்றது. 19 ஓட்டங்கள். பந்து வீச்சில் விக்கெட்டுகள் இல்லை. அடுத்த போட்டியில் அணியில் இல்லை. இவர் கூட பரவாயில்லை. முதற் போட்டியில் அறிமுகத்தை மேற்கொண்ட லக்ஷான் சந்தகான் 5 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகள். அடுத்த போட்டிகளில் அணியில் இல்லை. அமில அப்பன்சோ முதற் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். 1 விக்கெட். இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்கள். மூன்றாவது போட்டியில் 2 விக்கெட்கள். நான்காவது போட்டியில் 8 ஓவர்கள் 59 ஓட்டங்கள். ஐந்தாவது போட்டியில் விக்கெட்களை கைப்பற்ற முடியவில்லை. ஆனால் இவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். அதுவே அவரை வளர்த்துகொள்ள உதவும். 

இரண்டாவது போட்டியில் அதிரடி துடுப்பாட்ட வீரர்  என நம்பப்படும் சுழற்பந்துவீச்சாளர் சீக்குகே பிரசன்னா அணிக்குள் இணைக்கப்பட்டார். இவர் துடுப்பாட்ட வீரரா பந்து வீச்சாளரா என்பது சந்தேகமாகவே உள்ளது. 34 போட்டிகளில் 28 விக்கெட்களை 53.67 என்ற சராசரியில் பெற்றவர். இங்கிலாந்து தொடரில் 4 இன்னிங்ஸில் 35.2 ஓவர்களில் 234 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றினார். இவருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு. இன்னும் போட்டிகளில் சந்தர்ப்பம். இந்த தொடரில் இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் விளையாடினர். இரண்டு விக்கெட்டுகள். அணியால் நீக்கப்பட்டார். நான்காவது போட்டியில் சச்சித் பத்திரன அணியில் சேர்க்கப்பட்டார். 3 விக்கெட்டுகளை கைப்பற்றி நம்பிக்கையை தந்தார். இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய போதும் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை.

ஐந்தாவது போட்டியில் திஸர பெரேரா நீக்கப்பட்டு தசுன் ஷானக அணியில் இணைக்கப்பட்டார். சுரங்க லக்மால் வேகப் பந்து வீச்சாளராக அணியில் இணைக்கப்பட்டார். டில்ருவான் பெரேரா 5 போட்டிகளிலும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  அணியில் என்னதான்  நடக்கின்றது. எத்தனை மாற்றங்கள்?    21 வீரர்கள் மொத்தமாக குழுவில் இடம்பெற்றுள்ளனர். எந்த தொடரிலும், எந்த அணியிலும் இந்தளவு வீரர்கள் இடம் பெற்று இருக்க மாடடார்கள். இத்தனை மாற்றங்கள் மூலமாக தெரிவுக்கு குழுவினர் எவ்வாறு வீரர்களை அடையாளம் காணப்போகின்றனர். வீரரக்ள் தங்களை எவ்வாறு நிரூபித்துக் காட்டுவது? போதியளவு வாய்ப்புகள் இல்லாவிட்டால் வீரர்கள் எவ்வாறு தங்களை வெளிக்காட்டுவது. தங்களை நிரூபித்துக்காட்டுவது?

அடுத்த ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் இலங்கை அணிக்கு ஜனவரி மாதமே. 4 மாதங்களுக்கு மேல் உள்ளது. இவை எல்லாம் மறந்து போய் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இதே வேலை. தெரிவுக்குகுழுவினர் பற்றி யோசிக்க வேண்டும். அது மாத்திரமே அணியை முன்னேற்றுவதற்கான வழி.

அவுஸ்திரேலியா அணி பலமான அணி. உலக சம்பியன். டெஸ்ட் தொடர் மோசமான தோல்வி. ஆனால் அதிலிருந்து உடனடியாக மீண்டு வந்தனர். தொடர் 1-1 என்ற சமநிலையில் இருந்த வேளையில் அணியின் தலைவர் தொடரில் இருந்து விலகி ஓய்வு எடுக்க நாடு திரும்பிவிட்டார். அந்தளவுக்கு பலமான அணி. பலமான துடுப்பாட்ட வரிசை. பந்து வீச்சை பலமாக எப்போதும் நம்பும் அணி. சுழற்பந்து வீச்சாளர்களை இலங்கை அணி நம்பியிருக்க தங்களின் பலமான வேகப்பந்து வீச்சை நம்பி களமிறங்கி வென்றும் காட்டியுள்ளனர். இலங்கையில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமை இலங்கை அணியின் தடுமாற்றத்திற்கு காரணமாக கூறலாம். நல்ல வேகப்பந்து வீச்சாளர்களிடம் பயிற்சி பெற்றாலே போட்டிகளில் அதனை பாவிக்க முடியும்.

ஆனால் அவுஸ்திரேலியா அணி சுழற் பந்து வீச்சையும் சமாளித்துக் கொண்டது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் பலமாக இருக்கவில்லை. இருந்து இருந்தால் நிலைமை மாறியிருக்கலாம். இந்த தொடரில் அவுஸ்திரேலியா அணி சார்பாக ஜோர்ஜ் பெய்லி சிறப்பாக துடுப்பாடியிருந்தார். மற்றைய வீரர்கள் சராசரியாக கைகொடுத்தமையினால் தொடரை கைப்பற்றமுடிந்தது. பந்துவீச்சில் மிற்செல் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசினார். ஜேம்ஸ் போக்னரின் பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது. ஜோன் ஹேஸ்டிங்ஸ் நல்ல  முறையில் பந்து வீசினர். அடம் ஸாம்பா இந்தத் தொடர் மூலம் அவுஸ்திரேலியா அணியின் முதன்மை சுழற் பந்து வீச்சாளராக இடம் பிடிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைத்துள்ளது.

ஆக இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணி 4 - 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. தமது முதலிடத்தை தக்க வைத்துளளது. புள்ளிகளை அதிகரிக்க செய்துள்ளது. இலங்கை அணியின் நிலைமை மோசமாகவே உள்ளது. பங்களாதேஷ் அணியை கீழ் பக்கமாக அண்மித்தாகிவிட்டது. அடுத்த தென்னாபிரிக்கா தொடர் நிறைவடைய எட்டி பிடிக்கும் நிலையும் வரலாம். பங்களாதேஷ் முந்திக்கொண்டு வந்தாலும் சந்தேகப்படவும் முடியாது. 

ஒரு டெஸ்ட் தொடர் வெற்றியுடன் ஆர்பரித்துக்கொண்ட இலங்கை அணி தொடர்ந்து வெற்றிகளை எவ்வாறு பெறுவது என சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் தெரிவுக்குழுவினர் சென்று தலையிட்டு தங்கள் யுக்திகளையும் அணித்தெரிவுகளையும் திணிக்காமல் அணியின் தலைவர், பயிற்றுவிப்பாளர் ஆகியோரிடம் அணியை முழுமையாக கையளிப்பதே சிறந்த அணி முகாமைத்துவம். அது இங்கே இல்லை. தங்கள் தனிப்பட்ட செல்வாக்கையும், பதவி அதிகாரங்களையும் காட்ட முனைவதன் வெளிப்பாடுகளே இந்த தோல்விகள் என்ற சிந்திக்க தோன்றுகின்றது. இவை மாறினால் வெற்றி பெறும் நிலையம் அதிகம் மாறும் என நம்பலாம். இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் கடுமையாக இவை பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது. யோசிப்பார்களா? அதற்கு அவர்களுக்கு நேரமுண்டா? 

 

100 ஓட்டங்களை தாண்டியவர்களின் விபரம்

 

 

ஜோர்ஜ் பெய்லி                        5              5              270         90*         67.50     75.63                     0              2             

தினேஷ் சந்திமால்                  5              5              236         102         59.00     71.08                     1              1             

குசல் மென்டிஸ்                      5              5              174         69           34.80     82.85                     0              2             

மத்தியூ வேட்                           5              5              155         76           38.75     83.33                     0              1             

ஆரோன் பிஞ்ச்                         5              4              145         56           36.25     143.56                   0              2             

டேவிட் வோணர்                    5              5              144         106         28.80     82.28                     1              0             

தனஞ்சய டி சில்வா               5              5              131         76           26.20     72.77                     0              1             

ட்ரெவிஸ் ஹெட்                   5              5              130         40           26.00     67.35                     0              0             

 

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதங்கள், அரைச் சதங்கள்)

 

5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய வீரர்கள்

 

மிற்செல் ஸ்டார்க்                  5              5              48.5        218         12           3/32       18.16     4.46       

ஜேம்ஸ் போக்னர்                  5              5              45.2        196         10           4/38       19.60     4.32       

ஜோன் ஹேஸ்டிங்ஸ்          3              3              27.0        116         9              6/45       12.88     4.29       

அடம் ஸாம்பா                      5              5              41.0        187         9              3/38       20.77     4.56       

டில்ருவான் பெரேரா            5              5              47.0        256         9              3/48       28.44     5.44       

அமில அபோன்ஸோ           5              5              43.2        181         7              4/18       25.85     4.17       

 

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்து வீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .