2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம் 2018: அரையிறுதி 1

Editorial   / 2018 ஜூலை 10 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

உலகக் கிண்ண தொடரில் இம்முறை பங்குபற்றிய 32 அணிகள் என்ற நிலை  4 அணிகளின் அரை இறுதி என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. உலகக் கிண்ணம் வெல்வார்கள், பலமான அணி இப்படியெல்லாம் வர்ணித்தவர்கள் அனைவருமே வீடு திரும்பி விட்டார்கள். எதிர்ப்பார்ப்புகள் மிகவும் குறைவாக காணப்பட்ட நான்கு அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள அணிகள் அரை இறுதி வரைதானும் வருவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், குரேஷியா ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அணிகளாகும். பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் ஒரு அரை இறுதிப் போட்டியிலும், இங்கிலாந்து, குரேஷியா அணிகள் இன்னுமொரு அரை இறுதிப் போட்டியிலும் மோதுகின்றன. முன்னாள் உலக சம்பியன்கள் இரண்டும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத இரண்டு அணிகளும் மோதுகின்றன என்பது விறு விறுப்பே.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இரவு 11.30இற்கு ஆரம்பிக்கவுள்ளது. பெல்ஜியமணி இந்த தொடரில், தான் விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். நொக் அவுட் சுற்றில் ஜப்பான் மற்றும் பிரேசில் அணிகளை வெற்றி பெற்று அரை இறுதிப்  போட்டிகளுக்கு தெரிவானார்கள். பிரான்ஸ் அணி முதல் சுற்றில் டென்மார்க் அணியுடன் சமநிலை முடினை பெற்றாலும் இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் ஆர்ஜன்டீனா, உருகுவே ஆகிய பலமான அணிகளை வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்கள். எனவே இரு அணிகளது இந்த உலகக்கிண்ண பலமென்பது சமனாகவே காணப்படுகிறது.

பெல்ஜியமணி உலகக்கிண்ணம் ஆரம்பித்த காலத்திருலிருத்து விளையாடி வருமணி. ஆனால் இவர்கள் இதுவரையில் அரை இறுதிப் போட்டியினை தாண்டியதில்லை. 1986 மற்றும், 2014 ஆம் ஆண்டுகளில் காலிறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். 1986 ஆம் ஆண்டு மட்டுமே அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்கள். அப்போதைய உலக சம்பியனான ஆர்ஜன்டீனா அணியிடம் தோல்வியடைந்தார்கள். 32 வருடங்களுக்கு பின்னர் அவர்களுக்கு அரை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை இறுதிப் போட்டி நோக்கி எடுத்துச் செல்ல நல்ல வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதனை சரியாக பாவிப்பார்களா?

பிரான்ஸ் அணி நீண்ட உலகக்கிண்ண வரலாறு உள்ள அணி. 15 ஆவது உலகக் கிண்ண தொடரில் விளையாடும் பிரான்ஸ் அணி 1998 ஆம் ஆண்டின் சம்பியன். இம்முறையுடன் சேர்த்து 8 தடவைகள் காலிறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள்.இவற்றில் 6 தடவைகளில் அரை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். கடந்த  5 தடவைகளில் அரை இறுதிப் போட்டிகளில் இரண்டு தடவை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள அதேவேளை 3 தடவைகள் தோல்விகளை சந்தித்துள்ளார்கள். 1998 ஆம் ஆண்டு உலக சம்பியன். அதன் பின்னர் யாரும் இலகுவில் மறக்க முடியாத 2006 ஆம் ஆண்டின் இறுதிப்போட்டி. சினடீன் ஷிடேன் தலையால் தாக்கி சர்ச்சைகளை உருவாக்கிய இறுதிப் போட்டி. 

பிரான்ஸ் அணி காலிறுதிப் போட்டியில் பலமான உருகுவே அணியினை சந்தித்து. விறு விறுப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட போட்டி. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. பிராஸ்னஸ் அணி 2-0 என வெற்றி பெற்றாலும், இறுதி நேரம் வரையும் உருகுவே அணி சளைக்காமல் கடும் போட்டியினை வழங்கியது. 40 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து போட்டி கடும் போராட்டமாக சென்று கொண்டிருந்த வேளையில் 60 வது நிமிடத்தில் இரண்டாவது கோலை பிரான்ஸ் அணி பெற்று வெற்றியினை உறுதி செய்தது. இதன் மூலம் முதல் உலக சம்பியனின் இறுதிப் போட்டி கனவு தகர்ந்து போனது.

பெல்ஜியம் மற்றும் பிரேசில் அணிகளுக்கனா போட்டி உச்சக்கட்ட விறு விறுப்பை தந்த ஒரு போட்டி. பிரேசில் அணி இம்முறை உலக சம்பியனாக மகுடம் சூடுவார்கள்  என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட அணி. போட்டி ஆரம்பித்து 13 ஆவது நிமிடத்தில் கிடைத்த சொந்த கோல்(OWN GOAL) மூலம் முன்னிலை பெற்ற பெல்ஜியமணி வேகமான முன்னேறி தாக்குதலை குறைத்துக்கொண்டு தடுத்தாடும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.  31 ஆவது நிமிடத்தில் கெவின் டி பிரைன் அடித்த கோல் மூலமாக பெல்ஜிமணி பலம் பெற்றது.  இரண்டு கோல்களை அடித்த பின்னரும் எதிராணியினை கோல் அடிக்க விடலாமா? அதே போன்று பெல்ஜியமணி கடுமையாக பிரேசில் வீரர்களை முன்னேற விடாமல் தடுத்தாடினார்கள். பிரேசில் அணியிடம் பந்து அதிக நேரம் இருந்த போதும் கூட கோல்களை அடிக்கல் முடியாமல் போனது. பெல்ஜியமணியின் முன் வரிசை வீரர்கள் பிரேசிலின் கோல் பக்கமாக பந்தினை எடுத்து செல்வத்திலும் வேகமாக செயற்பட்டமையினால் பிரேசில் அணி இரண்டு பக்கத்தையும் பார்க்க வேண்டிய நிலைக்கு சென்றனர். கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் 76 ஆவது நிமிடத்தில் பிரேசில் அணி கோலை போட்டது. இதன் பின்னர் போட்டி மிகுந்த உச்சக்கட்டத்தை அடைந்தது. பிரேசில் அணி கடுமையாக கோல்களை அடிக்க முற்பட்டனர். ஆனால் பெல்ஜியமணியின் தடுப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. அடிக்கும் பந்துகள் எல்லாமே பெல்ஜியமணியின் வீரர்களின் காலில் படுவதாக அமைந்தது. அல்லது பந்து செல்லும் திசைகளில் எல்லாம் அவர்களின் கால்கள் சென்று தடுத்தன. அதுவே அவர்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

பிரேசில் அணியின் பலமான வீரர்கள் , அனுபவமான வீரர்கள் இருந்தும் சரியாக விளையாட முடியாமல் போனது. அவர்களின் முன் வரிசை விளையாட்டு அதிகமா நெய்மரினை நம்பியிருந்தது. அது கூட அவர்களுக்கு பின்னடைவை தந்த ஒரு விடயம், ஒரு வீரரை நம்பி விளையாடும் அணிகள் எல்லாமே இம்முறை தோல்வியுடன் வீடு திரும்பியுள்ளார்கள் என்பதும் முக்கிய விடயம். பிரேசில் அணி விளையாடிய  21 உலகக் கிண்ண தொடர்களில் 15வது தடவையாக இம்முறை காலிறுதிப் போட்டியில் விளையாடியது. காலிறுதிப்போட்டியுடன் அவர்கள் வெளியேறுவது இது ஐந்தாவது தடவையாகும்.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் உலகக்கிண்ண தொடரில் மூன்றாவது முறையாக இம்முறை சந்திக்கவுள்ளார்கள். இரண்டு போட்டிகளிலும் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை,   7-3 என்ற மொத்த கோல்கள் பெறப்பபட்டுள்ளன. உலகக்கிண்ணம் ஆரம்பிக்க முன்னர் வெளியிடப்பட்ட தரப்படுத்தலில் பெல்ஜியம் அணி மூன்றாமிடத்தில் காணப்படுகிறது. தரப்படுத்தல்களில் உள்ள நிலைக்கு ஏற்ப விளையாடுமணியாக பெல்ஜியம் அணியினை மாத்திரமே கூற முடியும். பிரான்ஸ் அணி ஏழாமிடத்தில் காணப்படுகிறது. அவர்களையும் ஓரளவுக்கு அவ்வாறு கூற முடியும். இரண்டு அணிகளும் இந்த உலகக் கிண்ணத்தில் விளையாடும் விதம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவுள்ளது. வேகமாக விளையாடுவது. முன் வரிசை வீரர்கள் வேகமாக முன்னேறி சென்று தாக்குவது. குறிப்பாக பந்து கிடைத்ததும் வேகமாக பந்தினை முன்னோக்கி செலுத்தல் மற்றும் முன்னோக்கி  வேகமாக பந்துகளை செலுத்தி அதே வேகத்துடன் தாக்குதல். இது நேர்த்தியாக அமையும் பட்சத்தில் கோல்கள் கிடைப்பது நிச்சயமம்.

இரண்டு ஐரோப்பியா நாடுகள். ஐரோப்பா நாடான ரஸ்சியாவில் போட்டி நடைபெறுகிறது. ரசிகர்களும் சம பலமாக போட்டிக்கு வருகை தருவார்கள் என நம்ப முடியும். எனவே ரசிகர்களுக்கு நல்ல போட்டி ஒன்றுள்ளது. பந்தயக்காரகர்கள் பிரான்ஸ் அணி உலகக்கிண்ணத்தை வெல்லும் முதல் வாய்ப்பையும், பெல்ஜியம் அணி வெல்லும் வாய்ப்பை மூன்றாமிடத்திலும் வழங்கியுள்ளார்கள். எனவே பிரான்ஸ் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு. இது நடக்குமா? பெல்ஜியம் அணி முதற் தடவையாக உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு செல்லுமா? பெல்ஜியம் அணி விளையாடும் விதம், வெற்றிகளை பெற்று வரும் விதம் எனபன அவர்கள் உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. புதிய உலக சம்பியன் உருவாகும் போது அடுத்த முறை இந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இன்னுமொரு பலமான அணி என்ற எதிர்பார்ப்பு உருவாகும். ஸ்பெய்ன் அணி 2010 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நிலையினையே உருவாக்கியது. எனவே பெல்ஜியம் அணி அதனை செய்து காட்டுமா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .