2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகக் கிண்ணம்: இந்தியா

Shanmugan Murugavel   / 2019 மே 22 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இத்தொடரில் சம்பியனாகக் கூடிய அணியாக எதிர்பார்க்கப்படும் இந்தியாவை இப்பத்தி ஆராய்கிறது.

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரென வரும்போது அத்தொடரில் சம்பியனானகக் கூடிய அணியாக பிரேஸில் கணிக்கப்படுவது போன்று அண்மைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களென வரும்போது சம்பியனாகக்கூடிய அணியாக இரண்டு தடவைகள் சம்பியனாகியதுடன், ஒரு தடவை இறுதிப் போட்டிக்கும், மூன்று தடவைகள் அரையிறுதிப் போட்டிக்கும் வந்த இந்தியா காணப்படுகின்றபோதும், இதற்கும் மேலதிகமான சில காரணங்களும் இந்தியா சம்பியனாகக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருப்பதாகச் சுட்டுகின்றன.

அவற்றுள் முதன்மையானதாக, இந்திய அணியின் தலைவர் விராத் கோலியை உள்ளடக்கிய, ரோகித் ஷர்மா, ஷீகர் தவான் ஆகிய முதல் மூன்று துடுப்பாட்டவீரர்களின் பெறுபேறுகள் காணப்படுகின்றன. கடந்த உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்ததான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இந்தியா அதிக சதங்களைப் பெற்றதற்கு இவர்களே காரணகர்த்தாக்களாக காணப்படுகின்றனர்.

உலகின் முதல்நிலை துடுப்பாட்டவீரராக விராத் கோலி காணப்படுவதுடன், குறிப்பாக இலக்குகளை துரத்துவதில் சிறந்ததாகக் காணப்படுவதுடன், இங்கிலாந்து ஆடுகளங்களில் கடந்த காலங்களில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறியதை கடந்தாண்டு மாற்றியமைத்த நிலையில், விராத் கோலியை நடுநிலை நாயகமாகக் கொண்டே இந்திய அணியின் பெறுபேறுகள் கட்டமைக்கப்படப் போகின்றன.

விராத் கோலியையடுத்து, தான் அறிமுகம் மேற்கொண்டதிலிருந்து சர்வதேச கிரிக்கெட் சபையின் 2013ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடர், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர், 2017ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் எனத் தொடர் ஓட்டக் குவிப்பில் ஷீகர் தவான் ஈடுபட்டிருந்த நிலையில் அவரிடமிருந்து இதையொத்த மேலுமொரு பெறுபேற்றை இந்த உலகக் கிண்ணத் தொடரிலும் இந்தியா எதிர்பார்க்கிறது.

இதுதவிர, இப்பத்தியாளர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகள் தொடர்பான தனது பார்வையில் ஏற்கெனவே கூறியவாறு இம்முறை உலகக் கிண்ணத் தொடர் இடம்பெறும் மைதானங்கள் தட்டையானதாக துடுப்பாட்டத்துக்குச் சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகையில், ரோகித் ஷர்மாவிடமிருந்து பாரிய சதங்களையும், மேலுமொரு இரட்டைச் சதத்தையும் காணக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

இந்நிலையில், மிகச்சிறந்த முதல் மூன்று வீரர்களைக் கொண்டிருக்கின்றபோதும், இந்திய அணியின் மத்தியவரிசையானது பலவீனமானதாகக் காணப்படுகிறது. கடந்த உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து பலரை நான்காமிடத்தில் இந்தியா சோதித்திருந்தபோதும் எவரும் தமதிடத்தை நிரந்தரமாக்கியிருக்கவில்லை.

உலகக் கிண்ணத் தொடரின்போதும் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல் ஆகிய மூவரில் எவராவது ஒருவர் நான்காமிடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஐந்தாமிடத்தில் களமிறங்கப் போகும் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணியின் அனுபவம் நிச்சயமாக இந்தியாவுக்கு கைகொடுக்கும் என்றபோதும் அதற்கும் மேலாக அவர் தனது துடுப்பாட்டப் பெறுபேறறையும் வெளிப்படுத்தும் பட்சத்திலேயே இந்தியா சம்பியனாகக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கேதார் யாதவ் குணமடைந்தது நிச்சயமாக இந்தியாவுக்கு இனிப்பான செய்தியாக இருக்கும். ஏனெனில், அவர் அணியில் இருக்கும் பட்சத்திலேயே நம்பிக்கையாக ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்க முடியும். ஆறாமிடத்தில் கேதார் யாதவ்வைத் தொடர்ந்து ஏழாமிடத்தில் ஹர்டிக் பாண்டியா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகையில், அவர் தனது அதிரடியான துடுப்பாட்டத்தை தொடர்ச்சியாக இந்தியா எதிர்பார்க்கின்றது.

இந்நிலையில், துடுப்பாட்டமென்று வரும்போது இந்தியாவை விட்ட மேம்பட்டதாக உலகக் கிண்ணத் தொடரை நடாத்தும் நாடான இங்கிலாந்து காணப்படுகின்றபோதும், இந்தியாவின் பந்துவீச்சே அவ்வணிக்கு முன்னிலையை வழங்குகின்றது. அதற்கான பிரதான காரணமாக ஜஸ்பிரிட் பும்ரா விளங்குகின்றார்.

ஜஸ்பிரிட் பும்ராவோடு அண்மைய காலத்தில் மொஹமட் ஷமியும் சிறப்பாகச் செயற்பட்டுள்ள நிலையில், புவ்னேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், இரவீந்திர ஜடேஜாவோடு சிறந்ததொரு பந்துவீச்சுக் குழாமை இந்தியா கொண்டுள்ளது.

கடந்த உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து இனிங்ஸின் மத்திய பகுதிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ்வை வளர்த்தெடுத்தபோதும், குல்தீப் யாதவ்வின் அண்மைய காலப் பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாதபோதும், இவரை அணியில் பிரதியிடக்கூடியவரான இரவீந்திர ஜடேஜா, ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதுடன், அவர் கொண்டுள்ள வேகமான களத்தடுப்பிலீடுபடும் திறமை நிச்சயமாக இந்தியாவுக்கு நன்மை பயக்கலாம்.

இந்த உலக் கிண்ணத் தொடருக்குள் செல்லும்போதும் உலகின் முதல்நிலை துடுப்பாட்டவீரராக விராத் கோலி செல்லுகின்றபோதும், உலகின் முதல்நிலை அணித்தலைவராக அவர் இல்லை என்பதே யதார்த்தம் ஆகும். கடந்த காலங்களிலும் அவரின் சில முடிவுகள் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், மகேந்திர சிங் டோணி, ரோகித் ஷர்மா ஆகிய சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடியவர்களை தன்வசம் வைத்துள்ள விராத் கோலி, அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றோ அல்லது பெறாமலோ இந்த உலகக் கிண்ணத் தொடரில் சம்பியனானவதன் மூலம் தான் முதல்நிலை அணித்தலைவர் என்பதையும் நிரூபித்துக் காண்பிக்க முடியும்.

செளதாம்டனில் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி இலங்கை நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பிக்கவுள்ள தென்னாபிரிக்காவுடனான போட்டியுடன், இங்கிலாந்துக்கு அடுத்ததாக உலகக் கிண்ணத் தொடரில் சம்பியனாகக் கூடிய அணியாக தமது உலகக் கிண்ணத் தொடரை இந்தியா ஆரம்பிக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .