2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: இலங்கை

Shanmugan Murugavel   / 2019 மே 03 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடர் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், கடந்த 11 உலகக் கிண்ணத் தொடர்களிலும் பங்கேற்று இம்முறை 12ஆவது முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கையைப் பற்றியே இப்பத்தி ஆராய்கிறது.

வழமையாக இலங்கையைப் பொறுத்தவரையில், இருதரப்பு, முத்தரப்பு தொடர்களிலும் கடந்த காலங்களில் பிரகாசிக்காவிட்டாலும், சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடர்கள் என வரும்போது பிரகாசிப்பது வழமையாகும்.

அந்தவகையிலேயே, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் சம்பியனானதோடு, 2007, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர்களின்போது இறுதிப் போட்டி வரை வென்றதுடன், 2003ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டி வரையும் முன்னேறியதுடன், உலக இருபதுக்கு -20-இல் 2014ஆம் ஆண்டு சம்பியனானதுடன், 2009, 2012ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை வந்ததுடன், 2010ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.

எவ்வாறாயினும், இம்முறை உலகக் கிண்ணத் தொடரைப் பொறுத்தவரையில் 10 அணிகள் பங்கேற்கையில், உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதில் குறைந்த வாய்ப்புகளைக் கொண்ட அணியாகவே இலங்கை காணப்படுகின்றது. அதற்கு, அணிக்குள் காணப்படும் பிரச்சினைகள் தொடக்கம் அணிக்கு வெளியே கிரிக்கெட் சபை முன்னாள் வீரர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றாமை, சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் விசாரணை எனத் தொடருகின்றது.

இதேவேளை, 10 அணிகளைக் கொண்ட இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் ஒவ்வொரு தடவை மோதி, அதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் என்ற நிலையில், திறமையான அணியே அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இம்முறை நாணயச் சுழற்சி தவிர அணிகள் முன்னேறுவதை அதிர்ஷ்டம் தீர்மானிக்காது.

அந்தவகையில், ஒருநாள் சர்வதேசப் போட்டி அரங்கில் தனக்கு பின்னுக்கு வந்த பங்களாதேஷ், அண்மைய காலத்தில் வந்த ஆப்கானிஸ்தான் ஆகியவையே ஒருநாள் சர்வதேசப் போட்டி அரங்கில் தற்போது மாபெரும் அடிகளை எடுத்து வைத்துள்ள நிலையில் அவ்வணிகளை எதிர்கொள்வதிலேயே பிரச்சினையை எதிர்நோக்குகின்றது.

உலகக் கிண்ணத் தொடருக்கான தயார்படுத்தல்களை கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் பின்னரே ஏனைய அணிகள் ஆரம்பித்திருந்த நிலையில், ஆகக் குறைந்தது கடந்த இரண்டாண்டு காலமாகவே தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுவரும் நிலையில், உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கைக் குழாமானது கடந்த மாதம் நடாத்தப்பட்டிருந்த சுப்பர் மாகாணத் தொடரின் அடிப்படையிலேயே தெரிவுசெய்யப்படவேண்டிய நிலையில் காணப்பட்டிருந்தது.

அதுவும் குறிப்பாக இத்தொடரில் பிரகாசித்திருக்காத இளம் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் அவிஷ்க பெர்ணான்டோ, தனுஷ்க குணதிலக, உபுல் தரங்க ஆகிய சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களுக்கு மேலாக தெரிவுசெய்யப்பட்டமை, அணித்தலைவராக திமுத் கருணாரத்னவின் தெரிவு, முன்னாள் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்படாமை, அண்மைய காலங்களில் பிரகாசிக்காவிட்டாலும் கடந்த காலங்களில் இலங்கைக்கு கைகொடுத்த நிரோஷன் டிக்வெல்ல, அகில தனஞ்சய ஆகியோர் தெரிவுசெய்யப்படாமை விமர்சனங்களை எழுப்பியிருந்தது.

இவற்றைத் தவிர்த்து விட்டு, தெரிவான குழாமை நோக்குவாமானால் இலங்கையணிக்கு தவிர்க்க முடியாதவராக முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் காணப்படுகின்றார். அணியின் தூணாக நோக்கப்படுகின்ற இவர் அண்மைய காலங்களில் அடிக்கடி உபாதைகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஆகக்குறைந்தது இந்த உலகக் கிண்ணத் தொடர் முடிவு வரைக்கும் சிறந்த உடற்றகுதியுடன் காணப்பட்டால் அது நிச்சயம் இலங்கையின் பெறுபேறுகளில் பிரதிபலிக்கும்.

மத்தியூஸுக்கு அடுத்ததாக இலங்கை நம்பியுள்ள வீரராக லசித் மலிங்க காணப்படுகின்றார். இனிங்ஸின் ஆரம்பத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றிஅ எதிரணிக்கு நெருக்கடி வழங்குவதிலிருந்து, இங்கிலாந்தின் துடுப்பாட்டத்துக்குச் சாதகமான குறுகிய மைதானங்களில் இனிங்ஸின் இறுதி ஓவர்களில் ஓட்டங்களை மலிங்க கைப்பற்றுவதிலேயே இலங்கையின் வெற்றி வாய்ப்பு தங்கியிருக்கின்றது.

அடுத்து, இலங்கையின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திமுத் கருணாரத்னவை அணிக்குள் கொண்டு வருவதற்கு முன்வைக்கப்பட்ட காரணமான, தற்போது இலங்கை தமது இனிங்ஸின் 50 ஓவர்களிலும் துடுப்பெடுத்தாடுவதில்லை என்ற குற்றச்சாட்டில், ஆரம்பத்துடுப்பாட்டவீரராகக் களமிறங்கி விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து நிற்கக் கூடியவர் என அடையாளப்படுத்தப்பட்ட திமுத் கருணாரத்ன அப்பணியை செவ்வனவே ஆற்றினால், பின்வரிசையில் அதிரடித் துடுப்பாட்டவீரர்களான திஸர பெரேராம் இசுரு உதான போன்றோரால் சவால் விடுக்கக்கூடிய இலக்கை நிர்மாணிக்க முடியும்.

இதுதவிர, மலிங்கவின் தலைமையில் உள்வீட்டு மோதல்கள் காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டே அவர் அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என வெற்றியைப் பெற்றுக் கொடுத்து வீரர்களைச் சிறப்பாக வழிநடத்தினார் என்று கூறப்படுகின்ற திமுத் கருணாரத்ன அணித்தலைவராக பிரதியிடப்பட்டிருந்தார்.

அந்தவகையில், லசித் மலிங்க, திஸர பெரேரா உள்ளிட்டோரிடையே காணப்படும் வேறுபாடுகளைக் களைந்து, மத்தியூஸையும் ஏனைய அணி வீரர்களையும் சேர்த்துக் கொண்டு ஒற்றுமையாகும் களமாடும் சந்தர்ப்பத்தை திமுத் கருணாரத்ன ஏற்படுத்தினாலே, அது அவரை அணித்தலைவராக நியமித்ததை நியாயப்படுத்துவதோடு, இலங்கையணியின்ன் வாய்ப்புகளையும் இரட்டிப்பாக்கும்.

இப்பத்தியில் மேலே குறிப்பிட்டவர்கள் தவிர, திறமையானவர்களாக இருந்தும் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காத, திமுத் கருணாரத்னவுடன் ஆரம்பத்துடுப்பாட்டவீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் அவிஷ்க பெர்ணான்டோ, குசல் மென்டிஸ், லஹிரு திரிமான்ன ஆகியோரின் துடுப்பாட்டப் பெறுபேறுகளை இலங்கை எதிர்பார்த்து நிற்கிறது. அத்தோடு, முழு உடற்றகுதியுடன் குசல் பெரேராவை இலங்கை எதிர்பார்ப்பதோடு, அண்மைய காலங்களைப் போல தனஞ்சய டி சில்வாவிடமிருந்து சகலதுறை பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதேவேளை, பந்துவீச்சு வரிசையை பார்க்கப் போவாமானால் மலிங்கவோடு, தனது அண்மைய கால அதிரடி துடுப்பாட்டத்தால் இசுரு உதானவும் தனதிடத்தை ஓரளவு உறுதிப்படுத்தியிருக்கின்றார் என்றாலும், இங்கிலாந்தின் ஆடுகளங்கள் ஸ்விங்குக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில், மலிங்கவோடு, நுவான் பிரதீப்பும் இசுரு உதானவுக்கு பதிலாக சுரங்க லக்மாலும் களமிறங்கும் பட்சத்தில் சிறந்த பந்துவீச்சு வரிசையாக அமையும்.

சுழற்பந்துவீச்சைப் பொறுத்த வரையில் ஜெஃப்ரி வன்டர்சே மாத்திரமே சுழற்பந்துவீச்சாளராக குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்து அவர் சுழற்பந்துவீச்சை கவனித்துக் கொள்ளவுள்ளார். தற்காலத்தில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இனிங்ஸின் நடுப்பகுதிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற புறச்சுழற்பந்துவீச்சையே அணிகள் தங்கியிருக்கின்ற நிலையில் அப்பணியை தமக்கு வன்டர்சேயும் ஆற்றுவார் என இலங்கை எதிர்பார்க்கின்றது.

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில், தமது முதற்போட்டியில் அடுத்த மாதம் முதலாம் திகதி நியூசிலாந்தை கார்டிஃப்பில் இலங்கை சந்திக்கவுள்ள நிலையில், கடந்த கால சர்வதேச கிரிக்கெட் சபைத் தொடர்களைப் போல இலங்கையின் எழுச்சியை இலங்கை இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .