2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உலகக் கிண்ணம்: குழு எவ்

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் அதிருப்தியை தந்த குழுவாக இந்த குழு மாறிப்போனது. நடப்பு உலக சம்பியன் ஜேர்மனி அணி தங்கள் உலகக்கிண்ண வரலாற்றில் முதற் தடவையாக முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். குழு நிலையில் இறுதியிடத்தை பெற்று வெளியேறியுள்ளார்கள். இம்முறை உலகக்கிண்ணத்தை வெற்றி பெறும் வாய்ப்புள்ள முதல் நாடக கணிக்கப்பட்டது ஜேர்மனி. அதுமட்டுமல்லாமல் தரப்படுத்தல்களில் முதலிடத்தில் காணப்படுகிறார்கள். ஐரோப்பிய வலைய தெரிவுகாண் போட்டிகளின் முழுமையான போட்டிகளையும் வெற்றி பெற்று உலகக்கிண்ணத்துக்கு தெரிவான அணி. ஏன் இப்படி நடந்தது? பதில் இல்லையென்றே கூற முடியும்.

ஆரம்ப போட்டியில் மெக்சிகோ அணியுடன் 0-1 என தோல்வியடைந்தார்கள். ஜேர்மனி அணியின் நிறைவு செய்து வைத்தல் சரியாக அமையவில்லை. மூன்று போட்டிகளிலும் பந்து அவர்கள் பக்கமாகவே இருந்தது. பந்துகளை கோல் நோக்கி நகர்த்துதல் போதுமானதாக அமையவில்லை. அடித்த பந்துகள் கோல் கமபங்களை தாண்டி சென்றமை ஜேர்மனி அணியின் மூன்று போட்டிகளிலும் பார்க்கக்கூடியதாக அமைந்தது. மெக்சிகோ அணியுடனான போட்டியில் ஜேர்மனி அணி சிறப்பாக விளையாடிய போதும் ஜேர்மனி அணி தமக்கு கிடைத்தை வாய்ப்புகளை சரியாக பாவிக்க தவறவிட்டார்கள்.

குழு F இல் முதலிடத்தை பெற்றுக்கொண்ட சுவீடன் அணியினை ஜேர்மனி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஜேர்மனி அணியின் ஆக்ரோஷமான விளையாட்டை பார்க்க முடிந்தது. முதற் போட்டியில், துரதிஷ்டம் தோற்று போனார்கள் என பார்த்தால் தென் கொரியா அணியுடன் 0-2 என தோற்ற விதம் பற்றி சொல்வது கடினமே. தென் கொரியா அணி சிறப்பாக விளையாடியது. ஜேர்மனியின் இறுதி நேர தாக்கும் வியூகம் இந்தப் போட்டியில் மிக வேகமாக காணப்பட்டது. ஆனால் அந்த தாக்குதல்கள் கோல்களை பெற்றுக் கொடுக்கவில்லை. ஜேர்மனி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமானவர் தென் கொரியா அணியின் கோல் காப்பாளர் கியூவின் வூ சூ. நிச்சயமான பல கோல்களை இவர் தடுத்திருந்தார். 

ஜேர்மனி அணி என்ற பெயர் இருந்தாலும் அண்மைக்காலமாக இவர்கள் நல்ல முறையில் விளையாடவில்லை என்றாலே அவர்களின் வெளியேற்றம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளலாம். நல்ல முறையில் உள்ள அணி. சிறப்பாக விளையாடிவரும் அணி திடீரென இவ்வாறு தோல்விகளை சந்தித்து வெளியறுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஏமாற்றம் தருவது. ஜேர்மனி அணி பொதுவாக உலக ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை கொண்ட அணி. அதிக ரசிகர்களை கொண்ட அணி. எப்போதும் நல்ல முறையில் விளையாடும் அணி. இறுதியாக விளையாடிய போட்டியில் தோல்வியடைந்தும் கூட ஒரு மஞ்சள் அட்டை கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இப்படியான நல்ல அணியொன்று வெளியேறியிருப்பது இந்த உலக கிண்ண தொடரின் விறுவிறுப்பை கொஞ்சமாவது குறைவடையைச் செய்யும் என்பதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

குழு F இல் சுவீடன் அணி முதலிடம் பெற்றுக்கொண்டது. சுவீடன் அணி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகளை கொண்ட அணியாகவே காணப்பட்டது. உலகக்கிண்ண தெரிவுகாண் போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தே உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றார்கள் . இரண்டு பலமான அணிகளின் வெளியேற்றத்துக்கு காரணமானவர்கள்  இலகுவாக விட்டுவிடுவார்களா? ஜேர்மனி அணியிடம் தோல்வியை சந்தித்தாலும் மெக்சிகோ மற்றும் தென் கொரியா அணிகளை வெற்றி பெற்றுக்கொண்டார்கள். சுவீடன் அணி உலகக்கிண்ணத்தை வெற்றி பெறாவிட்டாலும் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். எனவே இம்முறை இவர்கள் இன்னமும் முன்னேற்றங்களை சந்திக்கும் வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. சுவீடன் அணி சுவிற்சலாந்து அணியினையே இரண்டாம் சுற்றில் சந்திக்கப்போகிறார்கள். எனவே இரண்டு அணிகளது பலமென பார்க்கும் போது சுவீடன் அணி ஓரளவு முன்னிலையில் தென்படுகிறது. பந்தயக்காரர்கள் கிட்டத்தட்ட சம வாய்ப்புகளை வழங்கியுள்ள போதும் சுவிற்சலாந்து அணிக்கு சிறியளவு முன்னிலை கொடுத்துள்ளார்கள். தரப்படுத்தல்கள் என பார்க்கும் போது சுவிற்சலாந்து அணி ஆறாமிடத்திலும், சுவீடன் அணி இருபத்துநான்காமிடத்த்திலும் காணப்படுகின்றன. "அட போங்கப்பா தரப்பப்படுத்தல்கள் எல்லாம் இங்க செல்லாது" எனவும் சொல்ல வேறு தோன்றுகிறது. இரண்டு ஐரோப்பிய நாடுகள் மோதப்போகின்றன. யார் காலிறுதியினை தொடப்போகிறார்கள் என்பதனை போட்டி முடிவேசொல்லும். இவர்கள்தான் வெல்வார்கள் என அடித்து சொல்வது கடினமே.

1994 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் விளையாடி வரும் மெக்சிகோ அணி இம்முறையும் அந்த வாய்ப்பை பெற்றுள்ளது. கொரியா அணியின் வெற்றியின் மூலமே இந்த வாய்ப்பை இவர்கள் பெற்றுக்கொண்டார்கள். சுவீடன் அணியுடன் 3-0 என்ற கோல் கணக்கில் காணப்பட்ட வேளையில் ஜேர்மனி அணி 1 கோல் வித்தியாசத்தில் வென்றால் மெக்சிகோ வெளியே என்ற அழுத்தமான நிலையிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். கொரியா மற்றும் ஜேர்மனி அணிகளின் உதவியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளார்கள். ஆனால் அடுத்த சுற்றை இவர்கள் இம்முறையும் தாண்ட மாட்டார்கள் என கூற முடியும். பிரேசில் அணியினை அடுத்த இரண்டாம் சுற்றில் சந்திக்கவுள்ளார்கள். இருப்பினும் இந்த உலகக்கிண்ணத்தில் இதுதான் நடக்குமென கூறுவது கடினமாகவே உள்ளது. நடைப்பவை எல்லாம் எதிர்பார்ப்புகளுக்கு தலைகீழாக நடப்பதனால் மெக்சிகோ அணி வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இம்முறை விளையாடும் மெக்சிகோ அணி கடந்த கால அணிகளிலும் பார்க்க பலமான அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் சுற்று வாய்ப்பை தென் கொரியா அணி இழந்தாலும் இந்த உலகக்கிண்ணத்தில்  தங்கள் பெயரை பதிவு செய்து வெளியேறியுள்ளார்கள். ஆசிய வலையத்திலிருந்து தெரிவான தென் கொரியா அணி 1986 ஆம் ஆண்டு முதல் உலகக்கிண்ண தொடார்களில் விளையாடி  வருகிறார்கள். சுவீடன் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு கோல் வித்தியாசத்திலேயே தோல்விகளை சந்திதித்தார்கள். முன் வரிசை வீரர்கள் பந்துகளை கோல் கம்பத்தை நோக்கி தூரத்திலிருந்த்து குறி வைத்து உதைப்பது குறைவாக காணப்பட்டது. இது கூட அவர்களின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது. பந்துகளை வெட்டி எடுத்து கோல் கம்பத்துக்கு அருகில் கொண்டு சென்று கோலடிக்க முயன்றார்கள். அதனால் மற்றைய அணிகள் அவர்களை இலகுவாக தடுத்துவிட்டார்கள். ஒரு சமநிலை முடிவினை பெற்றிருந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு நிச்சசயம் கிடைத்திருக்குமென கூற முடியும். பலமான அணிகளை இவ்வளவு சிறப்பாக எதிர்கொண்டதே இவர்களின் வெற்றியென கூற முடியும்.

 

புள்ளிப்பட்டியல்

1 ஸ்வீடன்                                       3              2              0              1              5              2              3              6

2 மெக்ஸிகோ                            3              2              0              1              3              4              -1            6

3 தென் கொரியா                   3              1              0              2              3              3              0              3

4 ஜேர்மனி                                    3              1              0              2              2              4              -2            3

(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், வாங்கிய கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

 

போட்டி முடிவுகள்

ஜேர்மனி                                        vs            மெக்சிகோ                 0 - 1

தென் கொரியா                       vs           ஸ்வீடன்                         0-1

தென் கொரியா                      vs            மெக்சிகோ                  1 - 2

ஜேர்மனி                                        vs            ஸ்வீடன்                          2 - 1

மெக்ஸிக்கோ                           Vs           ஸ்வீடன்                         0 - 3

தென் கொரியா                      vs            ஜேர்மனி                        2 – 0

 

இரண்டாம் சுற்றுப் போட்டிகள்

ஜூலை 02 - 19.30, பிரேசில் எதிர் மெக்சிகோ

ஜூலை 03 - 19.30, சுவீடன் எதிர் சுவிற்சலாந்து


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X