2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: குழு ஏ

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குழுநிலைப் போட்டிகள் நிறைவடைய ஆரம்பித்துள்ளன. குழு ஏக்கான போட்டிகள் நேற்று நிறைவடைந்தன.

குழுநிலைப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான கட்டப் போட்டிகள் நிறைவடைந்த போதே குழு ஏ இலிருந்து போட்டிகளை நடாத்தும் ரஷ்யா, உருகுவே அணிகள், அடுத்த சுற்றான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுவிட்டன. சவுதி அரேபியாவும் எகிப்தும் இறுதி 16 அணிகளுக்கான சுற்று வாய்ப்புகளை இழந்தன. ஆனாலும்இறுதி 16 அணிகளுக்கான சுற்று தெரிவென்பது மட்டுமல்ல, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தெரிவாகும் அணிகள் குழுநிலைப் போட்டிகளில் எந்த இடங்களை பெற்றுக் கொள்கின்றன என்பது கூட முக்கியமே. இக்குழுவில் இடம்பிடித்துள்ள உருகுவே அணி கூட 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் அவ்வாறே நான்காமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இம்முறை சிறிய அணிகள் அல்லது பலம் குறைந்த அணிகள் என கூறப்படுகின்ற அணிகளும் சிறப்பாகவே விளையாடி வருகின்றன.  இம்முறை உலக கிண்ண தொடரின் இலகுவான குழுவாக இக்குழுவை குறிப்பிடலாம். அதாவது மிகப்பலமான அணிகள் இக்குழுவில் இடம்பெறவில்லை.

இக்குழுவில் உள்ள அணிகள் தரப்படுத்தல்களின்படி நான்காமிட அணி ரஷ்யா. தங்கள் நாட்டில் போட்டிகள் நடைபெறுவதால் போட்டிகளை வென்றுவிட்டார்கள் எனக்கூறிவிட முடியாது. ரஷ்யா அணி சிறப்பாக விளையாடுகிறது. எனவே இவர்கள் நிச்சயம் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்கவுள்ள ஸ்பெய்ன் அணிக்கு தலையிடியாக இருப்பார்கள் என நம்பலாம்.  

குழுவில் முதலிடத்தை பிடித்திருந்தாலும் போர்த்துக்கல் அணியை சந்தித்திருக்க வேண்டும். அதுவும் கூட இவர்களுக்கு இலகுவாக அமையாது.  சவுதி அணியுடன் 5-0 என வெற்றி பெற்றவர்கள், எகிப்துடன் 3-1 என்ற வெற்றி பெற்றுக்கொண்டார்கள். உருகுவே அணியுடன் 0-3 என்ற தோல்வி, அடுத்த சுற்றில் எவ்வாறு ஸ்பெய்னை எதிர்கொண்டு வெல்லப் போகிறார்கள் என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. ரஷ்யா அணியாக இவர்கள் விளையாடும் நான்காவது உலக கிண்ணமிது. இப்போதே இவர்கள் முதற் தடவையாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தெரிவாகியுள்ளார்கள். அத்துடன் இவர்களின் மிகப் பெரிய உலகக் கிண்ண வெற்றியாக சவுதிஅரேபியா அணியுடன் பெற்ற வெற்றியைப் பதிவு செய்துள்ளார்கள். சோவியத் ஒன்றியமாக விளையாடிய வேளையில் அவர்கள் நான்காமிடத்தை பெற்றுள்ள அதேவேளை, காலிறுதி வரை மூன்று வரை தடவைகள் தெரிவாகியுள்ளார்கள்.

கால்பந்தாட்ட உலகக் கிண்ண முதல் சம்பியன் உருகுவே. கடந்த இரண்டு உலகக் கிண்ண தொடரில் சிறப்பாக விளையாடிவருகிறார்கள். ஆனால் அவற்றை தாண்டி இம்முறை இன்னமும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். பலமாக தென்படுகிறாரக்ள். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான லூயிஸ் சுவாரஸ் அணிக்கான வெற்றிகளை பெற்றுக் கொடுக்கிறார். விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். ரஷ்ய அணியுடன் விளையாடிய விதம் அவர்கள் இரண்டாவது சுற்றில் போர்த்துக்கல் அணியை பலமாக எதிர்கொள்வார்கள் என நம்ப முடிகிறது.

உருகுவே அணி தரப்படுத்தல்களில் 14ஆம் இடத்தில் காணப்படுகிறது. அவர்கள் எதிர்கொள்ளவுள்ள போர்த்துக்கல் நான்காமிடத்திலுள்ளது. இந்த மோதலில் யார் வெற்றிபெற்று காலிறுதிப் போட்டிகளுக்கு செல்வார்கள் என்பது மிகவும் சுவாரஷ்யம். போர்த்துக்கல் அணிக்கு இன்னமும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால், போர்த்துக்கல் ஈரான் அணியுடன் தடுமாறிய விதம் உருகுவே அணிக்கு நம்பிக்கையை வழங்கும். போர்த்துக்கல், உருகுவே அணிகளுக்கிடையிலான போட்டியினை சமபல போட்டியாகவே கருத முடியும்.

அதிஷ்டம் கூட தன்னுடைய பங்கை இனி வரும் சுற்றுக்களில் வழங்கும் என்பதும் கூட முக்கியமானதே. போர்த்துக்கல்லின் பலம், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பலம் இந்த இரண்டையும் உருகுவே அணி தகர்க்குமானால் உருகுவே அணி காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும் வாய்ப்புகளை உருவாக்கும்.

சவுதி அரேபியா அணிக்கு, உலகக் கிண்ண தொடர்களில் மூன்றாவது வெற்றி இந்த உலகக்கிண்ணத்தில் கிடைத்துள்ளது. 1994ஆம் ஆண்டு முதற் தடவையாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தெரிவானார்கள். அதன்பின்னர் இம்முறை உலகக் கிண்ணத் தொடரே அவர்களுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. முதற் போட்டியில் ரஷ்யா அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்தவர்கள், இரண்டாவது போட்டியில் உருகுவே அணியுடன் கடுமையாக போராடினார்கள். உருகுவே அணியை ஒரு கோல் மாத்திரமே பெற அனுமதித்தார்கள். மூன்றாவது போட்டியில் எகிப்து அணியுடன் 2-1 என வெற்றி பெற்றுக் கொண்டார்கள். எகிப்து அணி தரப்படுத்தல்களில் 45 ஆமிடத்தை பெற்றுள்ள அணி. சவுதிஅரேபிய அணி 67 ஆமிடத்தை பெற்றுள்ள அணி. ஆக பலமான அணியான எகிப்து அணியினை வெற்றி பெற்று திருப்தியாக உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்கள். 

எகிப்து அணி பலமான அணியாக இம்முறை களமிறங்கியது. இது அவர்களின் மூன்றாவது உலகக்கிண்ணம். 1990ஆம் ஆண்டின் பின்னர் இம்முறை விளையாடியுள்ளார்கள். 1934ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் முதல் உலகக்கிண்ணம் இவர்களுக்கு. ஆபிரிக்காவின் பலமான அணியாக களமிறங்கிய இவர்களுக்கு இந்த உலகக்கிண்ணம் ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. பலமான பின் வரிசை அணியாக இவர்கள் விளையாடியுள்ளார்கள். அதனால்தான் கோல்களை எதிரணிகள் அதிகமாக பெற இடம் வழங்கவில்லை.

 

போட்டி முடிவுகள்

ரஷ்யா                             5-0                          சவுதி அரேபியா

எகிப்து                            0-1                          உருகுவே

ரஷ்யா                             3-1                          எகிப்து

உருகுவே                       1-0                          சவுதி அரேபியா

உருகுவே                       3-0                          ரஷ்யா

சவுதி அரேபியா      2-1                          எகிப்து

 

புள்ளி விபரம்

உருகுவே                                       3              3              0              0              5              0              5              9

ரஷ்யா                                             3              2              0              1              8              4              4              6

சவுதி அரேபியா                      3              1              0              2              2              7              -5            3

எகிப்து                                            3              0              0              3              2              6              -4            0

(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, பெற்ற கோல்கள், எதிரணி கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

 

இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிகள்

இம்மாதம் 30 ஆம் திகதி - 11.30 PM - உருகுவே எதிர் போர்த்துக்கல்

அடுத்த மாதம் முதாலம் திகதி - 7.30 PM - ரஷ்யா எதிர் ஸ்பெய்ன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .