2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணம்: குழு ஜி

Editorial   / 2018 ஜூலை 02 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இம்முறை உலகக்கிண்ணத்தை வெல்லுமென அதிகம் எதிர்பார்ப்பில்லாத இரண்டு அணிகள் இந்தக் குழுவில் இடம்பிடித்திருந்தன. பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. இரண்டு அணிகளும் உலகக்கிண்ணத்தை வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ள அணிகள். ஆனால் இதுவரை வெற்றி பெறும் என்பதற்கான வாய்ப்புகள் பற்றி  குறைவாக பேசப்படுகின்றன. பெல்ஜியம் விளையாடி வரும் விதமும், குழு நிலையில் முதலிடத்தையும் பெற்றதன் பின்னர் கால்பந்து விற்பன்னர்களின் பார்வை இவர்கள் பக்கமாக திரும்பியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து அணியினை இவர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் இவர்கள் உண்மையிலேயே பலமாக உள்ளார்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். இம்முறை உலகக்கிண்ண தொடரின் குழு நிலை போட்டிகளில் மூன்று போட்டிகளையும் வெற்றி பெற்ற அணிகள் மூன்று மாத்திரமே. அவற்றுள் பெல்ஜியம் அணியும் ஒன்று.

இங்கிலாந்து அணி கடந்த காலங்களிலும் பார்க்க பலமான அணியாக தென்படுகிறது. இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற அணிகள் பலமாக காணப்படலும் கூட, இவர்கள் அரை இறுதிப்போட்டியில் அல்லது காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணியினை சந்திக்க வேண்டுமென்பதே இவர்களின் வாய்ப்புகள் குறைவாக எதிர்வு கூறப்படுவதற்கான காரணம். ஆனால் ஏன் இந்த அணிகளினால் பிரேசில் அணியினை வெற்றி பெற முடியாது? என்ற கேள்வி நிச்சயம் கேட்கப்படலாம். இம்முறை போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது இந்த இரண்டு அணிகளுமே பிரேசில் அணியிலும் பார்க்க சிறப்பாக விளையாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

பெல்ஜியமணி குழு நிலைப் போட்டிகளில் பனாமா மற்றும் டுனீசியா ஆகிய அணிகளை இலகுவாக  வெற்றி பெற்றார்கள். இரண்டு போட்டிகளும் மூன்று கோல் வித்தியாசங்கள். இதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். இங்கிலாந்து அணியுடன் சமநிலை முடிவு போதும், முதலிடத்தை பெற்றுக்கொள்வதற்கு என்ற நிலையில் இங்கிலாந்து அணியிடுடன் விளையாடினார்கள். எதிர்பார்த்தது போன்று இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி விறுவிறுப்பாக காணப்பட்டது.  51வது நிமிடத்தில் அடித்த கோலின் மூலம் பெல்ஜியம் அணி இங்கிலாந்து அணியினை வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியது.

பெல்ஜியம் அணியே ஐரோப்பிய வலையத்திலிருந்து முதலாவதாக உலகக்கிண்ண தொடருக்கு தெரிவான அணி. எந்தவித தோல்விகளுமின்றி,  ஒரு சமநிலை முடிவு மற்றும் ஒன்பது வெற்றிகளுடன் உலகக் கிண்ண தொடருக்கு  தெரிவானார்கள். கடந்த முறை காலிறுதிப்போட்டிகள் வரை முன்னேறிய அணிக்கு இம்முறையும் நிச்சயம் காலிறுதி வாய்ப்புகளுள்ளன.  1986 ஆம் ஆண்டு நான்காமிடத்தை பெற்றதன் பின்னர் கடந்த முறை இரண்டாவது தடவையாக காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவானார்கள். அடுத்த சுற்றில் ஜப்பான் அணியினை இவர்கள் சந்திப்பதனால் காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவாவது  நிச்சயம் என கூற முடியும். ஆனால் காலிறுதிப் போட்டியில் இவர்கள் பிரேசில் அணி அணி இரண்டாம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றால், பிரேசிலை சந்திக்கவேண்டிய நிலை உருவாகும். 

தரப்படுத்தல்களில் அடுத்த இரண்டு இடங்களிலுள்ள அணிகள் பெல்ஜியம் மற்றும் பிரேசில். ஆனால் அடுத்த போட்டி பற்றி பேசும் நிலையில் பெல்ஜியம் அணி ஜப்பான் அணியினை அவ்வளவு இலகுவாக வெற்றி பெற்றுவிடுமென நம்ப முடியுமா? இம்முறை உலகக்கிண்ண தொடரில் அதிகம் எதிர்பார்த்த அணிகள் எல்லாம் தோல்வியடைந்து வெளியேறிவரும் நிலையில் ஜப்பான் அணி ஏன் பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்காது என நம்புவது? பெல்ஜியம் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன என கூறுவது மட்டுமே இங்கே பொருத்தமாக அமையும்.

இங்கிலாந்து அணி தற்போதுள்ள நிலையில் இறுதிப்போட்டி வரையும் பயணிக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. இவர்களுக்கான தடைகள் இலகுவாக காணப்படுகின்றன.  இதற்காகவே இவர்கள் பெல்ஜியம் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தார்கள் என சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் உள்ளன. முதலிடத்தை பெற்றால் பிரேசில் அணியினை சந்திக்க தேவையில்லை. மற்றைய அணிகள் இலகுவானவை எனவும் பேச்சுக்கள் உள்ளன. அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை யோசிக்க முன்னர் கொலம்பியா அணியினை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த முறை உலகக்கிண்ண தொடரில் பிரேசில் அணியினை வெற்றி  பெற்று மூன்றாமிடத்தை பெற்ற கொலம்பியா அணி பற்றி யோசிக்க வேண்டும். இரண்டாம் சுற்றில் அவர்களை வெற்றி பெற்றால்தான் அடுத்த கட்டம். அடுத்த கட்டமே உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இவ்வாறான குழப்பம் அவர்களுக்கு தேவைதானா?

இங்கிலாந்து அணி டுனீசியா அணியுடன் போராடியே வெற்றி பெற்றார்கள். ஆனால்  அடுத்த போட்டியில் பனாமா அணியினை 5 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக்கொண்டார்கள். இதன் மூலம் இரண்டாம் சுற்று உறுதியானது. இந்த நிலையில் பெல்ஜியமணியுடன் போராடியவர்கள் தோல்வியை சந்தித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக பலமான கொலம்பியா அணியினை இரண்டாம் சுற்றில் சந்திக்கவுள்ளார்கள். இங்கிலாந்து அணி தரப்படுத்தல்களில் பன்னிரெண்டாமிடத்திலுள்ளது. கொலம்பியா அணி பதினாறாமிடத்திலுள்ளது. எனவே இரு அணிகளும் பலமானவை என கூற முடியும். அத்துடன் இங்கிலாந்து அணிக்கு உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு நான்காமிடத்திலும், கொலம்பியா அணிக்கு ஏழாமிடத்திலும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. கடுமையான போட்டி ஒன்றை இரண்டாம் சுற்றுப்போட்டியில் எதிர்பார்க்க முடியும். கடந்த இரண்டு உலக கிண்ண தொடர்களிலும் இங்கிலாந்து அணி காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழுவில் இடம்பிடித்த டுனீசியா மற்றும் பனாமா ஆகிய இரு அணிகளுமே பாவப்பட்ட அணிகளாகிவிட்டன. இம்முறை உலகக்கிண்ண தொடரில் மோசமாக அடிவாங்கிய அணிகளாக இவையிரண்டும் காணப்படுகின்றன. ஐந்தாவது உலகக்கிண்ண தொடரில் விளையாடிய இவர்கள் பனாமா அணியினை வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது உலகக்கிண்ண வெற்றியினை தமதாக்கினார்கள். இதன் மூலம் இம்முறை இவர்களுக்கு 24 ஆம் இடம் கிடைத்துள்ளது. மற்றப்படி இவர்கள் பெரியளவில் கூறும்படி சிறப்பாக சாதிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற பனாமா அணி இம்முறை இறுதியிடத்தை பெற்ற அணியாக உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்கள். பலமான இரண்டு அணிகளை சந்தித்தால் என்ன நடக்குமோ அதுதான்  நடந்துள்ளது. முக்கிய அணிகளை சந்திக்க இவர்கள் இன்னமும் கடுமையான முறையில் போட்டியிடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப்பட்டியல்

1 பெல்ஜியம்                               3              3              0              0              9              2              7              9

2 இங்கிலாந்து                          3             2              0              1              8              3              5              6

3 டுனீசியா                                   3              1              0              2              5              8              -3            3

4 பனாமா                                      3              0              0              3              2              11           -9            0

 

போட்டி முடிவுகள்

பெல்ஜியம்                   vs            பனாமா                        3 - 0

துனிசியா                     Vs           இங்கிலாந்து              1 - 2

பெல்ஜியம்                   Vs           துனீசியா                      5 - 2

இங்கிலாந்து              Vs           பனாமா                         6 - 1

இங்கிலாந்து              Vs           பெல்ஜியம்                   0 - 1

பனாமா                         vs           துனிசியா                    1 – 2

 

இரண்டாம் சுற்றுப்போட்டிகள்

ஜூலை 2, பெல்ஜியம் Vs ஜப்பான் - 23: 30

ஜூலை 3, கொலம்பியா Vs இங்கிலாந்து - 23: 30


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X