2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: குழு பி

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

உலகக்கிண்ண தொடரில் இம்முறை இந்தக் குழுதான் அதிக விறுவிறுப்பை தந்தது என இப்போதே கூறிவிடலாம் போலுள்ளது. என்னவொரு நாடகம் நடந்து முடிந்தது எனக் கூறக்கூடியதாக அமைந்தது. சிறிய அணிகள் என்று எந்த அணியையும் கணிப்பிட முடியாது என்பதற்கு இந்தக் குழுவின் போட்டி முடிவுகள் உதாரணமாக அமைந்தன. ஐரோப்பிய சம்பியன் போர்த்துக்கல் அணி மற்றும் உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான முன்னாள் சம்பியன் ஸ்பெய்ன் ஆகிய அணிகளை ஈரான் மற்றும் மொராக்கோ ஆகிய அணிகள் ஆட்டம் காண வைத்தன. போட்டி நிறைவடைய சில நிமிடங்களே மீதமிருந்த வேளையில் ஸ்பெய்ன் அணி வெளியேறிவிடுமோ என்ற சூழ்நிலை உருவாகி மீண்டும் குழு நிலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பலமான போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் இரண்டாவது போட்டிகள் நிறைவடைந்ததும் அடுத்து சுற்றுக்கு தெரிவாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. மொராக்கோ அணி இரண்டாவது போட்டியுடன் தங்கள் இரண்டாம் சுற்று வாய்ப்பை இழந்தது. ஆனால் ஈரான் அணி மொராக்கோ அணியினை வெற்றி பெற்றதன் மூலம் அவர்களுக்கான வாய்ப்பை தக்க வைத்திருந்தார்கள்.. ஆனாலும் ஈரான் அணியினால் போர்த்துக்கல் அணியினை வெற்றி பெற முடியுமென யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேவேளையில் ஸ்பெய்ன் அணி தோல்வியடைய வேண்டும். ஸ்பெய்ன் தோல்வியடைந்து ஈரான் சமநிலையில் நிறைவு செய்தால் ஈரானுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நிலையும் காணப்பட்டது. ஆனால் இவை நடப்பதற்கு சாத்தியமற்ற விடயமாக நம்பப்பட்டது. இருந்தாலும் போட்டியின் 90 வது நிமிடத்தில் அந்த நிலை ஏற்பட்டது.  இருப்பினும் ஸ்பெய்ன் அணியின் இறுதி நேர கோல் அவர்களை காப்பாற்றியது.

மொரோக்கோ மற்றும் ஸ்பெய்ன் அணிகளுக்கிடையிலான போட்டி 81வது நிமிடம் வரை சமநிலையில் சென்றது. அதிலிருந்து அடுத்த ஒன்பது நிமிடங்களுக்கு மொரோக்கோ அணி 2-1 என்ற முன்னிலையை தக்க வைத்துக்கொண்டது. மறுபுறத்தில் நடைபெற்ற போட்டியில் 90 வது நிமிடத்தில் கிடைத்த பனால்டி உதை மூலம் ஈரான் அணி போர்த்துக்கல் அணியுடன் சமநிலை முடிவினை பெற்றது. ஸ்பெய்ன் அணியின் நிலை இப்போது கேள்விக்கிடமாகிவிடுமோ என்ற நிலையில் இரண்டு நிமிடங்களில் ஸ்பெய்ன் அணி கோல் அடித்தது. ஆனால் மத்தியஸ்தர் அதனை ஓப் சைட் கோல் என கூறிவிட்டார். ஆனால் மீள் பரிசீலனையில் அது கோலாக அறிவிக்கப்பட ஸ்பெய்ன் அணி சமநிலை முடிவினை பெற்றுக் கொண்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் சமநிலை முடிவு கிடைக்கப்பெற்றது. ஆனால் ஈரான் மற்றும், மொரோக்கோ அணிகள் விளையாடிய விதம் மிகவும் அபாரமாக அமைந்தது. அதிலும் ஈரான் அணி போர்த்துக்கல் அணியுடன் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக காணப்பட்டது. கடுமையாக போராடியிருந்தார்கள்.

ஸ்பெய்ன் அணி குழு B இல் முதலிடத்தை பெற்றுள்ளது. சம புள்ளிகளை போர்த்துக்கல் அணியுடன் பெற்றது. கோல் வித்தியாசமும் சமனாகவே காணப்பட்டது. கூடுதலான கோல்கள் அடித்த அணி என்ற அடிப்படையில் முதலிடத்தை பெற்றுள்ளார்கள். ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கிடையிலான முதற் போட்டியும் மிகவும் விறுவிறுப்பானதாக காணப்பட்டது. 3-3 என்ற சமநிலை முடிவு கிடைத்தது. ஸ்பெய்ன் அணியின் வீரர்கள் இணைந்து கோல்களை அடிக்க, உலகின் தலை சிறந்த வீரரான நான் சும்மாவா என்றது போல கிறிஸ்டியானோ ரொனால்டோ தனித்து மூன்று கோல்களை அடித்து போட்டியினை சமன் செய்தார். ஸ்பெய்ன் அணி ஈரான் அணிக்கு ஒரு கோலை மாத்திரமே அடிக்க முடிந்தது. ஈரான் அணி அந்தளவுக்கு சிறப்பாக விளையாடியது.

போர்த்துக்கல் அணி மொரோக்கோ அணியுடன் 1-0 என வெற்றி பெற்றுக்கொண்டது. போர்த்துக்கல் அணிக்கு இந்த வெற்றியும் போராட்டமான வெற்றியாகவே அமைந்தது. இலகுவாக அமையவில்லை. ஆக இந்தக் குழுவின் போட்டிகளை பார்க்கும் போது நான்கு அணிகளுமே சமபல அணிகளாகவே தென்படுகின்றன. இந்த குழுவில் ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் அணிகள் வெற்றிகளை பெற கஷ்டப்பட்டது, குழு A இன் அணிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். குழு A இல் முதலிடத்தை பெற்றுள்ள உருகுவே அணி போர்த்துக்கல் அணியுடன் ஒப்பிடும் போது பலம் குறைவான அணி. ஆனால் அவர்கள் முதல் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்கள். எனவே தற்போதைய நிலையில் பார்க்கும் போது உருகுவே அணி பலமான அணியாக காணப்படுகிறது. தரப்படுத்தல்களில் போர்த்துக்கல் அணி நான்காமிடத்திலும், உருகுவே அணி பதின்நான்காமிடத்திலும் காணப்படுகின்றன. குழு நிலை போட்டிகள் நிறைவடைந்த பின்னர் இன்றைய நிலையில் பந்தயக்காரர்கள் போர்த்துக்கல் அணிக்கு உலக கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை ஒன்பதாமிடத்திலும், உருகுவே அணிக்கு பத்தாமிடத்திலும் வழங்கியுள்ளார்கள். எனவே போர்த்துக்கல் அணியின் நிலையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாம் சுற்று மோதல் மிகவும் கடுமையாக இருக்கும். ஒரு அணி மட்டுமே வெல்ல முடியுமென்ற நிலையில் பலமான ஒரு அணி உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேறப்போகிறது என்பது மட்டும் உண்மை. ஆனால்  உலகின் தலை சிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய காலத்தில் நல்ல முறையில் சாதிக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு நான்காமிடத்தை பெற்றுக்கொண்டார்கள். அடுத்த உலக கிண்ண தொடரில் இரண்டாம் சுற்றுடன் வெளியேறினார்கள். கடந்த முறை முதல் சுற்றுடன் வெளியேறினார்கள். எனவே இம்முறை ரொனால்டோ அந்த நிலைமையை மாற்ற கடுமையாக போராடுவார் என நம்பலாம்.

ஸ்பெய்ன் மற்றும் ரஸ்சியா அணிகளுக்கிடையிலான இரண்டாம் சுற்றுப் போட்டி என பார்க்கும் போது ஸ்பெய்ன் அணிக்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த குழு நிலை போட்டிகளில் இவர்கள் தடுமாறிய போதும் பந்தயக்ககாரர்கள் உலகக்கிண்ணத்தை வெற்றி பெற வாய்ப்புள்ள முதல் நாடக ஸ்பெயினை தரமுயர்த்தியுள்ளார்கள். உலகக்கிண்ணம் ஆரம்பிக்க முன்னர் மூன்றாமிட வாய்ப்பே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ரஸ்சியா அணி போராடக்கூடிய பலமான அணியாக காணப்பட்ட போதும், உருகுவே அணியுடன் அவர்கள் அடைந்த 0-3 என்ற தோல்வி அவர்கள் ஸ்பெய்ன் அணிக்கு பெரும் சவாலாக அமைய மாட்டர்கள் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் நாட்டில் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளோம் என்று நம்பிக்கை, மொரோக்கோ அணி ஸ்பெய்ன் அணியை தடுமாற வைத்தது, எனவே எங்களாலும் முடியும் என்ற நம்பிக்கை போன்றவை ரஸ்சியா அணிக்கு பலத்தை வழங்க ஸ்பெய்ன் அணிக்கு சவால்களாக அமையும். தரப்படுத்தல்களில் ஸ்பெய்ன் அணியின் இடம் 10. ரஸ்சியாவின் இடம் 70. இந்த நிலையினை பார்க்கும் போது ஸ்பெய்ன் அணி இந்த போட்டியில் தோல்வியினை சந்திக்குமென கூற முடியுமா?

ஐந்தாவது உலக கிண்ண தொடரில் விளையாடியுள்ள மொரோக்கோ அணியின் விளையாட்டு சிறப்பாக அமைந்ததிருந்தது. இவர்கள் ஏற்கனவே ஒரு  தடவை இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்கள். பலமான ஸ்பெய்ன் அணியுடன் சமநிலை முடிவு என்பது நல்ல பெறுதியே. ஈரான் அணியுடன் இவர்களால் வெற்றி பெறமுடியவில்லை.

ஈரான் அணிக்கு இந்த உலகக் கிண்ணம் சிறப்பான உலகக்கிண்ணமென கூற முடியும்.  ஐந்தாவது உலகக்கிண்ண தொடரில் விளையாடியுள்ள இவர்கள்,  இந்த உலகக்கிண்ண தொடரில்தான் ஒரு வெற்றி மற்றும் ஒரு சமநிலை முடிவினை பெற்றுள்ளார்கள். அதுவும் பலமான அணிகளுடன் என்பது முக்கியமானது. ஆசிய அணியொன்று வளர்ச்சிப்பாதையில் வருகின்றது. இவ்வாறே இவர்கள் தொடர்ந்தும் சிறப்பாக விளையாடினாள் அடுத்த உலக கிண்ண தொடர் கட்டாரில் நடைபெறும் போது இன்னமும் முன்னேற்றங்களை காண முடியும்.

 

போட்டி முடிவுகள்

 

மொரோக்கோ                         0-1          ஈரான்

போர்த்துக்கல்                          3-3          ஸ்பெய்ன்

போர்த்துக்கல்                          1-0          மொரோக்கோ

ஈரான்                                                0-1         ஸ்பெய்ன்

ஸ்பெய்ன்                                     2-2          மொரோக்கோ

போர்த்துக்கல்                          1-1          ஈரான்

 

புள்ளிப்பட்டியல்

 

 

 

ஸ்பெய்ன்                                     3              1              2              0              6              5              1              5

போர்த்துக்கல்                          3              1              2              0              5              4              1              5

ஈரான்                                               3              1              1              1              2              2              0              4

மொரோக்கோ                         3              0              1              2              2              4              -2            1

(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், வாங்கிய கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

 

இரண்டாம் சுற்றுப் போட்டிகள்

30 ஜூன்  2018 - 11.30 PM - உருகுவே எதிர் போர்த்துக்கல்

01 ஜூலை  2018 - 7.30 PM - ரஸ்சியா எதிர் ஸ்பெய்ன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .