2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக்கிண்ணம் 2018 - காலிறுதி 03

Editorial   / 2018 ஜூலை 07 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ச.விமல்

2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் என எதிர்வு கூறப்பட்ட முக்கிய முதன்மை அணிகள் எல்லாம் உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் ஐரோப்பியா அணிகள் மோதவுள்ள காலிறுதிப்போட்டிகள் இரண்டு மீதமுள்ளன. இவற்றுள்ள் தற்போது உலகக்கிண்ணத்தை வெற்றி பெற மூன்றாமிட  வாய்ப்புகள் உள்ள அணியாக கருதப்படும் இங்கிலாந்து அணி சுவீடன் அணியினை எதிர்கொள்ளவுள்ளது. உலகக்கிண்ண போட்டிகளின் முடிவுகள் காரணமாக எதனையும் சொல்ல முடியாத நிலையிலேயே முழு உலகமும் காணப்படுகிறது. எனவே இன்றைய போட்டியும் கூட விறுவிறுப்பாகவே அமையவுள்ளது.

இங்கிலாந்து அணி இரண்டாம் சுற்றில் கொலம்பியா அணியினை வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவானது. இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி மிகவும் கடுமையான மோதலாக காணப்பட்டது. சமநிலையில் நிறைவடைந்த போட்டியில் பனால்டி உதையின் மூலம் 4-3 என இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த அணிகளுக்கான போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திய போதும் கொலம்பியா அணி சிறப்பாக விளையாடியது. இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் அடித்த பனால்டி கோல் மூலம் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. போட்டி முடிவடையப் போகிறது. இங்கிலாந்து அணிக்கு வெற்றி உறுதியென்ற நேரத்தில் கொலம்பியா அணி சமநிலை கோலை அடித்தது. மேலதிக நேரத்திலும் இரு அணிகளும் கோல்களை அடிக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஒன்பதாவது தடவையாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணி முதற் தடவையாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

கடந்த முறை காலிறுதிப்போட்டியில் பிரேசில் அணியிடம் தோல்வியடைந்த கொலம்பியா அணி இம்முறை இரண்டாம் சுற்றுடன் வெளியேறியுள்ளது. கொலம்பியா அணி இம்முறை பலமான அணியாகவே களமிறங்கியது. ஆனால் எதிர்பார்த்தளவுக்கு அவர்களால் வெற்றிகளை பெறமுடிடியவில்லை. ஆனாலும் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களின் முக்கியமான வீரரான ஜேம்ஸ் ரொட்ரிகாஸ் உபாதை காரணமாக விளையாட முடியாமல் போனது, இவர்கள் தடுமாறவும், இன்னமும் முன்னோக்கி செல்லவும் தடையாக இருந்தது. அவர் அணியில் இருந்திருந்தால் சிலவேளைகளில் கொலம்பியா அணிகளின் போட்டிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.

சுவீடன் அணி 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் காலிறுதிப்போட்டி வாய்ப்பினை பெற்றுள்ளார்கள். கடந்த இரண்டு உலகக்கிண்ண தொடர்களில் விளையாடாதசுவீடன் அணி இம்முறை நேரடியாக காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவானது.  இவர்கள் உண்மையிலேயே பலமான அணிதான். நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகளை வெளியேற்றி உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெற்றவர்கள் இவர்கள். ஆனாலும் இம்முறை உலகக்கிண்ண தொடரில் இதுவரை வென்ற அணிகள்  முக்கியமான பெரிய அணிகள் இல்லை. முதல் சுற்றுடன் வெளியேறிய ஜேர்மனி அணி இவர்களை வெற்றி பெற்றுள்ளது. எனவே சுவீடன் அணி தற்போது பலமான அணியினை சந்திக்கவுள்ளார்கள்.  சுவீடன் அணி சுவிற்சலாந்து  அணியினை இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 1 கோலினால் வெற்றி பெற்றது சுவீடன் அணி.  சுவிற்சலாந்து  அணி பலமான அணியாகவே இம்முறை களமிறங்கியது. ஆனாலும் கூட இரண்டாம் சுற்றினை அவர்களால் தாண்ட முடியவில்லை. 1954 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவர்கள் இன்னமும் இரண்டாம் சுற்றினை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மற்றும் சுவீடன் அணிகளுக்கான இன்றைய காலிறுதிப் போட்டி இங்கிலாந்து அணிக்கு முக்கியமாக அமையவுள்ளது. 1966 ஆம் ஆண்டின் உலக சம்பியன் இங்கிலாந்து அணி இம்முறை உலகக்கிண்ண தொடரை வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. பலமான அணிகள் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாய்ப்பை அவர்கள் சரியாக பாவிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளும் இம்முறை அதிகமாகவே காணப்படுகின்றன. சுவீடன் மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஒப்பீட்டில் இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றி பெறுமென்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், எதிர்பார்ப்புகள் அனைத்துமே தலைகீழாக மாறும் நிலையில், இந்தப் போட்டி பற்றி சொல்வதும் கடினமே. இங்கிலாந்து அணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரை இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்றதில்லை. சுவீடன் 1994 ஆம் ஆண்டு அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. எனவே நீண்ட நாட்களுக்கு பின்னர் இரண்டு அணிகளும் அரை இறுதிப்போட்டிகளை குறிவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற அணி என்ற பெயரை பெற்றுக்கொள்ளும். எனவே அவர்களின் முன்னேற்றத்துக்கான எடுத்துக்காட்டாகவும் அது அமையும்.

இரண்டு அணிகளும் உலகக்கிண்ண தொடரில் பங்குபற்றிய இரண்டு போட்டிகளும் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இம்முறை முடிவினை தரப்போகும் போட்டியில் இரண்டு அணிகளும் மோதவுள்ளன. பிரபலம் குறைந்த வீரர்கள். இந்த இரண்டு அணிகளது வெற்றி தோல்விகள் பற்றி பேசப்பட்டது குறைவு. ஆனாலும் இங்கிலாந்து அணியின் வீரர்கள், சுவீடன் அணியுடன் ஒப்பிடும் போது  பிரபல வீரர்களாவே உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்படுத்தல்களில் முதலிடத்திலும், சுவீடன் அணி தரப்படுத்தல்களில் 24 ஆமிடத்திலும் காணப்படுகின்றன. இரண்டு ஐரோப்பிய அணிகள். இனி வேறு கண்ட அணிகள் என கூற வேறு எந்த அணிகளுமில்லை. இன்றைய போட்டியில், தெரிவுகாண் போட்டிகளில் பிரான்ஸ், இத்தாலி அணிகளை சுவீடன் அணி வென்றது போல இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றுவிடுமோ என்ற பயம் இல்லாமலும் இல்லை. இங்கிலாந்து அணி இதுவரையில் நல்ல பலமான அணி ஒன்றினை வெல்லவில்லை. பெல்ஜியமணியுடன் தோல்வியடைந்தார்கள். எனவே இவர்கள் சுவீடன் அணியினை வெல்வார்கள் என அடித்துக்கூற காரணங்கள் இல்லை.

இந்த மூன்றாவது காலிறுதிப்போட்டியில்  வெற்றி பெறும் அணி ரஸ்சியா, குரேஷியா அணிகளுக்கான போட்டியில் வெற்றி பெறும் அணியினை சந்திக்கவுள்ளார்கள். எனவே இந்தப்போட்டியில் வெற்றி பெற்றாலும் அரை இறுதிப் போட்டியிலும் போராட வேண்டிய நிலை உருவாகும். எதிர்பார்ப்புகளை தோற்கடித்துவரும் இந்த உலகக்கிண்ண தொடரின் இன்றைய  போட்டியின் முடிவை கூட போட்டி முழுமயாக நிறைவடையும் வரை பொறுத்திருந்தே அறிய முடியும். இரவு 7.30 இற்கு இங்கிலாந்து மற்றும் சுவீடன் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பிக்கவுள்ளது.

 

இரண்டாம் சுற்றின் முடிவுகள்

சுவீடன் Vs சுவிட்சர்லாந்து 1 - 0

கொலம்பியா Vs  இங்கிலாந்து * 1 - 1

(பனால்டி இங்கிலாந்து 4 , கொலம்பியா 3)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .