2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: மொரோக்கோ

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச.விமல்

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், தொடர்ச்சியாக அணிகள் பற்றிய விபரங்கள் வெளியாகுகின்றன.   

இவ்வரிசையில் முதல் அணியாக   உலகக் கிண்ணத்தை இம்முறை நடாத்தும் ரஷ்ய அணி பற்றிய விபரங்கள் முதலாவதாக வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது அணியாக மொரோக்கோ அணி பற்றி இங்கு குறிப்பிடப்படுகிறது.  

மொரோக்கோ அணி ஆபிரிக்க வலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓரணி. 30 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் உலகக் கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். 1998 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலக கிண்ண தொடரில் குழு நிலை தொடருடன் வெளியேற்றபப்ட்ட பின்னர் மீண்டும் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் இம்முறை உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

 53 அணிகள் மோதும் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து இவர்கள் குழு நிலை போட்டிகளில் முதலிடத்தை பெற்று உலக கிண்ணத்துக்கு தெரிவானார்கள். ஆபிரிக்க வலய அணிகளில் இறுதி 26 இடங்களைப் பெற்ற அணிகள் மோதி அவற்றில் 13 அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகின.  அந்த 13 அணிகள் முதல் 27 அணிகளுடன் இணைந்து 40 அணிகளாகின. அவை ஒவ்வொன்றும் தமக்குள் தங்கள் நாட்டிலும் வெளிநாட்டிலும் என மோதி வென்ற 20 அணிகள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டன.

இத்தொடரில் முதற் போட்டியில் 2-0 என வெற்றி பெற்ற மொரோக்கோ அணி இரண்டாவது போட்டியில் ஈகுவோட்டோரியல் குயினியா அணியிடம் 1-0 என தோல்வியடைந்த போதும் மொத்த கோல்களின் படி வெற்றி பெற்றது. குழு நிலையில் ஐவரிகோஸ்ட், கபோன், மாலி ஆகிய அணிகளுடன் இடம்பிடித்தது. இந்த அணிகளுடன் விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றிகளையும் மூன்று சமநிலை முடிவுகளையும் பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றதன் மூலம் உலகக் கிண்ண தொடருக்கு தெரிவானது. ஐந்து குழுக்களிலும் முதலிடங்களை பெறுமணி உலக கிண்ண தொடருக்கு தகுதி பெறும்.

1970 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடருக்கு தகுதிபெற்ற மொரோக்கோ அணி இதுவரை நான்கு உலக கிண்ணth தொடர்களில் மட்டுமே பங்குபற்றியுள்ளது. இது ஐந்தாவது உலகk கிண்ண தொடராகும். 1986 ஆம் ஆண்டு உலக கிண்ணத் தொடரில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். மற்றைய மூன்று உலக கிண்ண தொடர்களிலும் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள்.  நான்கு உலகக் கிண்ண தொடர்களில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள மொரோக்கோ அணி இரண்டு வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளது. நான்கு சமநிலையான முடிவுகளை பெற்றுள்ள அதேவேளை ஏழு தோல்விகளை சந்தித்துள்ளார்கள். உலக கிண்ண தரப்படுத்தல்களின் படி 10 புள்ளிகளை பெற்று 44வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

குழு பியில் இடம்பிடித்துள்ள மொரோக்கோ அணி போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய மிகப் பலமான அணிகளுடன் இடம்பிடித்துள்ளது.  நான்காவது அணியாக ஈரான் அணி இந்தக் குழுவில் இடம் பிடித்துள்ளது. மொரோக்கோ அணியிலும் பார்க்க மற்றைய மூன்று அணிகளும் பலமானவையாகவே காணப்படுகின்றன. மொரோக்கோ அணி தரப்படுத்தலில் 39 வது இடத்திலுள்ள அணி. ஈரான் அணி 34 ஆம் இடம். போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் முறையே மூன்றாம் மற்றும் ஆறாமிடங்களிலுள்ள அணிகள். இந்த இரண்டு அணிகளும் இம்முறை உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுமென நம்பப்படுகிற அணிகள். எனவே இம்முறையும் மொரோக்கோ அணி முதல் சுற்றுடன் வெளியேற்றப்படுவார்கள் என்பதனை தாண்டி எதனையும் கூற முடியாது. கட்ந்தாண்டு விளையாடிய 13 போட்டிகளில் எட்டு போட்டிகளில் இவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள். பலமான அணிகளை இவர்கள் சந்திக்கவுமில்லை. எனவே இவர்கள் பெரியளவில் சாதிப்பார்கள் என கூற முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

உலகக் கிண்ண குழு நிலையில் வெற்றிபெற்ற அதாவது முதலிடத்தை பெற்ற முதலாவது ஆபிரிக்க கண்ட அணி என்ற பெயரை மொரோக்கோ அணி கொண்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு போர்த்துக்கல், இங்கிலாந்து மற்றும் போலந்து அணிகளை தாண்டி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.  1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போர்த்துக்கல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவான முதலாவது ஆபிரிக்க அணி என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டது.  1986 ஆம் ஆண்டு மற்றைய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போல இம்முறையும் வழங்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு கூட மிகப் பெரியதே.

பந்தயக் காரர்கள் 1-500 என்ற மிகப் பெரிய உலக கிண்ண வெற்றி வாய்ப்பை இவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். ஈரானுக்கு முன்னதாக வாய்ப்புகளை இவர்களுக்கு வழங்கியுள்ளதனால் ஈரானை இவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மாத்திரமே காணப்படுகிறது. உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள அணிகளில் மொரோக்கோ அணிக்கு 24ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது.  இது இவர்கள் முதல் சுற்றுடன் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலையைக் காட்டுகிறது.

ஆபிரிக்காவின் பலமான அணியாக திகழ்ந்த மொரோக்கோ அணி கடந்த காலங்களில் பலமற்று காணப்பட்ட போதும் இப்போது மீண்டும் உலக கிண்ணத்தில் கால் பதித்துள்ளார்கள். இவர்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனாலும் எதிராணிகளுக்கு கடும் சவால்களை வழங்கினாலே அது வெற்றியாக அவர்களுக்கு அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .