2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனானது இலங்கை

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 28 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச.விமல்

இலங்கை, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்குபற்றிய முத்தரப்பு ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில்  இலங்கை அணி சம்பியனாகியது. இறுக்கமான தொடராகவே இந்தத் தொடர் நிறைவடைந்தது. ஆனால் இறுதிப் போட்டி இலங்கை அணிக்கு இலகுவாக அமைந்தது. இலங்கை அணி,  முழுமையான அணியாக இந்தத் தொடரில் பங்குபற்றவில்லை. புதிய வீரர்கள் அந்த வாய்ப்புகளை சரியாக பாவித்து தங்கள் வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள இது நல்ல தொடராக அமைந்தது. அனுபவமற்ற வீரர்கள். சிரேஷ்ட வீரர்களிடமிருந்து இன்னும் பழகிக்கொள்ள வேண்டுமென்பது வெற்றிக்கிண்ணம் வழங்கும் போது விளங்கியது.

இலங்கை அணி இலகுவாக இறுதிப் போட்டிக்குள் வர முடியவில்லை. சிம்பாப்வே அணியுடன் முதற் போட்டியில் வெற்றிபெற்று, அடுத்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்தபோதும் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியை மீண்டும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் தனது இடத்தை ஓரளவுக்கு உறுதி செய்தது. சிம்பாப்வே அணியுடனான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இது, இலங்கை அணிக்கு அழுத்தத்தை வழங்கினாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான வெற்றி  ஒரு ஓட்டத்தினால் மட்டுமே கிடைத்தது.

பலமாகத் தெரிந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, மழை குழப்பிய போட்டியில் சிம்பாப்வே அணியுடன் தோல்வியைச் சந்தித்து, இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது. முன்னதாக இரண்டு அணிகளும் மோதிய போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. ஆக இந்தத் தொடர் மிகக் கடுமையான தொடராக அமைந்தது. இலங்கை அணியும் கூட மயிரிழையில் தப்பித்து தொடரைக் கைப்பற்றியது.

சிம்பாப்வே அணி மிகுந்த போட்டி ஒன்றை வழங்கியது. ஆனால் இலங்கை அணிக்கு அவர்களினால் பெரிய அழுத்தத்தை வழங்க முடியவில்லை. முதற் போட்டியும் இறுதிப் போட்டியும் மிக இலகுவாக இலங்கை அணிக்கு அமைந்தது. இலங்கை அணிக்கு அழுத்தத்தை வழங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சிம்பாப்வே அணியுடன் தடுமாறிப்போனது. இந்தத் தொடரில் வெற்றி தோல்விகளைத் தாண்டி இலங்கை அணியின் வீரர்கள் எவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்பது முக்கியமாக அமைந்துள்ளது. பலமில்லாத அணிகளுடன் இரண்டாம் தர அணி விளையாடினாலும் கூட வெற்றிகள் என்பதும், வீரர்களின் பெறுதிகள் என்பதும் இங்கே முக்கியமாக அமைந்துள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தளவில், டெஸ்ட் தொடர் போன்றே ஒரு நாள் போட்டித் தொடரிலும் அசேல குணரட்ன  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். சகலதுறை வீரர் ஒருவர் அணிக்குள் வந்துள்ளார் என்பது பலமே. இவரின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்துள்ளது. எட்டு விக்கெட்டுகளை இந்தத் தொடரில் கைப்பற்றியுளார். இவரின் பந்து வீச்சு மாற்றங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அண்மைக்காலங்களில், மிதவேகப் பந்துவீச்சாளர்கள் சர்வதேசக் கிரிக்கெட்டில் பெரியளவில் பந்துவீச்சுக்காகப்  பயன்படுத்தப்படுவதில்லை. இதனைக் காரணமாக வைத்து இவரை அணியால் நீக்கலாம். ஆனால் இவ்வாறான பந்துவீச்சாளர்கள் அணிக்குத் தேவை. பின் மத்திய வரிசையில் இவ்வாறான வீரர் ஒருவர் தேவை. சரியாக துடுப்பாடவில்லை. இதனை காரணமாக வைத்தும் கூட அணியால் நிறுத்தலாம். அண்மைக்காலமாக எதற்க்காக அணியில் சேர்க்கிறார்கள், நிறுத்துகிறார்கள் என்பது தெரியாமலே உள்ளது.

இந்தத் தொடர் முழுவதும் ஆரம்பத் துடுப்பாட்டம் மிக மோசமாகவே அமைந்தது. குசல் பெரேரா நல்ல முறையில் துடுப்பெடுத்தாடவில்லை. தனஞ்சய டி சில்வா இரண்டு அரைச்சதங்களைப் பெற்றார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கு, குசல் பெரேராவுக்குப் பதிலாக இன்னுமொரு வீரரைத் தேட வேண்டி வருமோ என்ற சந்தேகம் நிச்சயம் உள்ளது. ஏன் அணிக்குள் தெரிவானார் என்று தெரியாமலே வந்த நிரோஷான் டிக்வெல்ல இந்தத் தொடரில் இலங்கை அணி சார்பாக கூடுதல் ஓட்டங்களைப் பெற்றவர். மூன்றாமிலக்கத்தில் துடுப்பெடுத்தாடியிருந்தாலும் கூட இவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரே. தெரிவுக்குழுவினர் அவரை தெரிவு செய்தமைக்கு சரியான காரணம் உள்ளது என நிரூபித்துள்ளனர்.

 தொடர் நாயகன் விருதை குசல் மென்டிஸ் பெற்றுக்கொண்டார். தொடரில் நான்காவது கூடுதல் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றாலும், கூடுதல் சராசரியைப் பெற்றுள்ளார். அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் மீண்டும் அணிக்குள் வர குசல் மென்டிஸ் மூன்றாமிலக்கத்துக்கு முன்னேறினால் யார் வெளியே போவது? குசல் பெரேராவா அல்லது நிரோஷான் டிக்வெல்லவா? உபுல் தரங்க அணிக்கு தலைமை தாங்கினார். உண்மையில் இளம் வீரர் ஒருவருக்கு தலைமைப் பொறுப்பை வழங்கியிருக்கலாம். இவர் அணியின் தலைவராக இருந்து அணியால் நீக்கப்படப்போகின்றாரா அல்லது இவரை ஆறாமிலக்க வீரராக அணியில் வைத்துக் கொண்டு இருக்கப்போகின்றார்களா? உபுல் தரங்கவின் துடுப்பாட்டம் மோசம் எனக் கூற முடியாது. அவரின் துடுப்பாட்டம் இந்தத் தொடரில் கைகொடுத்தது. ஆனால் அவர் பின் மத்திய வரிசைக்கு பொருத்தமானவரா என்பதுதான் மீண்டும் கேள்வி.

நான்கு பந்துவீச்சாளர்களில், நுவான் குலசேகர குலசேகர   எட்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இவரை அணியில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். வேறு யாருமில்லாமல் அணிக்குள் சேர்த்தார்கள். தன்னுடைய பங்கைச் சிறப்பாககச் செய்துள்ளார். இலங்கை அணி சார்பாக கூடுதல் விக்கெட்டுகளை கைபற்றிக்கொண்டார். சுரங்க லக்மால் ஏழு  விக்கெட்டுகளை கைபபற்றினார். இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களே சிறப்பாக பந்து வீசியுள்ளனர். இவர்கள் இருவரும் நிச்சயமாக தொடரும் பட்சத்தில் இன்னுமிரு சுழற்பந்து வீச்சாளர்களையும் அணியில் இணைக்கலாம். ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டும் விளையாடும் ஆடுகளங்களில் இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளரை இணைக்கலாம். துஸ்மந்த சமீர , தம்மிக பிரசாத் ஆகியோர் உபாதையிலிருந்து மீண்டு வந்தால் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு முழுமை பெறும். துஸ்மந்த சமீர, தம்மிக பிராசத், நுவான் குலசேகர, அசேல குணரட்ன ஆகியோருடன் அஞ்சலோ மத்தியூஸ் என்பது மிகச்சிறந்த கலவை.

இவர்களுடன் சச்சித் பத்திரண அணிக்கு தேவையானவர். இந்த தொடரில் அதிகம் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் போனாலும் இவரின் துடுப்பாட்டம் அணிக்கு பலத்தைத் தரும். வேகமாக அடித்தாடக்கூடியவர். நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜெப்றி வன்டேர்சே கிடைத்த வாய்ப்பைப் பாவித்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.   ஷெகான் ஜயசூரிய, கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார். தனஞ்சய டி சில்வாவின் பந்து வீச்சும் அதிகம் பாவிக்கப்படவில்லை. 

ஆக இலங்கை அணி முழுமை பெறும் ஒரு நிலை தென்படுகிறது. அடுத்த தொடர் தென்னாபிரிக்காவில். அந்தத் தொடருக்கு இந்த முழுமை போதாது. ஆனால் அணியை உருவாக்கும் முயற்சியில் இவை சாதரணமாக நடைபெறும். இனியாவது வீரர்களை மாற்றாமல் தொடர்ந்தால், ஓரளவு முன்னேற வாய்ப்புகள் உண்டு. ஆனால் அடுத்த அணித் தெரிவில் எத்தனை வீரர்கள் காணாமல் போவார்கள் எத்தனை புதிய வீரர்கள் அணிக்குள் வருவார்கள் என்பது தெரிவுக்குழுவுக்கே வெளிச்சம். 

இலங்கை அணியைத் தாண்டி, இந்தத் தொடர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சில புதிய வீரர்களை இனங்காட்டியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் சதமடித்த எவின் லூயிஸ், இந்தத் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 147 ஓட்டங்களை பெற்றதுடன், தொடரில் கூடுதல் ஓட்டங்களை பெற்று ஆரம்ப இடத்தை உறுதி செய்துள்ளார். இந்த தொடரில் அறிமுகத்தை மேற்கொண்ட  ஷாய் ஹோப், இரண்டாவது கூடுதல் ஓட்டங்களை பெற்று விக்கெட் காப்பாளருக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். சுழற் பந்துவீச்சாளராக அறிமுகத்தை மேற்கொண்ட ஆஷ்லி நேர்ஸ் சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடத்தை உறுதி செய்துள்ளார்.

நல்ல பெறுதிகளை பெற்ற போதும் சிம்பாவே அணியுடனான தோல்வி, சமநிலை முடிவு காரணமாக இறுதிப்போட்டி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தது. ஆனாலும் கூட பழைய வீரர்களை இனியும் நம்பாமல் புதிய வீரர்களை முயற்சித்து இருக்கிறார்கள். ஆனாலும் இந்த வீரர்களுக்கும் பழைய வீரர்களுக்கான நிலை வராதா என்பது சந்தேகமே.

சிம்பாவே அணி இலகுவான அணியாக எடுக்க முடியாத அணி என்பதனை நிரூபித்துள்ளளது. இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றாலும் கூட இறுதிப்போட்டியில் ஆரம்ப விக்கெட்டுகளை வேகமாக கைப்பற்றி அழுத்தம் ஒன்றை ஏற்படுத்தினார். தவிர, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் சிறப்பான ஒரு வெற்றியையும் பெற்றுக்கொண்டதுடன், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் சமநிலையில் நிறைவு செய்த போட்டியில் மிகச்சிறப்பாக போராடியிருந்தது. இது போன்ற போட்டி வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்தால் முக்கிய அணிகளுக்கு சவால்களை வழங்கக் கூடிய அணியாக உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

தொடரில் 100 ஓட்டங்களை பெற்றவர்கள்

எவின் லூயிஸ் (மே.இ)                  4           4              202         148         50.50     102.02   1              0             

ஷாய் ஹோப் (மே.இ)                      4           4              187         101         46.75     73.33     1              0             

நிரோஷான் டிக்வெல்ல (இல)        5           4              179         94           44.75     87.31     0              1             

குசல் மென்டிஸ்(இல)                     5           4              167         94           55.66     105.03   0              2             

சிகண்டர் ராசா (சிம்)                        5           5              163         77           54.33     77.99     0              2             

கிரேய்க் எர்வின் (சிம்)                     5           5              147         92           36.75     78.60     0              1             

தனஞ்சய டி சில்வா (இல)              5           4              139         78*         46.33     95.20     0              2             

ககிரேய்க் பிறாத்வெயிட் (மே.இ)   4           4              132         78           33.00     58.14     0              1             

ஜொனதன் காட்டர்(மே.இ)              4        4           104         54           34.66     83.87     0              1             

(வீரர், அணி, போட்டிகள், இனிங்ஸ், மொத்த ஓட்டங்கள், கூடுதல் ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)

 

தொடரில் 5 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்

ஜேசன் ஹோல்டர் (மே.இ)                 4    4    38.0      178         9              3/57       19.77     4.68

அசேல குணரட்ன (இல)                      5    4     30.0        118         8              3/10       14.75     3.93       

நுவான் குலசேகர(இல)                       5    5      40.0        180         8              2/23       22.50     4.50       

ஆஷ்லி நேர்ஸ் (மே.இ)                        4    4     38.0        186         8              3/27       23.25     4.89       

சுரங்க லக்மால்(இல)                            5    5     36.2        168         7              2/19       24.00     4.62       

சுலைமான் கப்றியல்(மே.இ)                3    3      23.1        105         6              3/31       17.50     4.53       

கார்லோஸ் பிறாத்வெயிட் (மே.இ)     4     4     34.0        198         6              4/48       33.00     5.82       

நுவான் பிரதீப்(இல)                               3    3        27.0        141         5              2/21       28.20     5.22       

(வீரர், அணி, போட்டிகள், இனிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்டுகள் , சிறந்த பந்து வீச்சு ,சராசரி, ஓட்ட சராசரி வேகம்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X