2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

டோணியின் காலம் முடிந்து விட்டதா?

Shanmugan Murugavel   / 2017 நவம்பர் 10 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக இருபதுக்கு -20ஐப் பெற்றுக் கொடுத்த மகேந்திர சிங் டோணியின் காலம் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் முடிந்து விட்டதா என்ற குரல்கள் அண்மைக் காலத்தில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

அதுவும், ராஜ்கோட்டில் அண்மையில் இடம்பெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியைத் தொடர்ந்தே, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் டோணி ஓய்வுபெற வேண்டுமென என்ற கோரிக்கைகள் அழுத்தம் பெறத் தொடங்கியுள்ளன.

குறித்த போட்டியின் இறுதி ஸ்கோர் விபரத்தைப் பார்த்தால், 37 பந்துகளில் 49 பந்துகளைப் பெற்ற டோணி சிறப்பாக விளையாடியுள்ளார் என எண்ணத் தோன்றும். ஆனால், சற்று நுணுக்கமாக ஆராய்ந்தால், இப்போட்டியில் இந்தியா அடைய முடியாதளவுக்கு ஓட்ட விகிதம் அதிகரித்த பின்னரே, டோணி பெற்ற 49 ஓட்டங்களில் 24 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தன.

இதற்கு முன்னர், 197 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி, டோணியை ஒரு முனையில் கொண்டு, இந்திய அணித்தலைவர் விராத் கோலி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும்போது, 24 பந்துகளை எதிர்கொண்ட டோணி 25 ஓட்டங்களையே பெற்றிருந்தார். அந்நேரம் கோலிக்கு அதிகமான பந்துகளை வழங்கியிருந்தால் அவர் விரைவாக ஓட்டங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகள் குறுகிய ஓவர்களையே கொண்டிருப்பதால், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் போலல்லாது, ஓட்டங்கள் பெறப்படாத ஒவ்வொரு பந்தும் ஏனைய வீரர்கள், அணி மீது தேவையில்லாத அழுத்தத்தை வழங்கும். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், நின்று நிதானமாக ஓட்ட எண்ணிக்கைக்கேற்றவாறு விளையாடுவதற்காக நேரம் இருக்கிறது. ஆனால், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் நிலைமை அவ்வாறில்லை.

இந்நிலையில், இந்தியாவின் உள்ளூர் இருபதுகுக்கு – 20 போட்டித் தொடரான இந்தியன் பிறிமியர் லீக்கில், போட்டிகளை வெல்லக்கூடியவராக டோணி இருக்கின்றார் என்றபோதும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக டோணி இருக்கின்றாரா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.  இது தவிர, கடந்த இரண்டு பருவகால இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும்படியாக டோணி பிரகாசித்திருக்கவில்லை.

271 இருபதுக்கு – 20 போட்டிகளில், 100 பந்துகளுக்கு 134.44 என்ற ஓட்டங்கள் வீதம் 5,414 ஓட்டங்களைக் குவித்துள்ள டோணி, 83 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 1,281 ஓட்டங்களை, 100 பந்துகளுக்கு 123.41 என்ற ஓட்டங்கள் வீதமே பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு உலக இருபதுக்கு – 20-க்குப் பின்னர் ஓய்வு குறித்து அறிவிப்பதாகக் கூறி, 2016ஆம் ஆண்டு உலக இருபதுக்கு – 20-க்கு தன்னை டோணி மறைமுகமாக தேர்வு செய்து கொண்டிருந்தார்.

இந்திய அணியின் பிரபல வீரர்களின் ஓய்வு என்பது சிக்கலுக்குரியதாகவே கடந்த காலங்களில் இருந்த நிலையில், களத்தில் மெதுவாகச் செயற்படுகின்றார்கள் என்பதன் காரணமாக, எதிரணி மீது அழுத்தத்தை பிரயோகிக்க முடியவில்லை எனக் கூறி, அவுஸ்திரேலியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாமில் மூன்று மூத்த வீரர்களை இடம்பெறாமல் செய்த, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் அப்போதைய தலைவரான டோணி, தனது ஓய்வு குறித்து தானே முடிவெடுப்பார் என்று சிலர் கூறுவது போல் நடப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கும்.

குறித்த மூத்த வீரர்கள் அணியில் இடம்பெறாமல் போனமைக்கு, அப்போதைய அணித்தலைவரான டோணியின் முடிவே காரணமென்ற நிலையில், தற்போதைய இந்திய அணித் தலைவரான கோலியின் ஆதரவு டோணிக்கு காணப்படுவதே டோணி தொடர்ந்தும் அணியில் இடம்பெறுவதற்கான பிரதான காரணமாக காணப்படுகிறது.

எவ்வாறெனினும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் இறுதிநேர ஓவர்களில், கோலி மைதானத்தின் எல்லையில் களத்தடுப்பில் ஈடுபடும்போது, களத்தடுப்பு நிலைகளை அமைப்பதோடு, பந்துவீச்சாளர்களோடு பேசுவது என முக்கியமான நேரங்களில் கோலியை அணித்தலைவராக செயற்பட விடாமல் டோணி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

டோணியை பிரதியீடு செய்வதற்கான அனுபவம் வாய்ந்த விக்கெட் காப்பாளர்கள் தினேஷ் கார்த்தி, ரித்திமான் சஹா, பார்த்திவ் பட்டேல், நாமன் ஒஜா மற்றும் இளம் விக்கெட் காப்பாளர்கள் றிஷப் பண்ட், சஞ்சு சாம்ஸன் என வரிசையில் இருப்பதால் பிரதியீடுக்கென ஆள் இல்லையென்று இல்லை. ஆக, இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இவர்களிலொருவர் தெரிவுசெய்யப்பட்டால், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் டோணியின் முடிவு காலம் ஆரம்பிக்கின்றது என உணர்ந்து கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .