2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பாகிஸ்தான் , மே.தீவுகள் ஒ.நா.ச போட்டித் தொடர்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இரண்டு கீழ் நிலை அணிகளுக்கிடையிலான தொடர் இது. இது கூட ஒரு விறுப்பைத் தரும் தானே? 92 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 87 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியும் உள்ளன. தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ள அல்லது தமது இடங்களை நிலைநிறுத்திக் கொள்ள இந்த தொடர் இவர்களுக்கு முக்கியமானது. ஆனால் இந்த இரு அணிகளும் வேற எந்த அணியையும் முந்தவும் முடியாது. இந்த அணிகளை வேறு எந்த அணிகளும் முந்தவும் முடியாது. பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியைச் சந்தித்தால் மாத்திரம் இந்த அணிகளில் ஒன்று முன்னோக்கி செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மாத்திரமே மேற்கிந்திய தீவுகளை பாகிஸ்தான் அணி முந்த முடியும்.

இரு அணிகளும் தடுமாறி வரும் அணிகளாக இருக்கின்றன. இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மிக மோசமாகவுள்ள பாகிஸ்தான் அணியை மீளக்கட்டியெழுப்ப இந்தத் தொடர் நல்ல முறையில் கைகொடுக்கும் என நம்பலாம். இரண்டு அணிகளுமே தங்கள் கிரிக்கெட் முகாமைத்துவ குளறுபடிகளினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அணிகள். பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் மிக மோசமாக தோல்விகளைச் சந்தித்து பின்னடைவை சந்தித்துள்ளது. அணித்தெரிவு, தலைமைத்துவம் என்பன இவர்களின் பின்னடைவுக்கான முக்கிய காரணம்.

மேற்கிந்திய தீவுகள் அணி இதே போன்ற நிலையிலேயே உள்ளது. புதிய வீரர்கள். தலைவர்  புதியவர். ஆனால் சமாளித்துக்கொண்டு செல்லும் நிலையிலுள்ளது  . முக்கிய வீரர்கள் அல்லது சிறந்த வீரர்கள் அணியில் இன்னமும் இல்லாமல் இருப்பது அணிக்கு பிரச்சினையாகவே உள்ளது. தெரிவுக்குகுழுவினரும் வீரர்களுக்கும் முகாமைத்துவத்துக்கும் உள்ள சிக்கல்கள் காரணமாக பல வீரர்களை ஒதுக்கி வருகின்றமையே அணியின் தோல்விக்கு காரணம். டரன் ஷமி போன்றவர்கள் அணிக்காக பல விடயங்களை செய்த பின்னரும் அவர்களை ஒதுக்கி வைப்பது ஏற்புடையதுதானா? அவர்கள் முகாமைத்துவ குறைகளை சுட்டிக்காட்டினால் அணியால் நீக்கப்படுவார்கள் என பழி தீர்ப்பது மிக மோசமான செயற்பாடே.

பாகிஸ்தான் அணி விபரம்

அஸார் அலி, ஷர்ஜீல் கான், பாபர் அஸாம், அஷாட் ஷபிக், சொஹைப் மலிக், சப்ராஸ் அஹமட், உமர் அக்மல், மொஹமட் றிஸ்வான், மொஹமட் நவாஸ், இமாட் வஸீம், யசீர் ஷா, ரஹாட் அலி, மொஹமட் ஆமிர், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, சொஹைல் கான். 

தலைவர் அஸார் அலி தலைவராக தேவைதானா என்ற கேள்வி நிச்சயம் உள்ளது. இவரின் தலைமையின் கீழ் தான் பாகிஸ்தான் அணி மிக மோசமான பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இவர் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகலாம் என்ற பேச்சுக்கள் அண்மைக்காலங்களில் வெளிவந்த போதும், தான் விலக மாட்டேன் என அறிவித்தார். இந்தத் தொடர் தோல்வியில் முடிவடைந்தால், அவர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தெரிவுக்குழுவினர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணியைப் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

அஸார் அலி மீண்டும் அணிக்குள் வரும் போது துடுப்பாட்டத்தில் சிறப்பாகவே செயற்பட்டார். ஆனால் அவரின் துடுப்பாட்டமும் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் முன் வரிசை துடுப்பாட்டமே மிகப்பெரியளவில் பிரச்சினையாக உள்ளது. மத்திய வரிசை ஓரளவு சிறப்பாகவே உள்ளது. அஸார் அலி, ஷர்ஜீல் கான், பாபர் அஸாம் ஆகிய மூவரும் நல்ல ஆரம்பத்தை முதல் மூன்று இடங்களில் பெற்றுக்கொடுத்தால் பெரிய ஓட்ட எண்ணிக்கையை நோக்கி நகர முடியும். இவர்கள் ஓட்டங்களை சராசரியாக பெற்று வருகின்றனர். அவற்றை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க செய்தால் மத்திய வரிசை வீரர்கள் அதனை எடுத்து செல்ல உதவியாக இருக்கும்.

நான்காமிடத்தில் சொஹைப் மலிக், ஐந்தாமிடத்தில் சப்ராஸ் அஹமட் இருவரும் நல்ல முறையில் ஓட்டங்களை பெற்று வருகின்றனர். மீண்டும் அணிக்குள் உமர் அக்மல் இணைக்கப்பட்டுள்ளார். ஏழாமிடத்தில் இவர் களமிறங்குவாரா அல்லது முன் வரிசையில் மாற்றங்கள் வருமா என போட்டிகளின் போதே அறிய முடியும். இமாட் வஸீம் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக துடுப்பாடினார். சகலதுறை வீரராக சிறப்பாக இவரை எதிர்பார்க்கலாம் என தோன்றுகிறது. 8 ஒரு நாள் சர்வதேச இனிங்ஸ்களில்  5 போட்டிகளில் ஆட்டமிழக்கவில்லை. 230 ஓட்டங்களை 76.66 என்ற சராசரியில் பெற்றுள்ளார். பந்து வீச்சு மிக அபாரமாக அமைந்துள்ளது. 11 போட்டிகளில் 16 விக்கெட்கள். 22.68 சராசரி.

வேகப்பந்து வீச்சில் மொஹமட் ஆமிர், ஹஸன் அலி, வஹாப் ரியாஸ் ஆகியோர் விளையாடும் வாய்ப்புகள் உள்ளன. மொஹமட் ஆமிரின் மீள்வருகை மிகப்பெரியளவில் சிறப்பாக அமையவில்லை. இங்கிலாந்து தொடரில் பெரியளவில் சாதிக்கவில்லை. இந்தத் தொடரில் அவர் கட்டாயம் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இங்கிலாந்துத் தொடரில் அறிமுகத்தை மேற்கொண்ட ஹஸன் அலி சிறப்பாக பந்து வீசியிருந்தார். இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவரின் சிறந்த பந்து வீச்சு தொடரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு ஓரளவு பலம் பெறும். வஹாப் ரியாஸ் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றார். அனுபவமான பந்துவீச்சாளர். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருகின்ற போதும் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் அவரால் சிறப்பாக பந்து வீசமுடியவில்லை. இவரும் சிறப்பாக பந்து வீசினால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு முழுமை பெறும். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பிரச்சினையாக உள்ளது என்பதனை உணர்ந்தே ரஹாத் அலி மற்றும் சொஹைல் கான் ஆகியோரை அணியில் தெரிவுக்குகுழுவினர் இணைத்துள்ளனர்.

மொஹமட் நவாஸ் ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றவர். அந்த தொடரில் அவரும் சிறப்பாக பந்து வீசவில்லை. ஆறு வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளமையால் சுழற்சி முறையில் அவர்கள் பாவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. சிறப்பாக பந்து வீசும் மூவர் அணியில் இடம் பிடிப்பார்கள். அல்லது நான்கு பேர் தொடர்வார்கள்.

அஷாட் ஷபிக் துடுப்பாட்டத்தில் அணிக்குள் மீண்டும் வந்துள்ளார். முன் வரிசை துடுப்பாட்ட வீரர். முதல் மூன்று  இடங்களுக்குள் மாற்றம் வர வாய்ப்புகள் உள்ளன. மொஹமட் றிஸ்வான் துடுப்பாட்ட வீரராக இங்கிலாந்துத் தொடரில் விளையாடிய போதும் பின் வரிசையிலேயே இங்கிலாந்துத் தொடரில்  இரண்டு போட்டிகளில் விளையாடினார். இந்த தொடரில் இவருக்கான வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றன. யசீர் ஷா அணிக்குள் சுழற்பந்து வீச்சாளராக தொடர்கிறார். இவரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருகின்ற போதும் ஒரு நாள் சரவதேச போட்டிகளில் சிறப்பாக அமையவில்லை. இங்கிலாந்து தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இமாட் வஸீம் அணியில் இருப்பதனால் இவருக்கான வாய்ப்புகள் குறைவே.  சொஹைப்  மலிக் அணியில் இருப்பதனால் தேவைப்படும் நேரங்களில் அவரும் பந்து வீசுவார்.

 

இந்த அணி மற்றும் வீரர்களை பார்க்கும் போது பலமான அணி என்று கூறலாம். ஆனால் வெற்றிகளை பெறமாட்டார்கள். அணியை மீண்டும் கட்டியெழுப்ப, மேற்கிந்திய தீவுகள் அணி போன்ற அணியுடன் தங்கள் சொந்த மைதானத்துக்கு ஒப்பான ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறுவதனால் வெற்றிகளை பெற்று அணியை கட்டியெழுப்பும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. வாய்பபை சரியாக பாவித்தால் தொடர் வெற்றியை பெற முடியும்.

மேற்கிந்திய தீவுகள் அணி விபரம்

ஜேஸன் ஹோல்டர் (தலைவர்), சுலைமான் பென், கார்லோஸ் பிறாத்வெயிட், கிரேய்க்  பிறாத்வெயிட், டரன் பிராவோ, ஜொனதன் கார்ட்டர், ஜோன்சன் சார்ள்ஸ், ஷனோன் கப்ரியல், அல்ஸாரி ஜோஸப், எவின் லூயிஸ், சுனில் நரைன், ஆஷ்லி  நேர்ஸ், கெரோன் பொலார்ட் , டினேஷ் ராம்டீன் , மார்லன் சாமுவேல்ஸ்

மேற்கிந்திய தீவுகள் அணி புதிய வீரர்கள் சிலரை இந்தக் குழுவில் இணைத்துள்ளது. முக்கிய வீரர்கள் சிலர் உள்ளூர் 50 ஓவர்கள் போட்டிகளில் விளையாடாத காரணத்தினால் தெரிவுக்காக கணக்கிலெடுக்கப்படவில்லை. கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

ஜேசன் ஹோல்டர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் தென்னாபிரிக்கா அணியை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு தனது அணியை அழைத்து சென்றார். அவருடைய பந்து வீச்சு சராசரியாக நல்ல முறையில் அமைந்திருந்தது. இவரின் வழி நடத்தலுக்கு மற்றைய வீரர்கள் கைகொடுத்தால் இந்த தொடரில் அவரால் ஏதும் மாற்றங்களை செய்து காட்ட முடியும்.

இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு-20 போட்டியில் அதிரடியாக சதமடித்த எவின் லூயிஸ் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். அன்றே பிளட்க்ஷர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் ஜோன்சன் சார்ள்ஸூடன் இவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது ஒரு நாள் சரவதேச போட்டி அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடி வரும் கிரேய்க்  பிறாத்வெயிட் முதற் தடவையாக ஒரு நாள் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம். சார்ள்ஸ் அல்லது லூயிஸ் சோபிக்க தவறும் பட்சத்தில் இவர் அறிமுகவார்.

அடுத்த நான்கு இடங்கள் நிச்சயமானவை. இவர்கள் நால்வரும் ஒருமித்த சிறப்பாக துடுப்பாடினால் எந்த பெரிய அணிகளையும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி கொள்ளும். டரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ, கெரோன் பொலார்ட், டினேஷ் ராம்டின் ஆகியோரே அந்த நால்வர். நால்வரில் பொலார்ட் முக்கோண ஒரு நாள் தொடரில் பெரியளவில் பிரகாசிக்கவிலை. ஆனால் மற்றைய மூவரும் சிறப்பாகவே துடுப்பாடியுள்ளனர். இதே போர்ம் தொடர்ந்தால் பாகிஸ்தான் அணியின் நிலை கவலைக்கிடமே.

அடுத்த இடத்தில அணியின் தலைவர். இவரின் துடுப்பாட்டம் அணிக்கு கைகொடுத்து வரும் ஒன்று. உலக இருபதுக்கு-20 தொடர் மூலமாக ஹீரோவாக மாறியவர் அடுத்த இடத்தில களமிறங்குபவர் கார்லோஸ் பிறாத்வெயிட். வேகப்பந்து வீச்சாளர். அதிரடியாக துடுப்பாடக்கூடியவர். துடுப்பாட்டத்தை நம்பியிருக்க முடியாது. ஆனாலும் பந்து வீச்சும் சிறப்பானது என்று சொல்வதற்கில்லை. பந்துவீச்சில் ஷனோன் கப்ரியல் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக முக்கோண தொடரில் அறிமுகத்தை மேற்கொண்டார்.   கெரோன் பொலார்ட்டுடன் இணைந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள். அணிக்கு போதுமானதுதான். ஆனால் பிறாத்வெயிட்.  எந்தளவுக்கு கைகொடுப்பார் என்பது சந்தேகம்.

 19 வயதான அல்ஸாரி ஜோஸப் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட அணிக்கான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுளார். உள்ளூர் இருபதுக்கு-20 போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசியுளார். இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தை மேற்கொண்டு மூன்று விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளராக்களில் நம்பிக்கை தரும் விதமாக யாருமில்லை. சுனில் நரையன் அணியில் உள்ள போதும் பந்து வீச்சு மாற்றத்தின் பின்னர் அவருடைய பந்து வீச்சு முழுமையாக பலமிழந்துவிட்ட்து. சுலைமான் பென் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதன்மை தெரிவு சுழற் பந்துவீச்சாளர். ஆஷ்லி நேர்ஸ் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவருக்கு அறிமுகம் வழங்கும் வாய்ப்புகளும் உள்ளன. அணியில் உள்ள இன்னுமொரு வீரர் ஜொனதன் கார்ட்டர். துடுப்பாட்ட வீரர். ஆனால் பெரியளவில் எதனையும் செய்யவில்லை. 13 போட்டிகளில் 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றவர்.

இரு அணியின் வீரர்களையும், அணியையும் பார்க்கும் போது பந்து வீச்சு மோசமாகவே உளள்து. துடுப்பாட்டம் சமபலம் என்ற நிலையிலுள்ளது. இந்த தொடர் முழுமை பெறாத இரு அணிகளுக்கிடையிலான போட்டியாகவே அமையவுள்ளது. இருபதுக்கு-20 சர்வதேசத் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இதே ஆதிக்கம் இருக்குமா என்பதும் கேள்வியே? ஆக இந்த தொடர் சமபலம் கொண்ட தொடராவே ஆரம்பிக்கின்றது. தொடர் முடிவில் என்ன முடிவு என்பதனை அறிய முடியுமே தவிர எந்த எதிர்பார்ப்பையும் கூறமுடியாது.

போட்டி அட்டவணை

செப்டம்பர் 30- ஷார்ஜா - பிற்பகல் 4.30

ஒக்டோபர் 02 - ஷார்ஜா - பிற்பகல் 4.30

ஒக்டோபர் 05 - அபுதாபி - பிற்பகல் 4.30


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .