2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிரான்ஸுக்குக் கிண்ணத்தை வழங்குவார்களா இளம் வீரர்கள்?

Shanmugan Murugavel   / 2018 ஜூன் 06 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர், ரஷ்யாவில் இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஏனைய அணிகள் பார்த்து பொறாமைப்படும் திறமையான இளம் வீரர் பட்டாளத்தை பிரான்ஸ் கொண்டுள்ளது. எவ்வாறெனினும் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தமது திறமைகளை வெளிக்காட்டுவார்களா என்பதே பிரான்ஸ் மீது காணப்படும் பிரதான கேள்வியாகக் காணப்படுகிறது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஐரோப்பாவின் குழு பியில் நெதர்லாந்து, சுவீடன் உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றிருந்த நிலையில், ஏற்கெனவே கடினமானதாகக் காணப்பட்டிருந்த குழுவில் இன்னும் போட்டி அதிகமாகக் காணப்பட்டிருந்தது. எனினும் சுவீடனுடன் அந்தாட்டில் தோல்வியடைந்ததுடன், பெலாரஸ், லக்ஸம்பேர்க் அணிகளுடனான தமது நாட்டில் இடம்பெற்ற போட்டிகளை சமநிலையில் முடித்துக் கொண்டபோதும் குறித்த குழுவில் முதலிடம் பெற்று உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றிருந்தது.

குறிப்பாக இடது, வலது பின்கள நிலைகளைத் தவிர்த்து ஏனைய அனைத்து நிலைகளுக்கும் கிலியான் மப்பே, போல் பொக்பா, அன்டோனி கிறீஸ்மன், ஹியூகோ லோரிஸ், சாமுவேல் உம்டிட்டி, ரபேல் வரானே, பெஞ்சமின் மென்டி, பிளெய்ஸி மத்தியூடி, என்கலோ கன்டே, கொரென்டின் டொலிஸோ, உஸ்மான் டெம்பிலி, நபில் பெகிர் ஒலிவர் ஜிரோட், தோமஸ் லேமர் என குப்பையாக நட்சத்திரத் தெரிவுகளை பிரான்ஸின் பயிற்சியாளர் டிடியர் டெஷம்ஸ் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இந்த நட்சத்திர வீரர்கள் அணிக்காக சிறப்பாக விளையாடுகிறார்கள் இல்லை என்பதைத் தவிர்த்து, டிடியர் டெஷம்ஸ் அவ்வீரர்களிடமிருந்து தேவையான பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்கிறார் இல்லை என்ற முக்கியமான குற்றச்சாட்டும் காணப்படுகிறது.

அந்தவகையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்காக பிரகாசிக்கும் கிலியான் மப்பே, மன்செஸ்டர் யுனைட்டட்டின் போல் பொக்பா உள்ளிட்டோர் இருந்தாலும் பிரான்ஸுக்கு முக்கியமான வீரராக அன்டோனி கிறீஸ்மன்னே காணப்படுகின்றார். தொடர்ச்சியான பெறுபேறுகளை மன்செஸ்டர் யுனைட்டட்டில் வெளிப்படுத்துவதில்லையென போல் பொக்பா மீது காணப்படும் குற்றச்சாட்டுகள் பிரான்ஸ் அணியிலும் காணப்படுகின்றது. அதுவும் போல் பொக்பா அணியில் இடம்பெறக்கூடாது என்றவரைக்குமாக அந்த எதிர்ப்பு காணப்படுகின்றது.

உலகக் கிண்ணத்தில், அவுஸ்திரேலியா, டென்மார்க், பெருவுடன் ஏறத்தாழ இலகுவான குழுவில் பிரான்ஸ் முதலிடம் பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறித்த மூன்று அணிகளில் ஏதாவதொரு அணி பிரான்ஸுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

குழுவில் முதலிடம் பிடித்தாலும் அடுத்தடுத்த சுற்றுக்களில் பலமான அணிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் பிரான்ஸ் காணப்படுகின்றது. 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றில், ஆர்ஜென்டீனா, குரோஷியா ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கின்ற பிரான்ஸ், காலிறுதியில் போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களைக் கொண்டு காணப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுடன் இம்மாதம் 16ஆம் திகதி, இலங்கை நேரப்படி 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியுடன் தனது உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில், இதுவரையில் ஒரேயொரு தடவையாக 1998ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றுள்ள பிரான்ஸுக்கு அப்போது கைகொடுத்த ஸினேடி ஸிடானாக, கிலியான் மப்பே, போல் பொக்பா, அன்டோ கிறீஸ்மன் மாறினால் இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் கைப்பற்றுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .