2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீண்டும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுமா ஸ்பெய்ன்?

Shanmugan Murugavel   / 2018 ஜூன் 13 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர், ரஷ்யாவில் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில், பந்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தமது பாணி காரணமாக கால்பந்தாட்ட உலகில் ஜாம்பவானாகவிருந்த ஸ்பெய்ன், அந்த அணியில் எஞ்சியிருக்கும் வீரர்களுக்கு இறுதி உலகக் கிண்ணத்தை வென்று கொடுக்குமா என்ற கேள்வி காணப்படுகிறது.

2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியன்களான ஸ்பெய்ன், இவ்வாண்டு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் ஐரோப்பாவின் குழு சியில் இடம்பெற்று 36 கோல்களைப் பெற்றதுடன், மூன்று கோல்களை மட்டுமே எதிரணியைப் பெற அனுமதித்து ஒன்பது போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் சமநிலை முடிவுடன் அபாரமாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றிருந்தது.

அன்ட்ரேஸ் இனியஸ்டா, சேர்ஜியோ றாமோஸ், ஜெராட் பிகே, சேர்ஜியோ புஷ்கட்ஸ், டேவிட் சில்வா உள்ளிட்ட வீரர்களுடன் புதிய வீரர்களான மார்கோ அஸென்ஸியோ, சாவுல் நிகூஸ், இஸ்கோ உள்ளிட்ட வீரர்களை இணைக்கும் போட்டிகளாக குறித்த போட்டிகளை ஸ்பெய்ன் பயன்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஸ்பெய்னின் பிரதான பலமாக பந்தைக் கட்டுப்படுத்தி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவதே காணப்படுகின்றபோதும் இதேயுத்தியை எதிரணிகளுக்கெதிராக இவ்வாண்டு உலகக் கிண்ணத்தில் பயன்படுத்தி வெற்றி வாய்ப்புகளை ஸ்பெய்ன் பெற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகின்றது. ஸ்பெய்னின் இந்த அணுகுமுறைக்கு அனுபவம் வாய்ந்த மத்தியகள வீரர்களான சேர்ஜியோ புஷ்கட்ஸ், அன்ட்ரேஸ் இனியஸ்டா, டேவிட் சில்வா ஆகியோரே முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.

எவ்வாறெனினும் ஸ்பெய்னின் குறித்த பாணியில் கிடைத்த தோல்வியாக, பந்தைக் கட்டுப்படுத்தி போட்டிகளில் ஸ்பெய்ன் ஆதிக்கத்தை செலுத்துகின்றபோதும் ஸ்பெய்னால் தற்போது கோல்களைப் பெற முடியாமலுள்ளது. ஆக, இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் பெரும்பாலான நேரங்களில் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் ஸ்பெய்ன் கோல்களைப் பெறா விட்டால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

இதற்குரிய முக்கிய பிரச்சினையாக, உலகத் தரம் வாய்ந்த கோல் காப்பாளர் டேவிட் டி கியா, பின்கள வீரர்கள் டனி கர்வகால், ஜெராட் பிகே, சேர்ஜியோ றாமோஸ், ஜோர்டி அல்பா, நாச்சோ, நாச்சோ மொன்றியல், சீஸர் அத்பிலிகெட்டா, அனுபவ மத்தியகள வீரர்கள் உள்ளபோதும் நிச்சயமிக்க மத்திய முன்கள வீரரொருவர் இல்லாத நிலை காணப்படுகின்றது.

குறித்த நிலையில், டியகோ கொஸ்டா, அல்வரோ மொராட்டா, றொட்றிகோ மொரெனோ, லாகோ அஸ்பஸ் உள்ளிட்டோர் அண்மைய போட்டிகளில் விளையாடியிருந்தபோதும் கடந்த காலங்களில் டேவிட் விலா, பெர்ணான்டோ டொரேஸ் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இவர்கள் ஏற்படுத்துவார்களா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகின்றது. ஆகையால், மார்கோ அஸென்ஸியோவை முன்கள வீரராக அண்மைய காலங்களில் பாவித்தது போலவே உலகக் கிண்ண போட்டிகளிலும் ஸ்பெய்ன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக் கூடியவை என எதிர்பார்க்கப்படும் நாடுகளைப் போன்று அனுபவத்தையும் திறமையையும் கொண்டு காணப்படும் ஸ்பெய்ன், அனைத்தையுக் ஒருங்கிணைத்தால், குழு நிலையில் போர்த்துக்கல்லை வெல்லலாம் என்பதுடன், காலிறுதிப் போட்டிகளில் ஆர்ஜென்டீனாவையும் அரையிறுதிப் போட்டிகளில் ஜேர்மனியையும் வெல்வதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

போர்த்துக்கல், ஈரான், மொராக்கோவுடன் குழு பியில் இடம்பெற்றுள்ள ஸ்பெய்ன், தமது முதலாவது குழுநிலைப் போட்டியில் இலங்கை நேரப்படி நாளை மறுதினம் 11.30 மணிக்கு போர்த்துக்கல்லை எதிர்கொள்வதோடு தமது உலகக் கிண்ணப் பயணத்தை ஆரம்பிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .