2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீண்டும் ஏறுமுகத்தில் றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2018 மார்ச் 22 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், இப்பருவகாலத்தில் மோசமான ஆரம்பத்தைக் கொண்டிருந்தமையைத் தொடர்ந்து தற்போதே தமது உண்மையான திறமையான வெளிப்பாட்டைக் காண்பிக்கின்றது.

இறுதியாக இடம்பெற்ற தமது 11 லா லிகா போட்டிகளிலிருந்து பெறக்கூடிய 33 புள்ளிகளில் 28 புள்ளிகளை றியல் மட்ரிட் பெற்றுள்ளது. லா லிகாவின் தத்தமது 11 இறுதிப் போட்டிகளில் ஓரணி பெற்ற அதிக புள்ளிகள் இதுவேயாகும்.

றியல் மட்ரிட்டுக்கு அடுத்ததாக பார்சிலோனா தமது 11 லா லிகா இறுதிப் போட்டிகளில் 24 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அத்லெட்டிகோ மட்ரிட் தமது 11 லா லிகா இறுதிப் போட்டிகளில் 22 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

எவ்வாறெனினும் குறித்த மோசமான ஆரம்பத்தின் காரணமாக தாம் கடந்த பருவகாலத்தில் வென்ற ஸ்பானிய லா லிகா பட்டத்தை பார்சிலோனாவிடம் பறிகொடுக்க வேண்டிய நிலையில் றியல் மட்ரிட் உள்ளது.

லா லிகாவில் இதுவரையில் ஒவ்வோரணியும் தலா 29 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 23 வெற்றிகளுடன் ஆறு சமநிலை முடிவுகளுடனும் பார்சிலோனா 75 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது. 19 வெற்றிகளையும் ஏழு சமநிலை முடிவுகளையும் மூன்று தோல்விகளையும் பெற்ற அத்லெட்டிகோ மட்ரிட் 64 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. 18 வெற்றிகளையும் ஆறு சமநிலை முடிவுகளையும் ஐந்து தோல்விகளையும் பெற்ற றியல் மட்ரிட் 60 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது.

இவ்வாறாக லா லிகா பட்டத்தை பார்சிலோனாவிடம் இழக்கும் நிலையில் காணப்பட்டபோதும் சம்பியன்ஸ் லீக்கை 42 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக தக்க வைக்கும் என்ற இலக்கை நோக்கி றியல் மட்ரிட் பயணிக்கின்றது.

சம்பியன்ஸ் லீக்க்கின் குழுநிலைப் போட்டிள் நடைபெற்ற கால காட்டத்திலேயே றியல் மட்ரிட்டின் மோசமான லா லிகா ஆரம்பமும் அமைந்திருந்த நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியை சமநிலையில் முடித்திருந்தாலும் அவ்வணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் தோல்வியைத் தளுவியிருந்தது.

இந்நிலையில், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் நேமரைக் கொண்டுள்ள பலமான பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மனை எதிர்கொண்டிருந்தது. றியல் மட்ரிட்டின் முகாமையாளராக ஸினடி ஸிடன் பொறுப்பேற்ற பின்னர் அடுத்தடுத்து சம்பியன்ஸ் லீக்கை வென்றபோதும் மோசமான லா லிகா ஆரம்பம், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான தோல்வி ஆகியவற்றைத் தொடர்ந்து அவருக்கான வாழ்வா/ சாவா என்றவாறான போட்டியாக இது காணப்பட்டிருந்தது.

எனினும் இத்தகைய நிலமைகளிலும் ஸினடி ஸிடன் நீக்கப்படாத நிலையில், அன்டோனியோ கொன்டேயோ அல்லது ஜொஸே மொரின்யோ போன்றோ உத்திகளைக் கையாள்பவராக அறியப்பட்டிருக்காத ஸினடி ஸிடன் நான்கு பின்கள வீரர்கள், மூன்று மத்தியகள வீரர்கள், மூன்று முன்கள வீரர்கள் என்ற முறையிலிருந்து கோல் காப்பாளர், நான்கு பின்கள வீரர்கள், நான்கு மத்தியகள வீரர்கள், இரண்டு முன்கள வீரர்களாக அணியை மாற்றினார்.

அந்தவகையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா, கரித் பேல் ஆகியோர் முன்பு முன்கள வீரர்களாக இருந்த நிலையில், கரித் பேல் மாற்று வீரராக மாற, கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கரிம் பென்ஸீமாவும் மட்டும் முன்கள வீரர்களாக செயற்பட்டனர்.

இந்த முறையின் காரணமாகவே ஏறுமுகத்தையடைந்த றியல் மட்ரிட், லா லிகா போட்டிகளிலும் ஏறுமுகத்தையடைந்ததுடன் தமது மைதானத்திலும் பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்திலும் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டிகளில் வென்று சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

குறித்த புதிய முறையில், வலது மற்றும் இடது மத்தியகள வீரர்களாக மார்கோஸ் அஸென்ஸியோவும் லூகாஸ் வஸ்கூஸும் விளையாடிய நிலையில், டொனி குறூஸ், லூகா மோட்ரிக், கஸேமீரோ ஆகிய மூன்று மத்தியகள வீரர்களில் இருவரையே களமிறக்கக் கூடியதாகவிருந்தது. இதில் பெரும்பாலும் கஸேமீரோவே அணியில் இடம்பெறாமல் போக, தடுப்பாட்டத்தின்போது தடுமாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

மேற்கூறப்பட்ட விடயம் பின்னடைவாக இருந்தபோதும் லா லிகா போட்டிகளின் ஆரம்பத்தில் இடது, வலது பின்கள வீரர்களான மார்ஷெல்லோ, டனி கர்வகால் ஆகியோர் முன்னேறிச் செல்கையில் பின்களத்தில் இடைவெளி ஏற்பட்டிருந்தது. தற்போது அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸும் ரபேல் வரானேயும் இடைவெளிகளைக் கண்காணிக்கக்கூடிய வகையில் இருப்பதால் பின்களமும் பலப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில், புதிய முறையின் கீழ் மார்ஷெல்லோ, டனி கர்வகால், கரிம் பென்ஸீமா, டொனி குறூஸ், மார்கோஸ் அஸென்ஸியோ, லூகாஸ் வஸ்கூஸ் என அனைத்துப் பகுதிகளிடமிருந்து எதிரணியின் வீரர்கள் எதிர்பார்க்கா வண்ணம் பந்துகளைப் பெறுகின்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் மேல் கோல்களை குவித்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த பருவகால சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸையே இம்முறை சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ள நிலையில், ஜுவென்டஸ் மட்டுமல்லாது எந்தவொரு அணியையும் வீழ்த்தக்கூடிய ஏறுமுகத்தில் றியல் மட்ரிட் பயணிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .