"> Tamilmirror Online || ஓடர் பிளீஸ்!
ஓடர் பிளீஸ்!

வணக்கமுங்க, என்னடா புது ஆளுனு பார்க்கின்றீர்களா.. நான் புது ஆளு இல்லைங்க உங்க மணியாட்டி.. அடபோங்க, சங்கதி...சங்கதியாய் எழுதி, அதையெயெல்லாம் வெட்டி, ஒட்டி அனுப்பினேனில்ல. அதுக்கு 2015ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில.., விழாவில், பத்திஎழுத்தாளர்களின் வரிசையில் ஒரு அவாட், (சான்றிதழ்) கிடைச்சது. அந்த மெரசலில இருக்குறப்போ... நீங்கள் எல்லாம் டீரீட் கேட்டுவிடுவிங்களோனு நினைச்சிக்கிட்டே, மணியை ஆட்ட (சங்கதியை எழுத) மணியாட்டி மறந்தேவிட்டது.  

இல்ல...இல்ல... நாங்க சங்கதினு ஒன்ன ஆரம்பிக்க, மத்தவங்க எல்லாம் யோசித்து யோசித்து மண்டையை போட்டு பிச்சிக்கிட்டு தலைப்பை தேடுவாங்கதானே. அவுங்களுக்கு ஏம்பா, கஷ்டத்தை கொடுக்கனுமுனு நினைச்சிக்கிட்டு, மணியாட்டியே கொஞ்சநாளைக்கு ஆடாமல் நின்றுவிட்டது.  

சரி... சரி கிசுகிசு கேட்பதற்கு யாருக்குதான் ஆசையிருக்காது. ஏதாவது ஒருவிசயத்தை கடல போடாட்டி, தலை, கால், மூக்கெல்லாம் வைத்து பேசாட்டி சிலருக்கு தூக்கமே வராது.  

என்னதான் வரவு-செலவுத்திட்ட (பாதீடு) விவாதமாக இருந்தாலும், யதார்த்தமான சம்பவங்களுடன் கோர்த்து, பாதீடு விவாதத்தை ஆரம்பிப்பதில், அவையில் இருக்கின்ற பலர் கில்லாடிங்கோ... கார்த்திகை மாதம் வேற, கொஞ்சம் கூதலாகதான் இருக்கும். மணியாட்டிக்கு என்னமோ சூடாதான் இருக்கு, ஏன்னா மெட்டர் கெடச்சிருச்சியே!  

அதிலையும், குழுக்களின் பிரதித்தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான செல்வம் அடைக்கலநாதன், அக்கிராசனத்துக்கு வந்துட்டா போதும், கலரியில் இல்ல, பத்திரிகையாளர்களுக்கான அறையில் இருக்கின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் எல்லாம். ‘ஆய்... நம்ம ஆளு’ என்று ரொம்பவும் பிரயாசனப்பட்டுக்கொள்வர். செல்வத்தின் சம்பாஷணை மட்டுமல்ல கண்டிப்பும் சுவாரஸ்யமாய் தான் சிலநேரங்களில் இருக்கும்.   

செவ்வாய்க்கிழமை விவாதத்தின் போது, கூட்டமைப்பின் எம்.பியான, சிவசக்தி ஆனந்தன், இது கார்த்திகை மாதம் என்பதனால், 30 வருட யுத்தத்தில் மரணமடைந்த உறவுகளுக்கும், போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு நாடாளுமன்றமும் நல்லாட்சி அரசாங்கமும் அனுமதியளிக்க வேண்டுமென வினயமாகக் கேட்டுக்கொண்டார். எனினும், விவாதம் நிறைவடையும் வரையிலும் அக்கோரிக்கைக்கு, அரசாங்கத் தரப்பிலிருந்து பதிலே வழங்கவில்லைங்கோ.   

தனதுரையை இடைவிடாத உதய கம்மன்பில, எனக்கு பேச தெரியும் ஆனால், நரிகள் மற்றும் கலவெத்தோ போன்ற மிருகங்களின் மொழிகள் தெரியாது. ஆகையால், உங்களின் கூச்சலுக்கு பதிலளிக்க முடியாது. ஆகையால், உங்களுக்கு பதிலளிப்பதற்கு நரி மொழியை கற்றுக்கொண்டு வருகின்றேன் என்றும் சொல்லிட்டாரு போங்க, அப்படி சொன்னவர், நத்தார் வரவில்லை எனினும் நத்தாருக்கு முன்னரே, நத்தார் பாப்பா பரிசு கொண்டுவந்துவிட்டாரு... ஆனால், பரிசுலதான் ஒன்னுமே இல்லையென்று சொல்லிட்டாரு.   

அது நம்ம ஆளு (குழுக்களின் பிரதிதலைவர்) அக்கிராசனத்துக்கு வந்தாலே ஒரே குசும்புதான், அவரென்னமோ, உறுப்பினர் ஒருவர் தன்னுடைய உரையை நிறைவுசெய்வதற்கான நேரம் நிறைவடைவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னரே, அறிவுறுத்தி விடுவார். அவ்வாறே சித்தார்த்தன் எம்.பியை பார்த்து கூறிவிட்டார்.  

இம்..இருக்காதே... என சித்தார்த்தன் கூற, இல்ல...இல்ல.. முடித்துகொள்ளுங்கள் என்று செல்வம் கூறிவிட்டார்.   
அவைக்கு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! எனக்கு 25 நிமிடங்கள் கிடைத்தன என சித்தார்த்தன் பதிலளிக்கையில் அப்போது இடம்பெற்ற சம்பாஷணையே சுவாரஸ்யமாகதான் இருந்தது.  

எனினும், தன்னை சுதாகரித்துகொண்ட சித்தார்தன் எம்.பி, சரி...சரி...பார்த்து செய்யுங்களேன் என வினயமாகக் கேட்க, ம்..ம்.. சரி...சரி பார்த்துசெயிறேன். நீங்கள் பேசுங்களேன் என்று செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார். அப்படியான சுவாரஸ்யங்கள் இடம்பெறும் சபையில், சபையமர்வு ஆரம்பிக்கும் முன்னர் அவைக்கு தலைமைத்தாங்க வருகின்ற சபாநாயகராக இருந்தால் என்ன, பிரதி சபாநாயகராக இருந்தாலென்ன, குழுக்களின் அவைத்தலைவராக இருந்தால் என்ன, அக்கிராசனத்தில் இருந்தவுடன் ‘ஓடர் பிளிஸ்’ என்றுதான் கூறுவர். அப்பொழுத்து சபையே கப்சுப்பென்று இருக்குமுங்கோ.  
- மணியாட்டி


ஓடர் பிளீஸ்!

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.