’சுவாதி கொலை வழக்கு’

“உளவுத்துறை”, “வஜ்ரம்” திரைப்படங்களை இயக்கிய ரமேஷ் செல்வனின் அடுத்த திரைப்படமாக “சுவாதி கொலை வழக்கு” தயாராகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் தலைப்பை அறிவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய கதையாசிரியர் ரவிஈ “டெல்லி மாதிரியான பெரிய மாநகரம் அது. காட்டிலிருந்து புலி ஒன்று, ஊருக்குள் வந்து அனைவரையும் அடிச்சு காட்டுக்குள்ள கொண்டு போய்டுது. தினமும் இதேதான் நடந்துட்டு இருந்துருக்கு.

டெல்லி பொலிஸார், இராணுவம் என யாராலும் அந்தப் புலியைப் பிடிக்க  முடியலை. இறுதியா தமிழ்நாடு பொலிஸார் சிறந்தவர்கள் என, அவங்களைக் கூப்பிடுறாங்க. தமிழ்நாடு பொலிஸார்? புலியைப் பிடிக்க காட்டுக்குள்ள போன அடுத்த நிமிடமே புலியைப் பிடிச்சாச்சுன்னு சொல்றாங்க.

"காட்டுல இருந்து வெளியே வந்த பொலிஸார் , புலிக்குப் பதில் கரடியைக் கொண்டு வாராங்க.
இதுதான் புலின்னு எல்லோரிடமும் பொலிஸார்  சொல்றாங்க. கரடி கூட, ‘ஆமா நான் தான் புலி’னு சொல்லுது. இதுல ஸ்பெஷல் என்னென்னா, கரடியைப் பிடிச்சு அடிச்சு ‘நான்தான் புலி’னு ஒத்துக்க வச்சிட்டாங்க தமிழ்நாடு பொலிஸார். இந்த விடயத்தைத்தான் ‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்தில் சொல்லியிருக்கோம்” என, ஆவேசத்துடன் கூறினார்.

“இந்தத் திரைப்படத்தை ரியலா பண்றதா, இல்லை கற்பனையுடன் வேறு கதையா பண்றதானுதான் முதல்ல யோசிச்சோம். சென்ற வருடம் ஜூன் 24ஆம் திகதி சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

"ரயில் நிலைய பொலிஸாரா அல்லது தமிழக பொலிஸாரா  யார் வழக்கு விசாரிக்கணும்னு தொடங்கி பல சர்ச்சைகள். ராம்குமார், மின்சார வயரை கடித்து இறந்து போனதாக இறுதித்தகவல் வெளியானது.

"பொலிஸாரால் சிறைத்துறைக்குள் போகவே முடியாது. இது குறித்து சிறைத்துறைக் காவலரிடம் கேட்டால், 98% வாய்ப்பே இல்லைன்னு சொல்லுறாங்க. பொலிஸார் மாதிரியே நாங்க விசாரணை  நடத்தினோம்.

"ஜாதி, மதம்னு இரண்டு பெரிய சக்தி தலையிட்டிருக்கு. ஒரு மாத தேடலுக்குப் பிறகு சுவாதி கொலை வழக்கில் நமக்கு ஏற்பட்டிருக்கும் பல கேள்விகளுக்கு விடையா இந்தப் படத்தைச் சொல்லியிருக்கோம்”என்கிறார் ரவி.

“எந்த ஒரு சர்ச்சையையும் உருவாக்கணும்னு இந்தத் திரைப்படத்தை எடுக்கவில்லை. எந்த ஒரு தனிமனிதனையோ, குடும்பத்தையோ மனதையோ துன்பப்படுத்தணுங்கிறதும் எங்க நோக்கம் இல்லை. இந்த சமூகத்துக்கு இந்தத் திரைப்படம் மூலமா ஒரு விடை கொடுக்கணும் அவ்வளவுதான்.

"சுவாதி கொலை வழக்கை திரைப்படமாக்க எண்ணியதற்குக் காரணம் என்னவென்றால், இன்னொரு சுவாதியும், இன்னொரு ராம்குமாரும் இறந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான்” என்றார் இயக்குநர் ரமேஷ் செல்வன்.

இந்நிகழ்வில் நடிகர் விஷால் பேசும்போது, “கமர்ஷியல் திரைப்படங்கள் எடுத்தால்தான் இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதையெல்லாம் தாண்டி மக்களுக்கு எதாவது சொல்லணும், அவங்களை சிந்திக்க வைக்கிற மாதிரியான திரைக்படங்கள் எடுக்கிறதுக்கு நிச்சயம் பெரிய தைரியம் வேண்டும்.

"சுவாதி கொலை வழக்குப் பற்றிப் பேசக்கூட யாரும் முன்வரமாட்டோம். உண்மைகள் தெரிஞ்சாகூட வெளியே சொல்ல மாட்டோம். இயக்குநரா அவர் சொல்லப்போகிற விடயத்தைப் பார்க்க நானும் ஆவலா இருக்கேன்.

"திரைப்படத்தின் திரையிடலுக்கு 1 மாதம் முன்னாடியே சொல்லிடுங்க. நானே கூட இருந்து உங்களுக்கு வியாபாரம் செய்து கொடுக்குறேன். விநியோகஸ்தரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். திரையரங்கத்தில் திரையிடுவது மட்டுமே வருமானம் கிடையாது. இன்னும் பல வழிகளில் சம்பாதிக்கலாம். நாங்க எப்போதுமே  உங்க கூட இருப்போம்.” என்று விஷால் தெரிவித்துள்ளார்.


’சுவாதி கொலை வழக்கு’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.