2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மனித நேயத்தை வலியுறுத்திய இளைஞர் சாதனை

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித நேயத்தை வலியுறுத்தி 12 நாள்களில் 3,846 கிலோ மீற்றர் தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

வேலூர் சத்துவாச்சாரி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தனியார் பஸ் ஓட்டுநர். இவரின் மகன் நரேஷ்குமார் (26). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துள்ள இவர், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். சிறு வயதிலிருந்தே சைக்கிள் பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நரேஷ்குமார், சைக்கிள் மூலமாக உலக சாதனை நிகழ்த்தத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.

இந்தநிலையில், மனித நேயத்தை வலியுறுத்தி 3,846 கிலோ மீற்றர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். 11 நாள்கள் 21 மணி நேரம் 57 நிமிடங்கள் 2 விநாடிகளில் இவ்வளவு கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அத்தோடு, தேசிய அளவிலான இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், லிம்கா சாதனை புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளார்.

இதுபற்றி நரேஷ்குமார் கூறுகையில், ``சைக்கிள் மூலம் உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான பயிற்சியாக கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூருலிருந்து வேலூருக்கும், பின்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கும் சைக்கிளில் பயணம் செய்தேன். இதையடுத்து, தேசிய நதிநீர் இணைப்பை வலியுறுத்திக் கடந்த 2017 டிசம்பர் 18ஆம் திகதி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் மேற்கொண்ட உலக சாதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி வேலூரைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்தை 100 பேர் சைக்கிளில் கடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பின்னர், உலக சாதனை நிகழ்த்தப் பயிற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து தற்போது அதை அடைந்துள்ளேன். 

கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மாலை 3 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் பயணத்தைத் தொடங்கி 15-ம் தேதி குஜராத்தை அடைந்தேன். இந்த சைக்கிள் பயணத்தின்போது சீனா, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய 5 நாடுகளின் எல்லைகளையும் கடந்துவந்துள்ளேன். இது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, உலக அமைதியை வலியுறுத்தி உலகம் முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான பயிற்சியிலும், நிதி சேகரிப்பிலும் தற்போது ஈடுபட்டுவருகிறேன்’’ என்றார் பெருமிதத்துடன். கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ள நரேஷ்குமாருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X