2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை உள்ளூராட்சி சபைக்கு புதிய உப தவிசாளர் தெரிவு

Editorial   / 2019 மார்ச் 07 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.ஏ.றமீஸ்

அட்டாளைச்சேனை உள்ளூராட்சி சபையின் புதிய உப தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.ஹனீபா, இன்று (07) தெரிவுசெய்யப்பட்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த இவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றிருந்தார்.

தேசிய காங்கிரஸைச் சேர்ந்த எம்.எஸ்.ஜௌபர், அக்கட்சியின் தேர்தல்கால நிபந்தனையின் பேரில், கட்சித் தலைவரின் வேண்டுதலுக்கு அமைய, தாம் வகித்து வந்த உப தவிசாளர் பதிவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, புதிய உப தவிசாளரைத் தெரிவுசெய்யும் வகையில், அட்டாளைச்சேனை உள்ளூராட்சி சபைக்கான விசேட அமர்வு, தவிசாளர் ஏ.எல்.எம்.அமானுல்லா தலைமையில், நேற்றுக் காலை கூடியது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். மணிவண்ணனும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

 பின்னர், முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எஸ்.எம்.எம். ஹனீபா, தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஜ்மல் ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.

இதனால், உறுப்பினர்களினதும் ஏகோபித்த தீர்மானத்தின் பேரில், உப தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பு திறந்த முறையில் நடத்தப்பட்டது.

இவ்வாக்கெடுப்பில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 08 உறுப்பினர்களுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த 03 உறுப்பினர்கள் இணைந்து, மொத்தமாக 11 உறுப்பினர்கள், ஹனீபாவுக்கு வாக்களித்தனர்.

தேசிய காங்கிரஸைச் சேர்ந்த 06 உறுப்பினர்கள், அவர்களது கட்சி சார்ந்த அஸ்மலுக்கு வாக்களித்த அதேவேளை, பொது ஜனபெரமுனையைச் சேர்ந்த ஆர்.கீர்த்தி ரணசிங்க நடுநிலை வகித்திருந்தார்.

இதன்மூலம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று, எஸ்.எம்.எம்.ஹனீபா உப தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளாரென, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X