2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் மேலதிகமாக 4,000 ஏக்கர் நெற்செய்கைக்கு அனுமதி

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 மே 07 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 4,000 ஏக்கர் நெற்செய்கைக்கு அனுமதியை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயத் திணைக்கள உயரதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பு, அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நேற்று (06) மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “விவசாய அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு அமையவே, அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட செயலாளர் ஆகியோரின் ஆலோசனையுடன் மேலும் 4,000 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப் பணித்துள்ளேன்.
"காலநிலை மாற்றம் காரணமாக, நீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். உலகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பநிலை உயர்ந்திருப்பது, இதற்குப் பிரதான காரணமாக உள்ளது. இதனை முகங்கொடுப்பது, உலகில் பாரிய சவாலாக மாறியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
நெல்லைப் பயிரிடப் போதியளவு நீர் இல்லாத போது, குறுகியகால வயதுடைய ஏனைய உணவுப் பயிர்களைப் பயிரிட வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், மணல், நீர் பாதுகாப்பு முறைமைகளைப் பின்பற்றி, நுண் நீர்ப்பாசன முறைமைகளையும் பயன்படுத்திக்கொள்வதும், இதற்கான தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “பல விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், குறைபாடுகள் தொடர்பில், இங்கு கருத்துத் தெரிவித்தார்கள். இவைகள் தொடர்பில், அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன், தொடர்புகொண்டு மிகவிரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும்" என உறுதியளித்தார்.
செங்கப்படையிலிருந்து கழியோடை ஆற்றினூடாக கடலில் சென்று வீண் விரையமாகும் நீரைத் தடுப்பதற்கு, செங்கப்படை ஊடாக அணைக்கட்டு அமைத்து, நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதற்கு மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட செயலாளர் ஆகியோரின் ஆலோசனையைப் பெற்று, அதற்கான செயற்றிட்ட அறிக்கையைத் தயாரித்து, அதற்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“எனது அமைச்சில், ஹெடஓய தொடர்பிலும் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்வதன் மூலம், இப்பிராந்திய விவசாயச் செய்கைக்கான போதியளவு நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X