2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அஷ்ரப் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா 

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதில், எவரும் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிலவரம் குறித்து வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், இன்று (2) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  இந்த வைத்தியசாலைக்கு அன்றாடம் பெருந்தொகையான நோயாளர்கள் சிகிச்சைபெற வந்து கொண்டிருந்தனர் என்றும்  கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது,  தற்போது நோயாளர்களின் வரவு, வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் அவ்வாறாயின் தற்போது நோயாளிகள் எங்கே போகின்றனர்? என்ன செய்கின்றனர் என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

இன்றையச் சூழ்நிலையில், அவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெற அச்சப்படுகின்றனர் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது இருமல், தடிமல், காய்ச்சலுடன் வைத்தியசாலைக்குச் சென்றால், பொலிஸூக்கு அறிவித்து, கொரோனா தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே, அவர்கள் வைத்தியசாலைக்கு வராதிருப்பதாக அறிய முடிகிறது.

இது தேவையற்ற பயமாகும் என்றும், கொரோனா தொற்று அறிகுறியில்லாதவர்கள்,  எக்காரணங் கொண்டும் வேறிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த அச்சம் காரணமாக பெரும்பாலானோர், காய்ச்சலுக்கு பனடோல் போட்டுக்கொண்டு வீட்டில் இருந்து விடுகின்றனர் என்றும் பொதுவாக எந்த நோயானாலும் அவ்வப்போது வைத்தியர்களில்ஆலோசனை பெறாமல் மருந்துகளைப் பாவிப்பது அல்லது பனடோல் போடுவது என்பது, மிகவும் ஆபத்தான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, வழமை போன்று தினசரி காலை 7.00 மணி முதல் இரவு 8.00 வரை இயங்கி வருவதாகவும் அவசர சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இருமல், தடிமல், காய்ச்சல் போன்ற நோய்களுடன் வருவோர், விசேட கவனிப்புடன் பரிசோதிக்கப்பட்டு, அவற்றுக்கான மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும் ஏனைய நோயாளிகளுக்கும் வழமை போன்று சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

நோயாளிகள் வைத்தியசாலைக்கு வருவதற்கு, ஊரடங்குச் சட்டம் ஒரு தடையல்ல என்றும் அவசரமாக வாகனம் ஏதும் கிடைக்காவிட்டால், 1990 எனும் அவசர இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம், அம்பியூலன்ஸ் வண்டி சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே நோய்வாய்ப்படுவோர் யாராக இருந்தாலும், அவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்வதில் எவ்விதத் தயக்கமும் காட்ட வேண்டாம் என்று வலியுறுத்துவதுடன், மக்களை பாதுகாப்பதற்காகவே சுகாதாரத்துறையும் பொலிஸ், முப்படையினரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர் என்பதை புரிந்துகொண்டு, செயற்படுமாறும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X