2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 30 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நேற்று (29) பிற்பகல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இப்பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனை அவமதிக்கும் வகையில் இணையத்தளமொன்றினூடாக வெளியிடப்பட்ட செய்தி மற்றும் அதனை தொடர்ந்து முகநூலில் இடம்பெற்றுவரும் முறையற்ற விமர்சனங்கள் தொடர்பில் கண்டனத்தை தெரிவிக்கும் முகமாகவே இப்பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தவறான செய்தியை வெளியிட்ட இணையத்தளத்திற்கு எதிராகவும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுத்தி பதாதைகளை ஏந்திய வண்ணம் உத்தியோகத்தர்களும். பிரதேச கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசே அவதூறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடு, பொறுப்பற்ற முறையில் ஊடகங்கள் செயற்படுவதா, அரசியலுக்காக அரச அதிகாரிகளை அவமானப்படுத்தாதே, இனவாதத்தை விதைத்து அரசியல் செய்யாதே, அரசியல் இலாபத்திற்காக இனமுறுகலை ஏற்படுத்தாதே,  உள்ளிட்ட பல பதாதைகளை அவர்கள் ஏந்தியவண்ணம் கோசமிட்டனர்.

மாலை 3.15 மணியளவில் ஆரம்பமான இப்பணிப்பகிஷ்கரிப்பினால் அலுவலக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

27ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அபாயநிலையை கட்டுப்படுத்துவதற்காக நீர்வடிந்தோடும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் கடற்கரை பிரதேசத்தை அகழவேண்டும் என அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவை ஏற்படும் பட்சத்தில் உரிய பகுதி அகழ்ந்து விடப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரதேச செயலாளர் வேண்டுமென்றே இவ்வாறு தெரிவித்து முஸ்லிம் மக்களை பாதிப்படைய செய்வதாக குறிப்பிட்டு குறித்த இணையத்தளத்தில் அவதூறான வார்த்தைகளால் இனமுரன்பாடு ஏற்படும் வகையில் செய்தி வெளியிடப்பட்டதுடன் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனை எதிர்க்கும் வகையிலும் குறித்த நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்த அதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மகஜர் ஒன்றினையும் கையளித்தார்.

இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் பாடுபடும் பிரதேச செயலாளரை ஒரு சிலர் தங்களது அரசியல் சுயஇலாபத்திற்காக இவ்வாறு செயற்படுவதாகவும் இதன் மூலம் இனங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தி அரசியல் நடத்தவும் முயற்சிப்பதாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை பிரதேச செயலகத்தில் வேறுபாடின்றி ஒற்றுமையுடன் தாங்கள் கடமையாற்றுவதாகவும் பிரதேச செயலாளர் அனைவரையும் அரவணைத்து செல்வதாகவும் வேண்டுமென்றே அரசியல் இலாபத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையை தாங்கள் கண்டிப்பதாகவும் முஸ்லிம் மக்கள் சார்பில் பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் முஸ்லிம் சகோதரர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளரும் கருத்து தெரிவிக்கையில்,

“அரச அதிகாரிகளை வீணே விமர்சித்து கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ள விடயம் தொடர்பில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன். எந்த ஒரு இன ரீதியான முடிவுகளும் என்னால் எடுக்கப்படவில்லை என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன். இப்பகுதியில் உள்ள 60 சதவீதமான வயல் நிலங்கள் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது. அதேபோன்று மீன்பிடித்தொழிலும் முஸ்லிம் மக்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர்.

“இந்நிலையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படாத வகையிலேயே நான் முடிவுகளை மேற்கொண்டேன். சடுதியாக முகத்துவாரம் வெட்டப்படுவதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை கடந்த காலத்தில் அறிந்து கொண்டேன். அதன் பிரகாரமே நான் பலருடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை மேற்கொண்டு அவர்கள் கோரிக்கை விடுத்த மறுதினமே அகழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.

“இந்நிலையில் குறித்த சில நபர்கள் இனமுரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் மேற்கொண்ட இச்செயற்பாட்டை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .