2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடிந்துவிழும் அபாயத்தில் சுனாமி வீடுகள்

எஸ்.கார்த்திகேசு   / 2017 ஜூன் 25 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில், மண்டானையில் சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு 2006ஆம் ஆண்டு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக, குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருக்கோவில் பிரதேசத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் ஆகிய கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கான சுனாமி மீள்குடியோற்ற வீட்டமைப்புத் தொகுதி அமைந்துள்ளது.

இங்கு சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவர்களுக்கான இவ்வீடுகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் 3 நிர்மாணித்திருந்ததுடன், சுமார் 303 வீடுகள் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டு, சுனாமியால் வீடுகளை முற்றாக இழந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இவற்றில் ஒரு நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்ட 196 வீடுகளே இவ்வாறு சேதமடைந்து இருப்பதாக, குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வீடுகள் உறுதியில்லாமல் இருப்பதுடன், சுவர்களில் பல வெடிப்புக்கள் ஏற்பட்டு வருவதாகவும் இவ் வீடுகளில் குழந்தைகளுடன் அச்சமின்றி வசிப்பதற்கோ, இரவு வேளைகளில் நிம்மதியாக உறங்குவதற்கோ முடியாத நிலையில் காணப்படுவதாகவும், மிகவும் அச்சத்துக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் நேற்றுக் கேட்டபோது, “இவ்வீடமைப்புத் திட்டமானது வீடமைப்பு அதிகார சபையினால் அல்லது யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடமைப்புத் தொகுதியாக பிரதேச செயலகத்துக்குள்ளால் கட்டப்பட்டு இருக்குமானால் அதற்கான நிதிகளை கோரி திருத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், இவர்களுக்கான வீடுகளைத் திருத்துவது தொடர்பில் சில திட்ட நடைமுறை சிரமங்கள் காணப்படுகின்றது. இருந்தும் அதனை எவ்வாறு திருத்த முடியும் என்பது தொடர்பாக தாம் பிரதேச செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.

இது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனிடம் வினவியபோது, “இங்கு அமைக்கப்பட்டுள்ள வீடுகள், வீட்டுக்கு வீடு என்ற முறைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில்  வீடுகள் பெற்றுக்கொண்டவர்கள் வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். சில வீடுகளின் உரிமையாளர்கள் யாரென்றும் தெரியாத நிலையில் வேறு சிலர் வசித்து வருவதுடன், பல வீடுகள் குடியிருப்பாளர்கள் இல்லாமலும் காணப்படுகின்றன. இதன் காரணமாக எங்களால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாதுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் நேரடியாக வந்து முறைப்பாடுகளை செய்யுமிடத்து? அந்த வீடுகளை பார்வையிட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடியதாக இருக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .