2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இடைக்கால அறிக்கையால் நன்மை இல்லாத பாதகங்கள்’

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், பைஷல் இஸ்மாயில்

 

“அரசியல் யாப்பு வழிநடத்தல் சபையின் இடைக்கால அறிக்கையானது, தமிழ் மக்களுக்கு ஓரளவு வெற்றியாகவும் முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்கும் எந்த நன்மையையும் அளிக்காமல் பாரிய பாதகங்களை ஏற்படுத்துவதாகவுமே அமைந்துள்ளது என்பதே, முஸ்லிம் உலமா கட்சியின் நிலைப்பாடாகும்” என, அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கல்முனையிலுள்ள கட்சிக் காரியாலயத்தில் நேற்று (24) இரவு நடைபெற்ற கட்சி ஆதரவாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்பொது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இடைக்கால அறிக்கையில் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாகக் கருதப்படும் என்று எழுதப்பட்டுள்ளதானது, கிழக்கு முஸ்லிம்களை தமிழர் ஆதிக்கத்துக்கு அடிமைப்படுத்தும் கருத்தாகும்.  இதனை எந்த வகையிலும் உலமா கட்சி ஏற்றுக்கொள்ளாது.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப் பரவலாக்கல் செய்ய வேண்டும் என்பதில் ஒத்தகருத்துள்ள நிலையில், மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரமும் வழங்கப்பட்டு, வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால், அது நிச்சயம் முஸ்லிம்களுக்கு பாரிய பாதகங்களை ஏற்படுத்தும் என்பதுடன், எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மோதல்களை ஏற்படுத்தும்.

“கிழக்கில் மட்டுமல்லாது கிழக்குக்கு வெளியே குறிப்பாக வடக்கு, மேல் மாகாணம் போன்ற மாகாணங்களில் மிகச்சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கும் இது மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

“இதன் கரணமாகவே 2010 முதல் அரசியல் அமைப்பு சபைக்கு உலமா கட்சியால் வழங்கப்பட்டு வரும் ஆலோசனைகளில் ஒன்றாக மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவதாயின் கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் பெரும்பான்மை பிரதேசங்களை இணைத்து தனி நிர்வாக சபைகளை ஏற்படுத்த வேண்டும் என கூறி வருகிறோம்.

“அவ்வாறு முடியாது என்றால் தற்போதிருக்கும் இனவாத சூழலில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்க கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

“அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இருக்க வேண்டும் என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை நாம் வரவேற்கிறோம். அதுவே எமதும் நிலைப்பாடாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .