2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் நோயற்றவையென உறுதிப்படுத்தப்பட வேண்டும்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 மார்ச் 01 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடனான அவசரக் கலந்துரையாடல், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் ஆலோசனையின் பேரில், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில், மாநகர சபையில் இன்று (01) நடைபெற்றது.

மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களின் சில இடங்களில் மாடுகள் திடீரென இறப்பது குறித்தும் அப்பகுதிகளில் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும்  இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், அவ்வாறு இறக்கும் நிலையிலுள்ள மாடுகளோ அல்லது நோய்வாய்ப்பட்டு, அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியோ கல்முனை மாநகர சபை எல்லைக்குள் கொண்டு வரப்படுவதை தடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

அந்த வகையில், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் அனைத்தும் நோயற்றவை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவை அறுக்கப்பட வேண்டுமென, மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் இதன்போது அறிவுறுத்தினார்.

இவ்விடயத்தில் தவறிழைக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர்களின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இந்நடைமுறையை அமுல்படுத்துவதில் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், விலங்கறுமனை உத்தியோகத்தர்கள் மிகக்கண்டிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்தார். 

கல்முனை மாநகர சபையால் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள 33 மாட்டிறைச்சிக் கடைகளிலும் மனித நுகர்வுக்கு எந்த வகையிலும் கேடு விளைவிக்காத இறைச்சி விற்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவற்றின் உரிமையாளர்கள், நடத்துநர்கள் எல்லோரும் இறைவனுக்குப் பயந்து, மனச்சாட்சியுடன் செயற்பட முன்வர வேண்டும் என்றும் ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை மாநகர சபையால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாத எவராவது வீடுகளிலும் பொதுவான கடைகளிலும் மாட்டிறைச்சி விற்பனை செய்வார்களாயின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .