2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இலங்கையர் என்ற கோட்பாடுடன் வாழ வேண்டும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

“நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் இன, மத பேதங்களை மறந்து எல்லோரும் இலங்கையர் என்ற கோட்பாடுடன் வாழ வேண்டும். அப்போதுதான் நிலையான சமூதாயத்தையும், நிலைபேரான அபிவிருத்தியையும் பெற முடியும்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் நல்லிணக்கத்துக்கான மாதிரி பீடம் அங்குராப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு, இன்று  (20) உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த நாடு எல்லோருக்கம் சொந்தமானது. சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து, இந்நாட்டை ஒரு சுபீட்சம் நிறைந்த நாடாக மாற்றியமைப்பதற்கு, மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் ஒன்று, நாடு தழுவிய ரீதியில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“நாட்டில் உள்ள 2,000 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு இவ்வேலைத்திட்டம் மாணவர்கள் ஊடாக முன் கொண்டு செல்லப்படுகின்றது. அத்துடன், 07 பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனூடாக, பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் மத்தியில் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

“இந்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும், ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களென்ற மனப்பாங்குடன் வாழ வேண்டும். அப்போதுதான் நிரந்தர சமாதாணத்தை கொண்டு வர முடியும். கடந்த காலங்களில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் நாம் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்தோம்.

“கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தின் அபிவிருத்தியை மையமாக கொண்டு மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபினால் ஆரம்பிக்கப்பட்ட தென்கிழக்க பல்கலைக்கழகம், இன்று இப்பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது, இலங்கையின் உயர் கல்விக்கும் பெரும் பங்காற்றி வருகின்றது.

“தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாட்டில் உள்ள சகல இன மாணவர்களும், கல்வி கற்றக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு ஒரு தேசிய பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இப் ஸ்ரீபல்கலைக்கழகத்தில், குறுகிய காலத்துக்குள் பல வளர்ச்சி படிகள் ஏற்பட்டுள்ளதோடு, கல்வியிலும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதையிட்டு, இப்பல்கலைக்கழக நிருவாகத்தினரை பாராட்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .