2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

“ஊருக்கு வருவேன்” என்ற நண்பனின் சடலம்தான் வீட்டுக்கு வந்தது

யூ.எல். மப்றூக்   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளை ஊருக்கு வருவேன் என்று நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்துச் சொன்ன தினேஸின் சடலம்தான் வீட்டுக்கு வந்திருந்தது.

அதிர்ச்சியில் சொந்தங்களும் நண்பர்களும் உறைந்து போயிருந்தனர்.

தினேஸின் உடலுக்கு பொலிஸார் மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார்கள். அருகில் அம்மாவும் அக்காவும் சக்தியற்ற குரலில் அழுது கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு - வவுணதீவில் கடமையிலிருந்த போது, வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர்தான் தினேஸ்.

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை, தினேஸுக்குச் சொந்த ஊர். 1990ஆம் ஆண்டு பிறந்தவர். நவம்பர் 06ஆம் திகதிதான் தனது 28ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

தினேஸுக்கு பெரிய நண்பர்கள் வட்டம் இருப்பதை அவரின் மரண வீட்டில் காணக் கிடைத்தது. அங்கு அமைதியாக உட்கார்ந்திருந்த தினேஸின் நண்பர்களில் ராஜேஸுடன் உரையாடினோம்.

“கிரிக்கெட் ஆடுவதில் தினேஷ் ஆர்வமுடையவர். பொது வேலைகளிலும் ஈடுபாடு கொண்டவர் என்பதால், விளையாட்டுக் கழகங்களுடனும் பொது அமைப்புகளுடனும் நல்ல உறவு அவருக்கு இருந்தது” என்கிறார் ராஜேஷ்.

“தினேஸ் கோபப்படமாட்டார். வயது வித்தியாசமின்றி எல்லோருடனும் அன்பாகப் பழகுவார்” என்றார் இன்னுமொருவர்.

பொலிஸ் சேவையில் தினேஸ் இணைந்து 05 வருடங்களாகின்றன. நாட்டில் நிலவிய யுத்தம் நிறைவுக்கு வந்த பிறகு, பொலிஸ் உத்தியோகத்தில் தமிழ் இளைஞர்கள் அதிகளவில் இணைந்து வருகின்றனர். தினேஸின் ஊரிலேயே பொலிஸ் சேவையில் கணிசமான இளைஞர்கள் சேர்ந்துள்ளதாக அவரின் நண்பர் ராஜேஸ் கூறினார்.

தினேஸின் பெற்றோருக்கு 03 பிள்ளைகள். தினேஷ் கடைசிப் பிள்ளை. அப்பா ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர். அண்ணா சுரேஷ், பல்கலைக்கழக விரிவுரையாளர். அக்காவுக்குத் திருமணமாகி விட்டது. தினேஸுக்கு வீட்டார் பெண் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் இந்தச் சோகம் நிகழ்ந்தது.

“கிட்டத்தட்ட தினேஸுக்குப் பெண் பார்க்கும் வேலைகள் முடிந்து விட்டன. அடுத்த வருடம் திருமணம் செய்துவைப்பதாக உத்தேசித்திருந்தோம்” என்கிறார் தினேஸின் அக்காவுடைய கணவர் குமுதன்.

“எங்களின் பிறந்த நாள்களை தினேஸ் நினைவில் வைத்திருப்பான். அந்த நாள்களை 'கேக்' வெட்டி சிறப்பாக எங்களுடன் கொண்டாடுவான்” என்று, தினேஸின் விசேடமான பண்பினை நினைவுகூர்ந்தனர் அவரின் நண்பர்கள்.

தினேஸ் இனி இல்லை என்கிற உண்மையை ஜீரணிக்க முடியாத அவரின் உறவுகளினுடைய கண்ணீருடன், பெரிய நீலாவணை பொது மாயானத்தில் நேற்றுக் காலை அவரின் நல்லடக்கம் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .