2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கடந்தாண்டு 776 வர்த்தகர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 19 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 776 வர்த்தகர்களுக்கு, நீதிமன்றங்களால் 31 இலட்சத்து 82,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி, இன்று (19) தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது, மருதமுனை, பதியத்தலாவ, கல்முனை, அம்பாறை, தெஹியத்தக்கண்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களால் 824 பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன்போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 815 வர்த்தகர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதில் 776 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு அத்தியவசியப் பொருட்கள் மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்கள், இச்சுற்றிவளைப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும், வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கெதிராகவே, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததாகவும் கூறினார்.

அம்பாறை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, கல்முனை, தெஹியத்தக்கண்டி, பொத்துவில் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X