2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கணினி மயப்படுத்தி சுகாதார சேவைகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள கிராமிய வைத்தியசாலைகளிலும் ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு நிலையங்களிலும், ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்தும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றா நோயைக் கட்டுப்படுத்தி, வளமான சமூகமொன்றை உருவாக்கும்  உலக வங்கியின் நிதியுதவியின் கீழ், சுகாதார அமைச்சால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டம், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீனின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சின் 46 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகார எல்லைக்குட்பட்ட மத்தியமுகாம் வைத்தியசாலையும், ஒலுவில் பிரதேச வைத்தியசாலையும் இவ்வாண்டுக்காகத் தெரிவுசெய்யப்பட்டு, இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

இதற்கமைவாக, ஒலுவில் பிரதேசத்திலுள்ள சுமார் 11 ஆயிரம் பொதுமக்களின் தரவுகளைக் கணினி மயப்படுத்தி, அவர்களுக்குச் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் ஆரம்ப வேலைத்திட்டம், மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஏ.ஜீ.எஸ்.பைறூஸ் தலைமையில், ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றது.

மக்களின் தரவுகளைக் கணினி மயப்படுத்துவதால், அவர்களது சுகாதாரத்துறை சார் அனைத்து விடயங்களும் கணினியில் உள்ளீர்க்கப்பட்டு, அவர்களுக்கென விசேட இலக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

மக்களின் அனைத்துத் தகவல்களும் தரவுக்கப்பட்டு கணினி மயப்படுத்தப்படவுள்ளதால், அவர்கள், இலங்கையின் எப்பாகத்திலும் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ள முற்படுகின்றபோது, அவர்களுக்கான விசேட இலக்கத்தை எந்தவொரு வைத்தியசாலையில் இருந்தும் அழுத்துகின்றபோது, அவர்களது முழு விவரங்களும் கணினியில் காட்சியளிக்கும்.

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்கள் இலகுவில் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விசேட வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதும், வைத்தியர்களிடம் தொடர்ச்சியாக தங்களின் நோய்களைப் பற்றி அறிமுகப்படுத்த வேணடிய அவசியமும் ஏற்படாது. அத்துடன், நோயாளிகள், வைத்தியசாலைகளுக்கு எவ்வித ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் ஏற்படாது.

எதிர்வரும் ஐந்தாண்டு காலப் பகுதிக்குள் இப்பிராந்தியத்திலுள்ள பல வைத்தியசாலைகளில்  இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .