2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘கல்முனை சந்தை நரக குழியாக மாறிவிடும்’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஜூலை 01 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பொதுச் சந்தையை புனரமைப்புச் செய்வதற்கு வர்த்தகர்கள் அனைவரும் கருத்தொருமிப்புடன் ஒத்துழைப்பு வழங்க முன்வராவிட்டால் இச்சந்தை நரகக் குழியாக மாறிவிடும் என, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் ஒன்றுகூடலும் வர்த்தகர்களுக்கான அடையாள அட்டை விநியோக நிகழ்வும், சங்கத் தலைவர் ஏ.பி.ஜமாலதீன் தலைமையில் இன்று (01) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தனதுரையில், "கல்முனை மாநகர சபையின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்றே இப்பொதுச் சந்தையாகும். இது சுமார் 500 கடைகள் கொண்ட பாரிய வர்த்தக மையமாகும். இப்பிராந்தியத்தின் அபிவிருத்திக்காக மாநகர சபைக்கு பாரிய வருமானத்தை ஈட்டிக்கொடுத்து, முதுகெலும்பாக இருக்க வேண்டியதொரு சந்தைத் தொகுதியாகும்” என்று சுட்டிக்காட்டினார்.

அத்துடன் “ஆனால், அப்படியொரு பங்களிப்பை செய்யுமளவுக்கு இங்குள்ள வர்த்தகர்களின் மனநிலை இல்லையென்பது கவலைக்குரிய விடயமாகும்” என்றும் முதல்வர் கவலை தெரிவித்தார்.

“சில தினங்களுக்கு முன்னர் கல்முனையின் அபிவிருத்தி தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை நான் சந்தித்து கலந்துரையாடியபோது, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போன்று எமது நிலைப்பாடு இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

“இந்த சந்தையில் உள்ள ஒரு கடையை, அண்மையில் ஐம்பது இலட்சம் ரூபாய் முற்பணத்துடன், ஐம்பதாயிரம் ரூபாய் மாத வாடகைக்குக் கொடுப்பதற்காக குறித்த கடையின் பயனாளியால் சட்டத்தரணி ஒருவர் மூலம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்” என்றும் அவர் தெரிவித்தார்.

“1978ஆம் ஆண்டு இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கடைகளை பெறுகின்றபோது செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 150 ரூபாய் தொடக்கம் 350 ரூபாய் வரையான மாதாந்த வாடகையையே இன்றும் செலுத்தி வருகிறீர்கள். அதிலும் வருடக் கணக்கில் நிலுவை வைத்துள்ளீர்கள். அன்றைய நாணயப் பெறுமதிக்கும் இன்றைய நாணயப் பெறுமதிக்கும் எந்தளவு வேறுபாடு என்பது எல்லோருக்கும் தெரியும்.

“அதனால்தான் 2016 ஆண்டு அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட வாடகையை அறவீடு செய்ய வேண்டும் என எமது மாநகர சபைக்கு கணக்காய்வுப் பிரிவினரால் தொடர்ச்சியான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆளுநரும் இதனை என்னிடம் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த சந்தையால் கல்முனை மாநகர சபைக்கு வருடமொன்றுக்கு என்பது இலட்சம் ரூபாய் மாத்திரமே வருமானமாக கிடைக்கிறது. ஆனால், குறைந்தது 80 மில்லியன் ரூபாவேனும் வருமானம் கிடைக்க வேண்டும். அதன்மூலம் அபிவிருத்திகள் முன்னெடுக்க வேண்டும். அந்த நிலைக்கு நாம் முன்னேற வேண்டும்" என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X