2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்முனையை மூன்றாகப் பிரிக்க பிரதமர் உடன்பாடு

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கான உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்றபோது, மருதமுனையை மையப்படுத்தி தனியான பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்படுமென  தெரிவித்த  கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை வாழ் தமிழ் சகோதரர்கள் கடந்த முப்பது வருடங்களாக  உபபிரதேச செயலகத்தை அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக தரமுயர்த்தித் தருமாறு போராடி வருகின்றனர் என்றும் தெரிவித்த அவர், கல்முனையை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என கல்முனை மாநகர முதல்வர் கூறினார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஏ.எல்.தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கல்லூரி அதிபர் ஏ.எல்.ஷக்காப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் கூறியதாவது;


 அதேவேளை, உபபிரதேச செயலகத்தை அவர்கள் கோருவது போன்று, தற்போதுள்ள நிலையில் ,அச்செயலகம் தரமுயர்த்தப்பட்டால், தமக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதனால் முஸ்லிம்களாகிய நாம் எதிர்த்து வருகின்றோம் என்று தெரிவித்த கல்முனை மாநகர முதல்வர்,
எது,எவ்வாறாயினும் தமிழ் மக்களின் அண்மைய உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழ்நிலையில், எவ்வாறேனும் அவர்களுக்கான பிரதேச செயலகத்தை தரமுயர்த்திக் கொடுத்தாக வேண்டும் என்கின்ற நிலைமை உருவாகியிருக்கிறது.

தற்போதிருக்கின்றது போல், கல்முனையை இரண்டாகப் பிரித்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனால், முஸ்லிம்  தரப்பில் முன்வைக்கப்பட்ட தீர்வாக கல்முனையை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் முன்னிலையில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் நடாத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டு, அதன்படி எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை வடக்கு தமிழ் உப செயலகத்தை தரமுயர்த்துகின்றபோது எமது மருதமுனையை மையப்படுத்தி ஒரு செயலகம் உருவாக்கித்தரப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிகையை முன்வைப்போம் என்று நமது ஊர்ப்பிரமுகர்களை ஒன்றுகூட்டி கலந்துரையாடியபோது, நம்மவர்களே அது சாத்தியமற்றது, வெறும் கனவு என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் எமது விடாப்பிடியான அழுத்தம் காரணமாக அது இன்று சாத்தியப்பட்டிருக்கிறது.

இதன் பிரகாரம் அடுத்த இரண்டு மாதங்களில் மருதமுனை, பெரிய நீலாவணை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய மூன்று முஸ்லிம் பகுதிகளையும் உள்ளடக்கியதாக ஒரு தனியான பிரதேச செயலகம் உருவாக்கப்படும் என்பதுடன் அதையொட்டியதாக எதிர்காலத்தில் இப்பிரதேசத்திற்கு ஓர் உள்ளூராட்சி சபையும் உருவாக்கப்படும் என்கின்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கின்றேன்என்றும் முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .