2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணி மீட்புத் தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உரிய காணியுரிமையாளர்களுக்கு மீள வழங்குதல் வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளதாகக் காணியுரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் தலைவர் பி.கைறுடீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (31) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உரியவர்களிடம் மீள ஒப்படைப்பதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கையைப் பாராட்டுவதுடன், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும், அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் இருப்பதாக காணி இழந்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த, காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு, குறுகிய காலத்துக்குள் பிரச்சினைகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதுடன், இவ்வாறு மீளவும் நிகழாமைக்கான நடவடிக்கைகள், கொள்கை, சட்ட சீர்திருத்தங்களைச் செய்து, அதனை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயக் காணிகளை வனப்பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, இராணுவமுகாம், புனித பூமி, ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கென, எடுக்கப்பட்ட காணிகளை உரிய விவசாயிகளுக்கு மீள வழங்குதல் வேண்டும்.

எந்த அடிப்படையிலும் காணிகளை நியாயமற்ற முறையில், அடாத்தாக அபகரிப்பதானது குற்றவியல் சட்டத்துக்கு அமைய தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டியுள்ளதுடன், அது அனைத்தும் குடி மக்களுக்கும் பாராபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

குடியிருப்பு, விவசாயக் காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு இதற்கு முன் பகிர்ந்தளிக்கப்படாத அரச காணிகள் பாராபட்சமின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது சர்வதேச நியமங்களின் படி அரசாங்கத்தின் கடமையாக இருத்தல் வேண்டும்.

சுமார் இரண்டாயிரத்தி 645 ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இக்காணிகளை உரியவர்களுக்கு மீள வழங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .