2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காணிப்பிரச்சினைக்கு ’விரைவில் தீர்வு’

வி.சுகிர்தகுமார்   / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில், ஊறனி மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் உறுதியளித்தார்.

நாடாளுமன்ற கட்டடத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் நேற்று (23) காலை இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, ஊறனி 60ஆம் கட்டை பிரதேச மக்களின் காணி மீட்புப் போராட்டம் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நல்லதொரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

10ஆவது நாளாகவும் இரவு பகலாக மக்களது போராட்டம் தொடரும் நிலையில், கடந்த(16) ஆம் திகதி மாலை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மக்களது கோரிக்கையினை கேட்டறிந்து கொண்டதுடன், மக்களது கோரிக்கையினை ஜனாதிபதி, பிரதமர், வனவள அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுச் சென்று தீர்வை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கூறியிருந்தார்.

137 பேருக்கு குறித்த பகுதியில் வசித்தமைக்கான ஆவணங்கள் இருப்பதாகவும் சிலருக்கு ஆவணங்கள்  இல்லாத நிலை காணப்படுவதாகவும் கூறிய அவர், எவ்வாறாயினும் குறித்த மக்களின் பிரச்சினையை விரைவில் தீர்த்து வைப்பதாகவும் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இன்றைய உறுதிமொழி மகிழ்ச்சியளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார். இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரனும் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .