2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’கிழக்கின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதில் அதிருப்தி’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "இம்மாதத்துடன் ஆட்சிக்காலம் நிறைவடைந்து கலைகின்ற கிழக்கு மாகாண சபைக்கு, உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே, எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும்.

எனினும், மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதனால், புதிய முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதனால் அப்பணிகள் பூர்த்தியடைந்த பின்னர், அடுத்த வருடம் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் குறிப்பிட்டுள்ள காலப்பகுதியிலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தை எமது கட்சி வலியுறுத்துகிறது.

இத்தேர்தலை மேலும் இழுத்தடிப்பு செய்வதற்கு எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது என எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் கூறியிருப்பது போன்று மார்ச் மாதம் தேர்தலை நடத்துவதென்றால் மாகாண சபைத் தேர்தலுக்கான தொகுதிகளை வரையறுப்பதற்கான எல்லை நிர்ணய பணிகள் கால தாமதப்படுத்தப்படாமல் துரிதமாக நிறைவு செய்யப்பட வேண்டும். இது விடயத்தில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் நேர்மையாக செயற்பட முன்வர வேண்டும். 

அதேவேளை, கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு அடுத்த தேர்தல் நடைபெறும் வரையிலான காலப்பகுதியில் அந்த சபையின் ஆட்சி அதிகாரம் முழுமையாக ஆளுநரிடம் கையளிக்கப்படுவதில் எமது கட்சிக்கு உடன்பாடில்லை. ஆகையினால், கிழக்கு மாகாண சபையின் நிர்வாகம் தொடர்பிலும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் கலந்துரையாடி வருகின்றார்"  என்றும் செயலாளர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X