2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘சாய்ந்தமருது அபிலாஷைக்கு சம்பந்தன் ஐயா உதவ வேண்டும்’

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம். ஹனீபா

“சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா முன்வர வேண்டும்” என, சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா ஹாஜியார் வேண்டுகோள் விடுத்தார்.

சாய்ந்தமருது, கடற்கரை ஹுதா திடலில், மீனவ சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு (21) இடம்பெற்ற தனி உள்ளூராட்சி மன்றத்துக்கான மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மூன்று தசாப்த காலமாக சாய்ந்தமருது மக்கள் கோரி வருகின்ற தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்தித் தருவதாக அனைத்து அரசியல் தலைவர்களும் உறுதியளித்து வந்துள்ளனர். என்றாலும், எல்லா ஏற்பாடுகளும் வெற்றிகரமாக நிறைவுற்று, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவிருந்த இறுதித் தருவாயில், அவர்கள் மிகவும் நயவஞ்சகமாகத் தடுத்து விட்டனர். 

“சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை என்ற பந்து, இப்போது சம்பந்தன் ஐயாவின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் நாம் மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்கின்றோம். எங்களது மக்களின் அபிலாஷையை நிறைவேற்றித் தாருங்கள்.

“இந்த விடயத்தில், நீங்கள் நீதமாக நடப்பீர்கள் என நாங்கள் மிகவும் நம்புகின்றோம். எங்களது நம்பிக்கைக்கு அநீதியிழைக்க மாட்டீர்கள்.

“நாம் ஆதரித்து- வாக்குப்போட்டு அமைச்சர்களாக வலம் வருகின்ற அரசியல் தலைமைகளால் நாம் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ளோம். நாம் அரசியல் குரலற்ற மக்களாக நடு வீதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளோம்.

“இந்த இக்கட்டான சூழ்நிலையில், நீங்கள் எங்களுக்கு உதவுங்கள். நீங்கள் எமக்கு உதவும் பட்சத்தில் எதிர்காலத்தில் நாங்களும் உங்களுக்கு பக்கத்துணையாக இருப்போம்.

“நாங்கள் எப்போதும் தமிழ் மக்களுடன் இணைந்தே வாழ விரும்புகின்றோம். நாம் எவருக்கும் அநியாயம் இழைக்க நினைக்கவில்லை.

“இந்நிலையில், கல்முனையில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சினையை எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்க்கதரிசனமாக விட்டுக்கொடுப்புகளுடன் சுமூகமாகத் தீர்த்து வைத்து, எமக்கான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு சாய்ந்தமருது மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X