2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சகல தரப்புடனும் பேசத் தீர்மானம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவை எட்டும் வகையில், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சகல ஊர்ப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அதற்கென உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில்,) மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சில் நேற்று முன்தினம் (26) நடைபெற்றது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"கல்முனை மாநகர சபையை வெவ்வேறு உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிப்பது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இதற்கான குழுக்களை அமைத்து, விரைவில் தீர்வொன்றை எட்டுவதற்கு அழுத்தம் கொடுத்திருந்தோம்.

“சாய்ந்தமருது, கல்முனை பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர், சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுடன் சேர்த்து மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை தமிழ் பிரிவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து கூட்டாகவும் தனியாகவும் பேசுவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

“இந்தப் பேச்சுவார்த்தை மூலம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சகல தரப்பினருடனும் பேசி, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடினோம்.

“இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சர் விஜிர அபேவர்த்தன தலைமையில் உயர்மட்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றக் கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் சமூகமான முடிவுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென, அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பிரச்சினை இல்லாமல், அந்தப் பிரதேச மக்கள் சுமூகமாக வாழ வேண்டும் என்பதே, மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடாகுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .