2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘சிறந்ததொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்பு வேண்டும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மார்ச் 17 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சிறந்ததொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென, அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச இராணுவத்தின் 241ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கேணல் விபுல சந்திரசிறி தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் வர்த்தக சங்க அங்குரார்ப்பண நிகழ்வு, அக்கரைப்பற்று மெங்கோ காடின் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (16) மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சமாதான பேரவையின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. ஜப்பார்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கேணல் விபுல சந்திரசிறி தொடர்ந்து உரையாற்றுகையில்,

“அம்பாறை, கண்டி மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக இலங்கையில் நிர்வாகம் சீர்குலைந்து காணப்பட்டது.

“அம்பாறையில் சமீபத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அசாராதாரண நிலையை கட்டுப்படுத்த முடியாமல் போனதையிட்டு மன்னிப்புக் கேட்கின்றேன். இது போன்ற செயல்கள் இனி ஒரு போதும் நடக்காமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.

“இலங்கையில் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களை பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள மக்கள் பாதுகாப்பதுக் கடமையாகும். நாங்கள் எல்லோரும் இலங்கையர் என்ற வகையில் பயணிக்க வேண்டும்.

“ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கின்றது. அவர்களுடைய உரிமையில் மற்றவர்கள் தலையிட முடியாது.

“இலங்கை நாடு அமைதியான சகல வளங்களைக் கொண்ட ஓர் அழகான நாடு. நமது நாடு பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. இதனால் பொருளாதார ரீதியாக நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

“அரச திணைக்களங்களின் தொழிற்சங்கங்கள் பொதுமக்களின் கஷ்டங்களை உணராமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுவதோடு, பொதுமக்களும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

“இரு வார காலமாக பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷகரிப்பு காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுமென்பதில் ஐயமில்லை.

“நமது நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள், போதைவஸ்த்துப் பாவனை என்பன அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்.

“அதேபோல், டெங்கு நோய், நாட்டுக்குப் பெரும் அச்சுருத்தலாகக் காணப்படுகின்றது. அரசாங்கம் எவ்வாறான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அதனைக் கொண்டு செல்ல முடியாது.

“நமக்குள் ஏற்படும் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X