2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சொத்துக்கடனுக்கான நிதி மீளவும் திறைசேரிக்குத் திரும்புகிறது’

வி.சுகிர்தகுமார்   / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச உத்தியோகத்தர்களின் நலன் கருதி, அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் சொத்துக்கடனுக்கான நிதி, பயன்படுத்தப்படாமையால் மீளவும் திறைசேரிக்குத் திரும்பிச் செல்வதாக, இலங்கை வங்கியின் திருகோணமலை பிரதேச கடன் மைய உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இலங்கை வங்கியினூடாக சேவைக்காலத்தில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரச ஊழியர்களுக்கான சொத்துக்கடனைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், அரச உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டும் கருத்தரங்கு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (14) நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர்கள் இவ்வாறு கூறினர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் அனுமதியுடன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ரி.மோகனராஜா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், இலங்கை வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர் ஆர்.ருதுசாந்தன், இலங்கை வங்கியின் திருகோண்மலை பிரதேச கடன் மையத்தின்  உத்தியோகத்தர்கள் எஸ்.மதுசன், டபிள்யூ ஏ.என் தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரச உத்தியோகத்தர்களின் நலன் கருதி, 4 சதவீத குறைந்த வட்டி வீதத்தில் சொத்துக்கடன், அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. ஆனால், ​அதைப் பெறுவதில் அரச உத்தியோகத்தர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லையென்றும் அக்கடனைப் பெறுவதிலுள்ள அடிப்படை விடயங்கள் பற்றிய தெளிவின்மையே இதற்குக் காரணமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆகவே, அதனைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, இச்சலுகை அரச உத்தியோகத்தர்கள் பயன்படுத்த வேண்டுமென, திருகோணமலை பிரதேச கடன் மைய உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டனர்.

புதிய காணி, வீடு கொள்வனவு, வீட்டைத் திருத்துதல் போன்ற விடயங்களுக்காக இக்கடன் வழங்கப்படுவதாகவும் இதில் 30 இலட்சம் வரை கடனைப் பெற முடியுமெனவும் அவர்கள் தெரிவித்ததுடன், 25 வருடங்கள் அல்லது 60 வயது வரை இக்கடனைத் திரும்பச் செலுத்த முடியுமென்றும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .