2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துரித கதியில் காணி விடுவிப்பு பணிகள்

வி.சுகிர்தகுமார்   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தகாலத்தில் வனஇலாக மற்றும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளை விடுவிக்கும் பணியை, நல்லாட்சி அரசாங்கம் கிழக்கு மாகாணத்திலும் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக, பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ஊறனி கனகர் கிராமத்தில் வனஇலகாவால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கும் பணிகள், சுமார் 35 வருடங்களின் பின்னர் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.என்.முசாரத் தலைமையில் பிரதேச செயலகத்தில் நேற்று (09) இடம்பெற்ற காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலில், அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கலந்துகொண்டு, காணிகளை விடுவிப்பது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளித்தார்.

குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த 42 குடும்பங்களின் காணிகளை விடுவிக்க வனஇலாக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக  இணங்கியுள்ளதாகவும் சம்மந்தப்பட்டவர்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, குறித்த காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சரும் வீடமைப்பு அமைச்சரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த பகுதிகளிலேயே காணிகளை வழங்க வேண்டுமா அல்லது அதற்குப் பதிலாக தற்போது மக்கள் வசித்துவரும் பிரதேசத்தோடு இணைத்து காணிகளை வழங்குவதா என மக்களின் விருப்பை அறியும் வகையில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் மக்களின் விருப்போடு அவர்கள் விரும்புகின்ற விதத்தில் ஒருவருக்கு 80 பேர்ச் எனும் அடிப்படையில் காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

குறித்த காணிகளைப் பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களை அண்மைக்காலமாக மக்கள் முன்னெடுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .