2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

துறைமுக காணிகளுக்கான நட்டஈட்டை பெறுவதற்கு அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மானப் பணிக்காக காணி இழந்து இதுவரைக்கும் நட்டஈடு வழங்கப்படாத 29 பேருக்கு நட்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக, சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.

 

துறைமுக அபிவிருத்திக்காக சுவீகரிக்கப்பட்டு இதுவரை 29 பேருக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இவர்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கமைய, இலங்கை துறைமுக அதிகார சபையில் துறைமுக அதிகாரசபையின் தவிசாளர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்காவுடன் நேற்று (20) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், பிரதியமைச்சர் பைசல் காசிமின் இணைப்புச் செயலாளர் ஏ.சீ. றிஸாத் மற்றும் காணி இழந்தவர்களும் கலந்துகொண்டனர்.

காணிகள் அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் அறிக்கை பெற்ற பின் இவர்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்கு துறைமுக அதிகாரசபையின் தவிசாளர் பராக்கிரம திஸாநாயக்கவால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்பட்டதும் மிக விரைவில் நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுமெனவும், பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.

துறைமுக அபிவிருத்தி நிர்மாணப்பணிக்காக 2008ஆம் ஆண்டு 48 பேர்களின் காணிகள் 49.5 ஏக்கர் நிலம் சட்டப்படி சுவீகரிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு 33 பேர்களின் காணிகள் அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் விலை மதிப்பீடு செய்யப்பட்டன.

விலை மதிப்பீடு செய்யப்பட்ட காணிகளுக்கான நட்டஈட்டுத் தொகை அதிகூடியது எனத் தெரிவிக்கப்பட்டு, இலங்கை துறைமுக அதிகாரசபையால் குறிப்பிட்ட நட்டஈட்டுத் தொகையை காணிஉரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் 2014ஆம் ஆண்டு ஆவணங்கள் பரீட்சிக்கப்பட்டு, 19 நபர்களுக்கு மட்டும் ஒரு பேர்ச் காணிக்கு 30,000 ரூபாய் படி நட்டஈடு வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள 29 நபர்களுக்கம் இதுவரையில் நட்டஈடு வழங்கப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X