2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பதாதைகளை காட்சிப்படுத்த அனுமதி பெறப்பட வேண்டும்’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை நகரில் சமய, கலாசார, பொது நிகழ்வுகளுக்காக அலங்கார சோடனைகள் அமைப்பதற்கும் கொடிகள், விளம்பரப் பதாதைகளைக் கட்டுவதற்கும், கல்முனை மாநகர சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் குறித்த விழாக்கள் நிறைவடைந்த உடனேயே அவை அகற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவிக்கையில்,

"சமய, கலாசார விழாக்களை முன்னிட்டும் பொது நிகழ்வுகளுக்காகவும் கல்முனை மாநகர நெடுஞ்சாலைகள், பொது இடங்கள் மற்றும் முக்கிய சந்திகளில் அலங்கார சோடனைகள் அமைக்கப்படுவதுடன் கொடிகளும் விளம்பர பதாதைகளும் கட்டப்பட்டு, காட்சிப்படுத்தப்படுகின்றன.

“எனினும், விழாக்கள் முடிவுற்று பல வாரங்கள் கடந்தும் அவை அகற்றப்படாமல் உடைந்து, சிதைந்த நிலையில் நகரை அலங்கோலப்படுத்துகின்றன. அவற்றினால் வர்த்தகர்களும் பொது மக்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வாகனப் போக்குவரத்துக்கும் அவை இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

“ஒரு விழா முடிவுற்றிருக்கும் நிலையில் இன்னொரு விழாவுக்கு அலங்கார சோடனைகள் அமைக்கப்பதற்கும் கொடிகள், பதாதைகள் கட்டுவதற்கும் முனைகின்றபோது, இரு தரப்பினருக்குமிடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவதை கடந்த காலங்களில் அவதானித்துள்ளோம்.

“இவ்விடயங்களை கவனத்தில் கொண்டே கல்முனை மாநகரில் சமய, கலாசார மற்றும் பொது நிகழ்வுகளுக்காக அலங்கார சோடனைகள் அமைப்பதற்கும் கொடிகள், பதாதைகளை கட்டுவதற்கும் மாநகர சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதுடன் குறித்த நிகழ்வுகள் நிறைவடைந்த உடனேயே அவற்றை சம்மந்தப்பட்டோர் அகற்றிச்செல்ல வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“ஆகையால் மதஸ்தலங்கள், சமய நிறுவனங்கள், பொது அமைப்புகள் எமது வேண்டுகோளை ஏற்று, நகரின் இயல்பு நிலையை பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

“அதேவேளை சமய, கலாசார மற்றும் பொது விழாக்களுக்கான அலங்கார சோடனைகள், கொடிகள், பதாதைகளை காட்சிப்படுத்துவதற்காக மாநகர சபையின் அனுமதி பெறுவதற்கு கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது.

“எனினும், தனியார் வர்த்தக நிறுவனங்களின் நிகழ்வுகளுக்கான விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கு வழமைபோல் கட்டணங்கள் அறவிடப்படும் என்பதுடன், அந்நிறுவனங்களும் அனுமதி பெற்றுக் கொண்ட காலம் நிறைவடைந்த உடனேயே தமது விளம்பரங்களை அகற்றிக் கொள்ள வேண்டும்" என்றும் கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .