2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பயங்கரவாதத் தடைச்சட்டமும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் நீக்கப்படவேண்டும்’

வி.சுகிர்தகுமார்   / 2019 மார்ச் 12 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்த நாட்டிலே உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டமும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனும் கொள்கையில், தான் உறுதியாக இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

இச்சட்டம் தொடர்பான வாதம் வரும்போது, அதனை நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.  

பாதிப்புற்ற பெண்கள் அரங்கமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கத்தினதும் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாத தடைச்சட்டம் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டபோதிலும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறிப்பிட்ட அரசியலை மையப்படுத்திக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

ஆனாலும், எந்த அரசியல் நோக்கத்துக்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் மீண்டும் பொதுமக்கள் மீதே அச்சட்டம் பாய்கின்றதெனவும் இந்த ஆட்சி மாற்றப்பட்டு, மீண்டும் முன்பிருந்த ஆட்சி வருமேயானால், பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, இந்த நல்லாட்சி என்று பெயரளவில் சொல்லப்படும் ஆட்சி இருக்கும்போதே, இச்சட்டங்களை நாம் ஒழிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அதற்காக முழு ஆதரவையும் தான் வழங்குவேன் என உறுதியளித்தார்.

மேலும், இந்த நாட்டினதும் மக்களினதும் நன்மை கருதி, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, இச்சட்டங்களை நீக்க முன்வரவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களால் பயங்கரவாத தடைச்சட்டமும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் உடனடியாக நீக்கப்படவேண்டுமென, நாடாளுமன்றில் வலியுறுத்துமாறு, குறித்த நிகழ்வில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X