2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பரீட்சை மதிப்பீட்டு நிலையம் தொடர்ந்தும் இருக்க வேண்டும்’

பி.எம்.எம்.ஏ.காதர்   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பரீட்சைத் திணைக்களத்தின் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு நகர நிலையப் பட்டியலிலிருந்து கல்முனையை நீக்கியது தொடர்பாக எதிர்ப்பு வெளியிட்டுள்ள இலங்கை மகா ஆசிரியர் சங்கம், மீளவும் அந்நிலையம் செயற்படும் வண்ணம் ஆவன செய்யுமாறுகோரி, கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

தமது இந்த வேண்டுகோள் கடிதத்தை, இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் கையொப்பமிட்டு , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த, 15 வருடங்களாக 30க்கும் மேற்பட்ட 1AB, 1C தர பாடசாலைகளைக் கொண்ட கல்முனை கல்வி மாவட்டத்தில், க.பொ.த உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு நிலையம் இயங்கி வந்திருக்கின்றது.

அது உடனடியாக இம்முறை இரத்துச் செய்யப்பட்டிருப்பதானது, பல இடர்பாடுகளைத் தரக்கூடியது என, சங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், அம்பாறை, அதன் புறநகர்ப் பகுதிகள், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, நற்பட்டிமுனை, மருதமுனை போன்ற இடங்களிலிருந்து புள்ளியிடும் பரீட்சகர்களாக மதிப்பீட்டுப் பணிக்காக விண்ணப்பிப்போர், பெரிதும் மன உளைச்சலுக்குள் உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

“கல்முனை நிலையம் நீக்கப்பட்டமையால், புள்ளி மதிப்பீட்டுப் பரீட்சகர்களாக விண்ணப்பிப்பதன் மூலம், தூர இடங்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்கின்ற அச்சத்தின் காரணமாக, விண்ணப்பிப்பதிலிருந்து பலர் விலகி இருப்பதையும் நோக்கக்கூடியதாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையைக் கவனத்திலெடுத்து, புள்ளியிடும் பரீட்சகர்களின் விண்ணப்பத் திகதி முடிவுறுவதற்கு முன்னர், க.பொ.த உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு நகர நிலையப்பட்டியலில், கல்முனையை மீண்டும் இணைத்து உதவுமாறு, அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .