2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புதிய அரசமைப்பில் சமஷ்டி எண்ணக்கரு இல்லை’

Editorial   / 2017 செப்டெம்பர் 30 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், சமஷ்டி எண்ணக்கரு எவ்விதத்திலும் வெளிப்படுத்தப்படவில்லையென, ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான எந்தவொரு அரசமைப்பையும் தயாரிக்க தான் இடமளிக்கப்போவதில்லை எனவும் தற்போதிருக்கும் அரசமைப்பில் பௌத்த சமயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உறுப்புரையையும் நீக்குவதற்கோ, குறைப்பதற்கோ இடமளிக்கப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வண. கிராம்பே  மங்கள தேரருக்கு மகாநாயக்கர் நியமன பத்திரத்தை வழங்கும் நிகழ்வு, அம்பாறை, கெமுணுபுர பௌத்த நிலையத்தில் நேற்று (29) நடைபெற்ற போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு தொடர்பான முன்மொழிவுகளில்  நாட்டை பிரிக்கும் விடயங்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி,  புதிய அரசமைப்பு தயாரிப்பு தொடர்பில் எந்தவொரு வரைபும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதுடன், அனைவரினதும் கருத்துகள், முன்மொழிவுகள் பெறப்பட்டு நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை, அனைத்து துறைகளிலும் கலந்துரையாடி, விவாதித்து, மீளாய்வு செய்ய வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குதல்,  நிலையான சமாதானத்தை பேணுதல், மீளவும் போர் ஏற்படாதவாறு அனைத்து இனத்தவரிடையேயும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் முதன்மை கவனம் செலுத்தி செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“மீளவும் போரொன்று  ஏற்படும்”  என்ற  கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டால் கூட  நாடு  இருண்ட யுகத்துக்குத்  தள்ளப்பட்டுவிடும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறான எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படாதவாறு அனைத்து இனங்களிடமும் சகவாழ்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பாடுபடுவதுடன், அந்த முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு   ஒரே  மேசையில் ஒன்றுகூடி கலந்துரையாடுமாறு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதத்தலைவர்களை வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X