2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பெறுமதிமிக்க மக்களின் வாக்குப் பலம் பணத்துக்காக கைமாறும் நிலை’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“பெறுமதிமிக்க மக்களின் வாக்குப் பலம், இன்று பணத்துக்காகவும் வேறு பொருட்கள், பொய் வாக்குறுதிகளுக்காகவும்  தகுதியற்றவர்களுக்கு கைமாறிச் செல்லும் அபாயம் தோன்றியுள்ளது” என, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

“இந்தக் கலாசாரம், சிறந்த ஜனநாயக விழுமியம் மீது  விழுந்துள்ள பாரிய அடியாகவே அமையும்” என்றும் அவர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ஆதரித்து, பாலமுனையில் நேற்றிரவு (24) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“அரசியல் அதிகாரங்களைப் பெறலாம் என நினைத்து, சில அரசியல் கட்சிகள் பணங்களை வழங்கி, வாக்குகளைப் பெறுவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

“மக்களின் பெரும்பான்மை வாக்குகளை, ஒவ்வொரு தேர்தல்களிலும் கட்சிப் பாடல்களைக் காட்டி, இன உணர்வுகளைப் பேசி, வாக்குகளைப் பெற்று பதவிகளுக்கு வந்தவர்கள், மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு இதுவரை எவ்விதமான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

“மக்களின் பிரச்சினைகளை, வேறு தலைவர்கள் தீர்த்து வைக்கக் கூடாது என இம்மாவட்டத்திலுள்ள பிரதியமைச்சர்கள் தடைகளை விதித்து, தாங்கள்தான்  மக்களின் பிரச்சிகைளைத் தீர்ப்போம் என, மார்பு தட்டி வீராப்பு பேசி, காலத்தை வீண்விரயம் செய்து, மக்களை ஏமாற்றும் நிலமை தொடர்கின்றது.

“எனவே, நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எப்போதும் நமது சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக சுதந்திரமாகக் குரல் கொடுத்து வரும் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதன் மூலமாக, எமது பிரதேச அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .