2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதையற்ற அட்டாளைச்சேனையை உருவாக்குமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூலை 16 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருட்களை முற்றாக இல்லாது செய்ய, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.முஹாஜிரீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லாவுக்கு, இன்று (16) அனுப்பி வைத்துள்ள மகஜரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“2018ஆம் ஆண்டில் புகைத்தல், போதைப்பொருள் பாவனையற்ற அட்டாளைச்சேனை பிரதேசத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் பொருட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வில், விசேட தீர்மானமாக இதனை அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும்.

“அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களில் தற்போது பெரும் சவாலாகக் காணப்படுகின்ற, போதைப்பொருள், புகைத்தல் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு, ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று, தனது மகஜரில் அவர் கோரியுள்ளார்.

ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள சமய நிறுவனங்கள், பள்ளிவாசல், கோவில்கள், விகாரைகள் போன்ற நிர்வாகங்களுடன் இணைந்து, மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் கிராமங்கள் தோறும் குழுக்களை அமைத்து, வீடு வீடாகச் சென்று போதைப்பொருள் பாவனையால் ஏற்படக் கூடிய தீமைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்ட வேண்டும் எனக் கோரிய அவர், "புகைத்தல் அற்ற பிரதேசம்" என்ற வாசகம் பொருந்திய விளம்பரப் பலகைகளை, விற்பனை நிலையங்களிலும் பொது இடங்களிலும் காட்சிப்படுத்த வேண்டுமெனவும், அம்மகஜரில் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒலுவில் பிரதேசம், புகைத்தல் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .