2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

‘முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஏமாற்று அரசியல் செய்கின்றனர்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜூன் 28 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கக்கூடிய புதிய முறையிலான மாகாண சபைத் தேர்தல் சட்டமூலத்துக்கு, முஸ்லிம் தலைவா்கள் ஆதரவை வழங்கிவிட்டு, தற்போது பழைய முறையில் தேர்தல் நடத்த வேண்டுமெனக்கூறி, ஏமாற்று அரசியல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனரென, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக்கூட்டம், மத்திய குழுவின் தலைவர் எம்.எஸ்.எம். பைறூஸ் தலைமையில், நேற்று முன்தினம் (27) இரவு, அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், புதிய மாகாணசபை திருத்தச் சட்டமுறைமைக்கு, முஸ்லிம் அரசியல் தலைமைகள், நாடாளுமன்றத்தில் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கி விட்டு, தற்போது பழைய முறையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெற வேண்டுமென ஏமாற்று அரசியல் செய்கின்றனரெனக் குற்றஞ்சாட்டினார்.

இதனால், முஸ்லிம் சமூகத்துக்கு, மாகாண சபைப் பிரதிநிதித்துவங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றுச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விடயத்தில், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கவனமெடுக்காவிட்டால், முஸ்லிம் சமூகத்துக்கான மாகாண சபைப் பிரதிநதிதுவங்களை இழக்க நேரிடுமென்று எச்சரித்தார்.

நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில், இதுவரையில் முஸ்லிம் சமூகத்துக்கான எந்தவொருப் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படாத நிலைமை தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், நம் முஸ்லிம் தலைவர்களுக்குரியவைகளை அவர்கள் பெற்றுள்ளதைத் தவிர, நமது சமூகத்தின் நலன்கள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலைமை தொடர்வதாகவும் இந்த நிலைமை குறித்து, நமது சமூகம் வேதனை அடைந்துள்ளதென்றும் எடுத்துரைத்தார்.

அண்மையில், பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, தமிழ்த் தலைவர்கள் நன்கு திட்டமிட்டு, தமிழ்ச் சமூகம் சார்பான 18 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

அதனால், இந்த ஒப்பந்தங்களில் 12 கோரிக்கைகள், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதெனக் குறிப்பிட்ட உதுமாலெப்பை, முஸ்லிம் தலைவர்கள், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து, தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு, முஸ்லிம் சமூகத்தைக் காட்டிகொடுத்துள்ளனரென, பெரும்பான்மையினக் கட்சிகளின் தலைவர்கள், பகிரங்கமாகத் தெரிவிக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .