2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெண்ணியவாதி

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைய பெண்கள் தானொரு பெண்ணிவாதி என்று சொல்லிக் கொள்வதற்கு தயங்குகிறார்கள். அல்லது அஞ்சுகிறார்கள். பெண்களின் இந்த நிலைப்பாடு அவர்களுடையது அல்ல.

அவர்களுக்குள் இயல்பாகவே வந்தது அல்ல. அவர்களே அறியாத விதமாக அவர்களுக்குள் திணிக்கப்பட்டது. பெண்ணியவாதியான மார்கிரட் அத்வூட் இப்படிச் சொல்கிறார். ”பெண்கள் தங்களைப் பார்த்துச் சிரித்துவிடுவார்களோ என்று ஆண்கள் அஞ்சுகிறார்கள். ஆண்கள் தங்களைக் கொன்று விடுவார்களோ என்று பெண்கள் அஞ்சுகிறார்கள்”.

இந்த கூற்று அத்தனை உண்மையானது. உரிமைகள் சுதந்திரம் என்கிற அனைத்திற்கும் அப்பால் பெண்கள் குறைந்தபட்சம் உயிர்வாழ்வதற்கு (Survival) விரும்புகிறார்கள். இறப்புக்கு அஞ்சியும் மரணத்திற்குப் பிந்திய சுவர்க்கத்தை விரும்பியுமே பெண்கள் சுயபிரக்ஞையை இழந்து நிற்கிறார்கள். சுயபிரக்ஞை இல்லாத எந்தப் பெண்ணாலுமே ”நான் ஒரு பெண்ணியவாதி” என்று துணிந்து சொல்லிவிட முடியாது. பெண்ணியவாதியாக இருப்பதென்பதை ஆடைகளைக் குறைத்துக் கொள்ளவும், சிகரட் புகைக்கவும், மது அருந்தவுமான சுதந்திரம் என்பதாக நினைப்பவர்கள் இருக்கின்றார்கள். அல்லது பெண்ணியவாதிகள் ஆண்களை புறக்கணிக்கின்றவர்கள், ஓர்பாலுறவை வலியுறுத்துகிறவர்கள் என்கிற இன்னொரு அபிப்பிராயத்தைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

.பெண்ணியவாதம் தொடர்பான அல்லது பெண்ணியவாதிகள் தொடர்பான இந்தக் கருதுகோள்களைப் பெண்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் ஆண்கள். ஏனென்றால் ஆண்களுக்குத் தெளிவாகத் தெரியும், பெண்ணியவாதம் என்பது அதிகாரங்களுக்கு எதிரானது, பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்திற்கு எதிரானது என்பது.

பெண்ணியவாதம் மேலைத்தேய கலாசாரம், அது மேலைத்தேய நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரல் என்ற ஆண்களால் பின்னப்பட்ட கட்டுக் கதைகளை முறியடிப்பதற்கு வலுவான எத்தனையோ சான்றுகளை முன்வைக்க முடியும். இந்தக் கதைகளின் பின்னால் இருக்கும் வலுவற்ற தர்க்கங்களைப் பற்றி ஆராய்வதற்கான தெளிவு பெண்களிடம் வருவதற்கு முதலாவதாகப் பெண்கள் செய்யவேண்டியிருப்பது மனபூட்டை உடைத்துக் கொண்டு சற்று வெளியுலகை எட்டிப் பார்ப்பது. கிணற்றிலேயே கிடக்கும் தவளைக்கு கடலைப் பற்றி என்ன தெரிந்திருக்கும்!

பெண்கள் கல்வி கற்கும் விகிதம் பெருகிவிட்டது. பெண்கள் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். உயர்கல்வி கற்கிறார்கள். உயர் பதவி வகிக்கிறார்கள் என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் இதனாலெல்லாம் பெண் எந்தவகையில் மேம்பாடு அடைந்திருக்கிறாள் என்று கேட்டால் பதில் ஒன்றுமில்லைதான். சமூகம் வலிந்து உருவாக்கிப் பெண்களில் திணித்த ”ரோல்களில்” இருந்து அவளால் விடுபட முடியவில்லை.

எவ்வளவு உயர் கல்வி கற்றாலும், என்னதான் உயர் பதவி வகித்தாலும் வீட்டில் அவள் சமையல்காரியாகவும், துணிதுவைக்கின்றவளாகவும் இருப்பதிலிருந்து அவளால் விடுபடவே முடியவில்லை. இந்தப் பணிகளைப் பகிர்ந்து கொள்வது ஆண்களினதும் பொறுப்பு என்பதை பெண்களே ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகின்ற நிலை உயர் கல்வியாலோ, பெண்கள் வகிக்கும் உயர் பதவிகளாலோ மாறிவிடவில்லை. மேட்டுக்குடி பெண்களை எடுத்துப் பார்த்தால் சமையலறைக்கே செல்லாத, துணிதுவைக்காதவர்கள் இருப்பார்கள்.

ஆனால் அவர்கள் பாலின சமத்துவத்தை வென்றவர்களாகிவிடமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் வேலைகளைச் செய்வதற்கு பணியாளர்களை வைத்திருப்பார்கள். அந்தப் பணியாளர்களும் பெண்களாகவே இருப்பார்கள். ஆண் அதிகாரங்களைக் கட்டுடைப்புச் செய்கின்ற பெண்ணியம், பெண்ணுக்குப் பெண் முதலாளியாக இருப்பதை ஆதரிக்க முடியாது.

நான் பெண்ணியம் என்பதை மிக எளிதாகப் புரிந்து வைத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை பெண்ணியம் என்பது ”கௌரவம்”. எந்தப் பெண் சுய கௌரவத்துடன் தான் நடதப்படவேண்டும் என்று விரும்புகிறாளோ, எந்தப் பெண் தான் சுய கௌரவத்துடன் நடத்தப்படாத இடங்களில் கேள்வி எழுப்புகிறாளோ அவள் தான் பெண்ணியவாதி. அத்தகைய பெண்ணியவாதியாகத்தான் என்னை அடையாளப்படுத்துகிறேன்.

அதிகாரங்களை நோக்கிக் கேள்வி எழுப்புகிறேன். அடக்கு முறைகளின் போது திமிறி எழுகிறேன். திருப்பி அடிக்கிறேன். என்னுடைய பெண்ணியம், சமூக வாழ்விலிருந்து பெண்களைத் தனியாக வேறு பிரித்துக் காட்டுவதோ, ஓரம் கட்ட இடமளிப்பதோ அல்ல. பெண்ணுக்கான கௌரவத்தினை இழக்காதிருப்பது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .