2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன அழுத்தத்தை ஆதரிக்கின்றோமா?

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இந்தியாவில், கொரோனா அடைவுக்காலத்தில் ஒரு குடும்பத்திலிருந்து நான்கு பேர் மொத்தமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்தனர். வறுமை, பசி, தனிமை சூழ்ந்த வாழ்வில் தற்கொலை செய்துகொள்வதை அவர்கள் தீர்வாக எடுத்துக்கொண்டிருந்தனர்.   

நாம் இந்த மனஅழுத்தம், தற்கொலை இவற்றையெல்லாம் மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ளப்போகிறோம் என்றால், நம் சமூகத்தின் பாரபட்சம், ஏற்றத்தாழ்வு எல்லாவற்றையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், மன அழுத்தம் என்பது அங்கே தான் உதயமாகிறது. அது தனிமனித விடயமன்று.  

காலில் செருப்பு இல்லாமல் வருத்தப்படுகிறாயெனில், கால் இல்லாதவனைப் பார்த்து ஆறுதல் அடையக்கற்றுக்கொள் என்று சொல்வார்கள்.  

அப்படியான கருணையையோ, பரிவையோ, மனித வாழ்வுக்கு அவசியமான புரிதலைக் கூட நாம் யாரும் கற்றுக்கொள்வதில்லை.  
பொருளாதார நிலையில் உயர்ந்தோர், சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்போரின் துயரம் வேறாகவும், அடித்தளத்தில் உழல்பவர்களின் துயரம் வேறாகவும் நம் மனதுக்குத் தோன்றும்படி நாம் வாழ்ந்து வளர்கிறோம். நம் மனதைப் பழக்கப்படுத்துகிறோம்.  

தன்னைப்பற்றியே எப்பொழுதும் சிந்திக்கும் ஒருவர், மன அழுத்தத்துக்கு உள்ளாவது வெகு இயல்பே. எது இருந்தாலும் அதில் தன்னிறைவற்ற ஒரு மனநிலையை நோக்கி முள் ஆடிக்கொண்டே இருக்கும்.  

சமூக அறிவியலை அறிந்தோர் மன அழுத்தத்துக்கு உள்ளாகி நாம் கண்டதில்லை. களத்தில் நின்று நித்தம் எத்தனையோ போராட்டங்களைச் சந்திப்போர் மன அழுத்தத்துக்கு உள்ளாவதில்லை. இத்தனைக்கும் அவர்கள் காணாத துயரம், இன்னல், வலி இல்லை. உதாரணத்துக்கு, அற்புதம் அம்மா.  

உளவியல் நிபுணர்களில் எத்தனை பேர் சமூக அறிவியல் அறிந்தவர்கள். மன அழுத்தத்துடன் இத்தகைய நிபுணர்களை அணுகுபவர்களுக்கு மருந்துகள் அல்லாத சமூக, குடும்ப நெருக்கடிகளைக் கையாளும் ஆலோசனைகளை எப்படி வழங்கமுடியும், அந்த நிபுணர்கள் சமூக அறிவியலை அறிந்திருக்கவில்லையெனில். சமூகக் கட்டமைப்புகள் மனித மனத்தை எப்படி நசுக்கும் என்று அறிந்திருப்பது தான் உளவியல் கல்வி.  

அவரவர் மனதில் இருக்கும் பாரபட்சம் தான் தன்னைப் பெரும் அளவில் பிரச்சினையின் மய்யமாக பார்க்கத் தூண்டுகிறது.

தன்னையே பார்க்கத்தூண்டுகிறது. தன் மனத்தையே உருப்பெருக்கிக் கொண்டு பார்க்கத்தூண்டுகிறது. இதுவே மன அழுத்தத்தின் ஊற்றாகிறது. தற்கொலைக்குச் செயல்படுத்துகிறது. பிறர் மீது காட்டும் பரிவும் அன்பும் தான் தன் மன அழுத்தத்தைக் களைய வழி. அதுவே நிவாரணம் என்பேன்.  

தாகூரின் பொன்மொழி ஒன்று உண்டு: ஒரு கல்லை கண்ணின் அருகே கொண்டு பார்த்தீர்கள் எனில், அந்தக் கல் தான் தனது துயர் எனில், அந்தக்கல்லே உங்கள் பார்வையை ஒட்டுமொத்தமாக மறைத்துவிடும். அந்தக் கல்லுக்கு அப்பால் இருக்கும் பூவுலகின் அழகிய சாத்தியங்கள் கண்களுக்குப் புலப்படாமலே போய்விடும்.  

நம் சமூகத்தின் முக்கியமான பிரச்சினையே, வறுமையில் உழல்வோரின் உயிரைத் துச்சமாகவும், அதிகாரத்தில் இருப்போரின் உயிரை மிகவும் மதிப்புடையதாகவும் கருதுவது தான். ஃபேஷனாகிப் போன மன அழுத்தம் என்ற சொல்லை எல்லோரும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய காலம் என்று நினைக்கிறேன். இவ்வாறான தருணங்கள் அடிக்கடி எழுந்தாலும் நம் தற்காலிகக் கொந்தளிப்பும் நிரந்தரமான அலட்சியமும் மன அழுத்தம் என்பதை விபரீதமான களமாக்குகிறது.  

தனக்கும் தன் நலத்துக்கும் தன் இருப்புக்கும் அவசியமில்லாத, மிகையான முக்கியத்துவத்தைக் கொடுத்தல் வேறு யாரையும் பாதிப்பதை விடத் தன்னைத்தானே தான் அதிகம் பாதிக்கும்.   

“மெண்டல் ஹெல்த்’, என்பது தன்னைத் தான் எப்படிப்பார்க்கிறோம், மற்றவரை எப்படிப் பார்க்கிறோம், தனக்கும் மற்றோருக்கும் இடையிலான சமவெளியில் சமத்துவத்தை எப்படிப் பேணுகிறோம் என்பவற்றால் உருவாகும் உற்சாகமானதொரு சிந்தனை வெளி. ஒரு சராசரி மனிதன் வாழ்வதற்கு அடிப்படையான, அவசியமான எல்லாமே இருந்துவிட்டால் மட்டுமே நல்ல மனநலன் உருவாகிவிடுவதில்லை. அதைத்தாண்டிய சமத்துவ உள்நோக்கங்களும், புரிதல்களுமே நம் மனவெளியைப் பூந்தோட்டமாக்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .